ஊர்மிளை..

ராமாயணத்தில் அதிகம் பேசப்படாத கதாநாயகி யார் என்றால், அது லட்சுமணரின் மனைவி ஊர்மிளை.
ஊர்மிளை..
Published on
Updated on
2 min read

ராமாயணத்தில் அதிகம் பேசப்படாத கதாநாயகி யார் என்றால், அது லட்சுமணரின் மனைவி ஊர்மிளை. ஏனெனில், ராமருடன் தனது கணவர் லட்சுமணர் வனத்துக்குச் சென்றவுடன் பதினான்கு ஆண்டுகள் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தவர். 'வால்மீகி, கம்பர் இருவருமே ஊர்மிளை எனும் கதாபாத்திரத்தை வெளிச்சத்துக்கு வராமலேயே செய்துவிட்டனர்' என்று கூடத் தோன்றுகிறது.

ஜனக மகாராஜாவின் தத்து மகள்தான் சீதை. உண்மையான மகள் ஊர்மிளை. ஜனகரின் தம்பி குஜய்த்வாஜாவின் மகள் மாண்டலி. இவர் பரதனை மணந்தவர். இன்னொருவர் ஸ்ருதகீர்த்தி, சத்ருகனை மணந்தவர். இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை. இதன்காரணமாகவே ஒரே வீட்டில் அக்கா தங்கையை திருமணம் செய்ய அந்தக் காலத்தில் மிகவும் தயங்கினர்.

வனப் பகுதியில் ராமரும், சீதையும் உறங்கும்போது, குடிலுக்கு வெளியே லட்சுமணர் உறங்காமல் காவல் காத்துகொண்டிருப்பார். அப்போது நித்திராதேவியோ லட்சுமணரை உறங்காவிடாமல் மிகவும் திணறுவாள். அவள் லட்சுமணரிடம் , 'இதோ பார். நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னைவிட்டு விலக வேண்டுமானால், நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்துகொள். உன்னைவிட்டு விடுகிறேன்' என்றாள்,.

உடனே லட்சுமணர், 'நீ என் மனைவி ஊர்மிளையுடன் சென்று என் தூக்கத்தையும் எடுத்துகொள்ளச் சொல். நிச்சயம் அவள் ஒப்புக் கொள்வார்' என்றார். நித்திராதேவியும் ஊர்மிளையிடம் விவரத்தைக் கூற அவளும் கணவரின் நிலையைப் புரிந்துகொண்டு, லட்சுமணரின் தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு அந்த 14 ஆண்டுகளின் பெரும் பகுதியை தூங்கியே கழித்தாள்.

அவள்அப்படி செய்ததன் காரணமாகவே லட்சுமணரால், ராவணன் மகன் இந்திரஜித்தை கண்ணுக்குள் புலப்படாமல் போர் புரிகின்ற அவனை கொல்ல முடிந்தது. அது எப்படியென்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமென்றால், ஒருவர் 14 ஆண்டுகள் தூங்காமல் விழித்திருக்க வேண்டும்' என்ற ஒரு நிபந்தனை இருந்தது. ஊர்மிளையின் உதவி என்பது மூதாதையர்களின்

கண்ணுக்குத் தெரியாத உதவியைப் போன்றது. அது வெளியுலகத்துக்குத் தெரியாமலேயே போய்விடும் தன்மையைக் கொண்டது. அதுமட்டுமல்ல, ராமருடன் வனப் பகுதிக்குச் செல்வதற்கு முன் ஊர்மிளையைப் பார்க்க வருகிறார் லட்சுமணர். அந்த நேரத்தில் அயோத்தியே சோகத்தில் மூழ்கி இருக்கும்போது, ஊர்மிளை தன்னை அலங்கரித்துகொண்டு அணிகலன்களை அணிந்து, பஞ்சணையில் ஒய்யாரமாக உட்கார்ந்து இருப்பதைக் கண்டு கடும் கோபம் கொள்கிறார் லட்சுமணர்.

அரச பதவிகளை ஆண்டு அனுபவிக்கவே லட்சுமணரை தான் மணந்ததாகவும், வனத்துக்குச் செல்லக் கூடாது எனவும் பிடிவாதம் பிடிக்கிறாள் ஊர்மிளை. வெறுப்பின் உச்சத்துக்குச் சென்றுவிட்ட லட்சுமணரோ ஊர்மிளையைக் கடுமையாகத் திட்டிவிட்டு, அவ்விடத்தைவிட்டு செல்கிறார் லட்சுமணர்.

இதனால் ஊர்மிளை அழுகிறாள். அதாவது, லட்சுமணர் தன்னை முழுக்க முழுக்க வெறுக்கவே இப்படியொரு நாடகத்தை நடத்தியிருக்கிறாள் ஊர்மிளை. ராமருக்கு செய்ய வேண்டிய சேவைகளில் எந்தவிதமான பங்கமும் வந்துவிட கூடாது என்ற உயர்ந்த எண்ணமே ஊர்மிளையின் மனதில் மேலோங்கி இருந்தது.

பதினான்கு ஆண்டுகள் கழித்து, ராமர் அயோத்திக்கு வந்தவுடன் லட்சுமணரின் ஊதாசீனப் போக்கைக் கண்ட சீதை தனது தங்கை ஊர்மிளையிடம் விசாரிக்கிறார். முதலில் அனைத்தையும் கூற மறுக்கிறாள். ஒருகட்டத்தில் கர்ப்பிணியான சீதையின் கண்ணீருக்கு இரண்டு உண்மையை விளக்குகிறார் ஊர்மிளை.

பிரமித்துப் போன சீதை, 'தன்னைப் போன்று ஆயிரம் பேர் வந்தாலும், ஊர்மிளைக்கு ஈடாகாது' என்று உருகிப் போகிறார். இந்த விஷயத்தை தன்னை நேரில் கொண்டு போய் வனத்தில் விட வந்த லட்சுமணரிடம் கூறுகிறாள். 'தன்னை ராமர் கைவிட்டதைப் போல், ஊர்மிளையை கைவிட்டுவிடாதே..' என்று லட்சுமணனிடம் கேட்கிறார் சீதை. ஊர்மிளையைக் காண விரைகிறார். அவளைக் கண்டவுடனே அவள் தன் மனைவி என்பதையும் மறந்து அவளது கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார். இறுக்கப் பிடிக்கப்பட்ட அவளது பாதங்கள் லட்சுமணரின் கண்ணீரால் நனைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com