அந்தப் பெண் பத்து வருடங்களாக தெருவோரம் வசிக்கிறார். கார் ஒன்று அங்கு வந்து நிற்க, அதிலிருந்து இறங்கியவர் சாலையில் நடந்து செல்பவர்களிடமும், தெருவில் குடியிருப்பவர்களிடமும் , 'என் வீட்டை கூட்டி சுத்தம் செய்து கொடுத்தால் மூன்று டாலர் கொடுக்கிறேன்'' என்கிறார்.
யாரும் அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கடைசியில் தெருவில் குவிக்கப்பட்டிருக்கும் பழைய சாமான்களுக்குப் பின்னாலிருந்து ஒரு நீக்ரோ பெண் எழுந்துவந்து, 'நான் உங்கள் வீட்டைக் கூட்டிப் பெறுக்குகிறேன்'' என்று சொல்ல, அந்தப் பெண்ணை, காரில் வந்தவர் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். வீட்டை சுத்தம் செய்துவிட்டு பெண் வெளியே வரும் வரை அவர் வெளியே நின்றார்.
'சார்... வீட்டை சுத்தம் செய்துவிட்டேன்..''
'பரவாயில்லையே ...பார்த்து பார்த்து சுத்தம் செய்திருக்கிறீர்கள்...பிடிங்க மூணு டாலர்..''
'ரொம்ப நன்றி சார்...''
'ஒரு நிமிஷம்...இந்தாங்க.. இதையும் வாங்கிக்குங்க'' என்ற அந்த மனிதர், ஐந்து ஆயிரம் டாலர்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். பெண்ணுக்கோ அதிர்ச்சி. ஐயாயிரம் டாலரை அந்தப் பெண் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது.
'சார்... கேலி பண்றீங்களா... இல்லை என்னை டெஸ்ட் பண்றீங்களா..''
'இல்லம்மா ... உங்களுக்குத்தான்... வாங்கிக்கிங்க...''
அந்தப் பெண்ணின் கையில் அவர் பணத்தைத் திணிக்க, அந்தப் பெண் அழத் தொடங்கினாள். பிறகு தன்னை சாவதானப்படுத்திக் கொண்டு, 'சார்... ரொம்ப நன்றி... உங்களை மறக்க மாட்டேன்'' என்று நிலைப்படியை விட்டு இறங்கினாள்.
'கொஞ்சம் இருங்கம்மா...'' என்ற அவர் தனது சட்டைப் பையில் கையைவிட்டு ஒரு சாவியை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார்.
'இது என்ன சாவி... ஏன் என்னிடம் தருகிறீர்கள்?''
'இது இந்த வீட்டின் சாவி..''
'ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்..?''
'ஏன்னா, இந்த நிமிடம் முதல் இது உங்க வீடு..''
'சார்... இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது... உங்க தாராள மனதுக்கும் ஒரு எல்லை வேண்டாமா? இது மிக, மிக அதிகம்..''
'இது ஜோக் இல்லை. நான் உண்மையை சொல்றேன். வெளியே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆவணங்களுடன் காத்திருக்கிறார்கள்'' என்றவாறே அவர்களை உள்ளே வருமாறு அழைத்தார். அந்தப் பெண் மகிழ்ச்சியில் உறைந்து போய் நின்றார்.
ஆவணங்கள் மேஜையில் வைத்து அந்தப் பெண்ணின் பெயரை எழுதி கையொப்பம் போடச் சொன்னார்கள். அந்தப் பெண் கண்ணீர் வடிய, வடிய கையொப்பம் இடுகிறார். பெண்ணை அழைத்து வந்தவர், 'இனி இந்த வீடு உங்களுக்குச் சொந்தம். நல்லபடியாகப் பராமரித்துகொள்ளுங்கள்'' என்றவாறே ஆவண அதிகாரிகளுடன் கிளம்பினார்.
அந்தக் கொடையாளர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஐசயா கார்சா. சமூக ஆர்வலர், செல்வாக்குமிக்கவர், பாடகர், டிசைனர் என்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர். சமூக ஊடகங்களில் இயங்கும் ஐசயா கார்சாவை சுமார் 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ரிஹானா, கார்டி பி, பீட் டேவிட்சன் போன்ற பிரபலங்கள் அணியும் பல நகைகளை ஐசயா கார்சா வடிவமைத்துள்ளார்.
வாஷிங்டனின் யாகிமாவைச் சேர்ந்த ஐசயா கார்சாவும் அவரது குடும்பத்தினரும் வறுமையில் தத்தளித்தனர். சொந்தமாக வீடு இல்லை. பிழைப்புக்காகப் போதைப்பொருள் விற்பனையில் இறங்கி, பின்னர் ஐசயா திருந்தினார். ஐசயாவின் குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸூக்கு குடிபெயர்ந்தது. அவர் பல பிரச்னைகளை எதிர்கொண்டு காரில் வாழ வேண்டிவந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற போதுமான அளவு பணம் சேமிக்கவே குடும்பம் தொடர்ந்து சிறிய வேலைகளைச் செய்தது. குடியிருப்பில் குடியேறியதும் , அவ்வப்போது மணிக் கணக்கிற்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தனர். ஒருநாள் அதிர்ஷ்டம் கண்ணைத் திறந்தது.
ஐசயா கார்சா வடிவமைத்த நகைகள் பிரெஞ்சு பத்திரிகை அட்டைப்படத்தில் வெளியாக, ஐசயா வாழ்க்கையில் முன்னேறினார். வந்த வருமானத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவத் தொடங்கினர். ஐசயா வீடு ஒன்றை கொடை கொடுத்த காணொளி வைரலானதுடன், 'கொடுப்பதன் மூலம் ஏழையானவர்கள் யாரும் இல்லை. உங்க மனசு ... அதுதான் மனசு பெருசு... உலகம் உங்களால் இன்னும் அழகாகியிருக்கிறது '' என்று வாழ்த்துகள் குவிந்தபடி உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.