அன்னை இல்லத்தில் ஜோதிபாசு...

அன்றைய தினம் சென்னை போக் ரோடு சிவப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அன்னை இல்லத்தில் ஜோதிபாசு.
அன்னை இல்லத்தில் ஜோதிபாசு.
Published on
Updated on
2 min read

அன்றைய தினம் சென்னை போக் ரோடு சிவப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. போக் ரோட்டில் தோழர் ஜீவாவின் பெயரில் நிறுவப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு தனது கட்சியினருடன் வருகிறார். அவர் செல்லும் வழியில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் உள்ளது.

அன்னை இல்லத்தில் சிவாஜி கணேசன் இருந்தால், வீட்டு வாசலில் எப்போதுமே ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருப்பார்கள். வீட்டைத் தாண்டி போகும்போது கவனித்த ஜோதிபாசு, 'இங்கே என்ன கூட்டம்' என்று கேட்கிறார்.

'இதுதான் சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லம்' என்று உடனிருப்பவர் கூறுகிறார். உடனே காரை நிறுத்தச் சொல்லுகிறார். கார் நிறுத்தப்பட்டதும் ஜோதிபாசு, 'இதுதான் சிவாஜி கணேசன் வீடா? அவர் இப்போது இருப்பாரா? அவரை நான் பார்க்கலாமா?' என்று கேட்கிறார்.

பின்னால் வந்த காவல் துறையினர் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு முதல்வரின் காரை சூழ்ந்தனர். ஜோதிபாசுவோ, 'சிவாஜி கணேசன் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டு சொல்லுங்கள். இருந்தால் அவரைப் பார்த்துவிட்டு போகலாம்..' என்கிறார்.

உடனே சில கட்சிக்காரர்கள் சென்று வீட்டு வாசலில் உள்ள காவலாளிடம் சென்று, 'அண்ணன் வீட்டில் இருக்கிறாரா?' என்றனர். 'வந்திருப்பது யார்?' என்று காவலாளி கேட்க, 'வந்திருப்பது மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு. அவர் அண்ணனைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்' என்றார்.

'அண்ணன் வீட்டில்தான் இருக்கிறார் இருங்கள். நான் தகவல் சொல்கிறேன்' என்று காவலாளி சொல்லிவிட்டு, வீட்டினுள் தகவல் அளிக்கிறார். தகவலைக் கேட்டவுடன் சிவாஜி கணேசனும், 'அவர்களை உள்ளே வரச் சொல்?' என்கிறார்.

முதல்வருடன் வந்த காவல் உயர் அதிகாரியோ, 'ஐயா எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எப்படி?' என்கிறார்.

'ஒன்றும் கவலை வேண்டாம். நான் பார்த்துகொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு, முதல்வருக்கு உரிய 'புரோட்டோகால்' விதிகளையும் மீறி ஜோதிபாசு தனது காரைவிட்டு கீழே இறங்கி கேட்டில் இருந்து வீட்டுக்கு நடந்தே செல்கிறார். பின்னாலே அவர் உடன் வந்தவர்களும், பாதுகாப்புக்காக வந்த போலீஸாரும் செல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாஜி கணேசனும் வீட்டுக்குள் இருந்து, பதறியடித்து ஓடிவந்து, ஜோதிபாசுவை அன்போடு வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். இருவரும் பல விஷயங்கள் பற்றி பேசுகிறார்கள்.

'உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. நான் இங்கே கட்சி அலுவலகம் திறப்பதற்காக வந்துள்ளேன்' என்று ஜோதிபாசு சொல்லிக் கொண்டிருக்கும்போதே உடன் வந்த கட்சிக்காரர் ஜோதிபாசுவின் காதில் ஏதோ சொல்கிறார். உடனே அவர், 'அப்படியா' என்றார்.

பின்னர் சிவாஜி கணேசனிடம், 'நீங்களும் என்னோடு கட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்கு வர வேண்டும்' என்கிறார்.

சில நிமிடங்கள் யோசித்த சிவாஜி கணேசனும், 'நான் வருவதற்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. விழா முடிந்து திரும்பி செல்லும்போது நீங்கள் இங்கே வந்து உணவு அருந்தி செல்ல வேண்டும் என்பதே எனது அன்பு கட்டளை' என்கிறார். இதற்கு ஜோதிபாசுவும் சம்மதித்தார்.

இதற்கிடையில் ஜோதிபாசுவின் காதில் கட்சிக்காரர் சொன்ன விஷயம் என்னவென்றால், 'இந்தக் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஒரு கணிசமான தொகையை சிவாஜி கணேசன் கொடுத்திருக்கிறார். இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிவாஜி கணேசனும் சொல்லிவிட்டார்' என்பதுதான்.

அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, திரும்பி வரும்போது அன்னை இல்லத்துக்கு வருகை தந்து சிவாஜி கணேசன் விருந்தோம்பலை ஏற்று ஜோதிபாசுவும் மகிழ்ந்தார்.

இந்த நிகழ்வு நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவுக்கு சிவாஜி கணேசன் தலைமை தாங்குவார் என்று மத்திய அரசு அறிவித்தது. அப்போது முதல்வராக இருந்த ஜோதிபாசு, 'எங்கள் மண்ணில் நடைபெறும் விழாவிற்கு எங்கள் மண்ணைச் சேர்ந்த ஒருவர்தான் தலைமை ஏற்க வேண்டும்' என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து சிவாஜி கணேசன் விழாவில் பங்கேற்காமல் தானாகவே விலகிக் கொள்கிறார்.

இந்த நேரத்தில் 'ஜோதிபாசுவின் செயல் உங்களுக்கு வருத்தமாக இல்லையா?' என்று சிவாஜி கணேசனிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு சிவாஜி கணேசனோ, 'மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஒரு விழா. அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் தலைமையில் நடக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். அதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தவறும் இல்லை. ஆகவே இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடுங்கள்' என்று பெருந்தன்மையாகக் கூறினார்.

(எஸ்.ஏ.பி. மார்க்ஸ் முகநூல் பதிவில்..)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com