மலேசியாவின் பினாங்கு நகரத்தைச் சேர்ந்த அறுபத்து மூன்று வயதாகும் தமிழர் ரவிச்சந்திரன் மாணிக்கம், வாரத்தில் 6 நாள்கள் தினமும் 8 கி.மீ சைக்கிள் ஓட்டுகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் 56 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டுகிறார். அந்தப் பயிற்சிதான் ரவிச்சந்திரனை எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் வரை மூன்று முறை கால் பதிக்கச் செய்திருக்கிறது.
'கடந்த பத்தாண்டுகளில் ஆறுக்கும் மேற்பட்ட முக்கிய மலைச் சிகரங்களில் ஏறியிருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற பொறியாளர். 2015-இல் தான் மலையேற்றத்தைத் தொடங்கினேன். திபெத்தின் 'லோ மந்தாங்'கில் உள்ள முஸ்டாங் பாதையில் எனது மலைப் பயணம்தான் எனது முதல் மலை ஏற்றம். முஸ்டாங் கடல் மட்டத்திலிருந்து 3,840 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
அடுத்த முறை 7,126 மீ. உயரத்தில் இருக்கும் ஹிம்லுங் ஹிமாலின் உச்சியை அடைந்தபோது கலப்பட நீரைக் குடித்ததால் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளானது. இந்த மலை ஏற்றங்களை எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் செய்து முடித்தேன்.
எவரெஸ்ட்டின் அடிவாரத்துக்கு மூன்று முறை இந்த வயதில் சென்று வந்ததே பெரிய சாதனைதான். மலையேறுதல்களில் ஆபத்து இருக்கிறது. எவரெஸ்ட் அடிவார முகாமில் இருக்கும் ஓய்வு இல்லங்களில் சுத்தமான தண்ணீர் வசதி உண்டு. இந்த வசதிகள் நேபாளம், திபெத் பகுதி மலைச் சிகரங்களில் இல்லை.
பனி மூடிய மலைகளில் மைனஸ் 20 டிகிரி உதற வைக்கும். தீவிர ஜில் இரவில் தூங்கும்போது, 'இது தேவையா என்று நினைக்கவைக்கும். ஆனால் வீடு திரும்பியவுடன், மலை ஏற வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும்எனது அடுத்த லட்சியம் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான்' என்கிறார் ரவிச்சந்திரன் மாணிக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.