புள்ளிகள்

கணித ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களை ஒரு மாணவர் மட்டுமே சரியாகச் செய்து வந்திருந்தார்.
புள்ளிகள்
Published on
Updated on
3 min read

கணித ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களை ஒரு மாணவர் மட்டுமே சரியாகச் செய்து வந்திருந்தார். அந்த மாணவரை அழைத்த ஆசிரியர், 'அனைத்துக் கணக்குகளையும் சரியாகச் செய்து வந்திருக்கும் உனக்கு ஒரு பேனாவை பரிசாகத் தருகிறேன்' என்றார். மறுநிமிடமே அந்த மாணவன் அழ ஆரம்பித்துவிட்டார்.

காரணம் புரியாத ஆசிரியர், 'நீ தான் அனைத்து வீட்டுப் பாடங்களையும் சரியாகச் செய்து வந்திருக்கிறாயே.. அப்புறம் ஏன் அழுகிறாய்?' என்றார். 'ஐயா அதில் ஒரு கணக்கை என் நண்பரின் உதவியுடன்தான் போட்டேன். அதனால் இந்தப் பரிசுக்கு நான் தகுதி இல்லாதவன்' என மாணவர் கூறினார்.

ஆசிரியரோ, 'இந்தப் பரிசு உனக்குதான். நீ உண்மை பேசியதற்காக?' என்று கூறி பேனாவை அளித்தார். அந்த மாணவன் மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே.

பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.

வள்ளலார் தனது இளம்வயதில் காதுகளில் கடுக்கண் போட்டிருப்பார். ஒருநாள் ஒரு சத்திரத்தில் அவர் தங்கியபோது, கூட்டத்தோடு கூட்டமாக ஒருக்களித்து உறங்கினார். நடுஇரவில் ஒரு திருடன், வள்ளலாரின் கடுக்கணை மெதுவாகக் கழற்றினான். கழற்றும்வரை பொறுமையாக இருந்த வள்ளலார், இன்னொரு பக்கம் ஒருக்களித்துப் படுக்கத் திருடனுக்கும் சந்தோஷம்.

இன்னொரு கடுக்கணையும் கழற்றினான். எழுந்து உட்கார்ந்த வள்ளலார், 'அப்பா... இதைக் கொண்டு போய் நீ விற்கின்ற இடத்தில் திருடினாய் என்று தெரிந்தால், வாங்க மாட்டார்கள். அப்படி வாங்கினாலும் குறைவான தொகையைக் கொடுப்பார்கள். ஆகையால் இதை விற்கின்ற இடத்தில் என் பெயரைச் சொல். நான் இனாமாகக் கொடுத்தேன் என்று சொல். அவர்களும் வாங்கிக் கொள்வார்கள். உனக்கும் அதிகத் தொகை கிடைக்கும்.அதோடு, திருடுவதை இதோடு விட்டுவிடு. உழைத்துப் பிழைக்க எத்தனையோ வழி இருக்கிறது. அதைப் பார்!' என்றார்.

அந்தத் திருடனோ, கடுக்கணை வள்ளலாரிடம் கொடுத்துவிட்டு, 'சுவாமி... இனிமேல் சத்தியமாகத் திருட மாட்டேன். உழைத்துப் பிழைக்கிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான்.

கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை வறுமையில் வாடுவதை அறிந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் எழுத்தாளரும் சின்ன அண்ணாமலை, பல பேரிடம் நிதி திரட்டி, ஒரு விழாவை நடத்தி பண முடிப்பை வழங்கினார். விழாவில் காமராஜர் பேசும்போது, 'இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து கவிஞருக்கு பண முடிப்பு வழங்கிய, சின்ன அண்ணாமலையை இனிமேல் 'பெரிய அண்ணாமலை' என்று நாம் எல்லோரும் அழைக்க வேண்டும்' என்றார்.

அடுத்து ராஜாஜி பேசியபோது, 'இல்லை.. இல்லை.. சின்ன அண்ணாமலையை சின்ன அண்ணாமலை என்று அழைப்பதுதான் சரி. ஒருத்தருக்கு பாலசுப்பிரமணி என்று பெயர் வைக்கிறோம். வயதானாலும் அவரை அப்படியே அழைக்கிறோம். பெயரை மாற்றிக் கூப்பிடுவதில்லை. ஒரு பெண்ணுக்கு 'குழந்தை அம்மாள்' என்று பெயர் வைக்கிறோம். அந்தப் பெண்ணுக்கு தொன்னூறு வயதானாலும் குழந்தை அம்மாள் என்றே கூப்பிடுகிறோம். 'கிழவி அம்மாள்'என்றா கூப்பிடுகிறோம்' என்றார்.

இதைக் கேட்ட காமராஜர் சிரித்தவாறு பலமாகத் தலையாட்டி, 'இதிலே இவ்வளவு விஷயம் இருக்கிறதா, அப்போது சின்ன அண்ணாமலை என்றே கூப்பிடுவோம்' என்றார்.

சு.மணிவண்ணன், கீழ்க்கட்டளை.

ஒருமுறை எழுத்தாளர் ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் விபத்தில் சிக்கிக் கொண்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஹான லூலு தீவுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். அப்போது அவர் எழுதிய நாவல்தான் 'டிரஷர் ஐலண்ட்'.

-எஸ்.விஜயலட்சுமி, புதுக்கோட்டை.

மோலியர் என்ற பிரெஞ்சு நாடக ஆசிரியரிடம் ஒருவர், 'நம் நாடு உள்பட பல நாடுகளில் இளவரசனுக்கு பதினான்கு வயதாகும்போது முடிசூட்டி விடுகின்றனர். ஆனால், பதினெட்டு வயதுக்குப் பிறகே திருமணம் செய்துவைக்கின்றனர். அது ஏன்?' என்று கேட்டார். அதற்கு மோலியர், 'ஒரு நாட்டை ஆள்வதைவிட ஒரு பெண்ணை ஆள்வது கடினம் என்பதுதான் காரணம்' என்றார்.

முக்கிமலை நஞ்சன்

குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் இறந்தால் உயிரோடு உள்ள குழந்தைக்கு மூக்கு குத்தி, மூக்காண்டி என்று அழைப்பது தென்பாண்டி பகுதியில் வழக்கம். அப்படிதான் பூதப்பாண்டி பட்டன்பிள்ளை உமையம்மை தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டால், அடுத்து பிறந்த ஆண் குழந்தைக்கு 'மூக்கு குத்தி மூக்காண்டி' என்று அழைத்தனர்.

குலதெய்வமான சொரிமுத்தய்யன் நினைவாக, சொரிமுத்து என்று பெயரிட்டனர். வீட்டிலே மூக்காண்டி என்றும் வெளியிலே சொரிமுத்து என்றும் அழைக்கப்பட்டவர்தான் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் ப.ஜீவானந்தம்.

ஒருமுறை ஜீவாவை எழுத்தாளர் சுந்தரராமசாமி பார்த்தபோது, அவர் பழுப்பேறிப் போன ஒரு புத்தகத்தை படித்துகொண்டிருந்தார். ஜீவா இறப்பதற்கு சில நாள்கள் முன்பு கூட போலோநாத் தாஸ்குப்தா எழுதிய 'மெட்டீரியலிஸம் அண்ட் டயலக்டிஸம்' என்ற புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அதை படிக்காமலேயே இறந்துவிட்டார்.

புத்தரின் தாய் மாயாவதி. அவரைப் பெற்றெடுத்த முதல் வாரத்திலேயே இறந்துவிட்டார்.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை. இவரது இயற்பெயர் சிவத்தையா குமாரசுவாமி.

காதம்பரி என்ற பெண் ஓவியத்தை 1906ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வரையத் தொடங்கினார் ரவிவர்மா. சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உறவினர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியும் அதைக் கேட்காமல் ஓவியத்தை வரையத் தொடங்கினார் ரவிவர்மா. அவர் ஓவியத்தை வரைந்து முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.

எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசுவாமி. இவர் தனது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும், கிருஷ்ணசாமி என்பதை கண்ணன் என்று மாற்றியும் வல்லிக்கண்ணன் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

வாசீகக் கலாநிதி கி.வா.ஜ.வின் நகைச்சுவை சிலேடைகள் சுவையானவை. ஒருமுறை நண்பர் ஒருவர் வீட்டுக்கு இவர் விருந்துண்ண போனபோது, அந்த இல்லத்தரசி, 'பூரி பிடிக்குமா?' என்று கேட்டார். 'ஜகநாதருக்கு பூரி பிடிக்காதா என்ன?' என்று பதிலளித்து, கலகலப்பாகிவிட்டார். பூரி ஜெகநாதர் கோயில் பிரபலம்தானே!

நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.

எழுத்தாளர் கோவி.மணிசேகரன் முதலில் வேலை பார்த்தது கோவையில் உள்ள ஒரு திரையரங்கில். அவர் வாங்கிய ஊதியம் பதினைந்து ரூபாய். புதிய படம் வெளியாகும்போதும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாளிலும் ஐந்து ரூபாய் கூடுதலாக பேட்டா கொடுப்பார்களாம்.

பாரதி விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் நாகேஷ் பேசும்போது, அவரது பேச்சு புதிய கோணத்தில் இருந்தது. ' தேசப் பக்தி பாடல்கள், தெய்வப் பக்திப் பாடல்கள், கண்ணன் பாடல்கள், பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு என எத்தனையோ பாடல்களை பாரதியார் பாடினார். ஆனால், அவர் தாலாட்டு பாடலை மட்டும் பாடவில்லை. இயல்பாகவே நம் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை தாலாட்டி மேலும் தூங்க வைக்க வேண்டாம் என்றே அவர் பாடவில்லை' என்று நாகேஷ் பேசப் பேச, கூட்டத்தினர் கைதட்டியவாறு இருந்தனர்.

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் ரத்னவேல் சுப்பிரமணியத்துக்கு அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு என்று தகவல். மிக விரைவாகச் சென்று முதல்வரை பரிசோதிக்க ஆரம்பித்தார்.

அப்போது முதல்வரின் உதவியாளர் ஒரு ஒப்பந்தத்தை அளித்து, 'இதைப் படித்துப் பார்த்துவிட்டு உங்கள் பணியை தொடருங்கள்' என்றார். அதில், 'மருத்துவரே... எனக்கு சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ எந்த சூழ்நிலையிலும் என்னிடம் உதவி கேட்டு வரக் கூடாது. வர மாட்டேன் என்று ஒப்பு கொண்டதற்கு அடையாளமாக இங்கே கையெழுத்திடவும்' என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மருத்துவரும் கையெழுத்திட்டு, சிகிச்சையைத் தொடர்ந்தார்.

சிற்பி ஹென்றிமூர் என்பவர்தான் மனிதனின் முழு உருவச் சிலையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இலியட், ஒடிஸி போன்ற காவியங்களை இயற்றி பெரும் புகழ் பெற்ற கவிஞர் ஹோமர் இயற்கையிலேயே பிறவிக்குருடர்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com