மயிலாடுதுறையை நோக்கி மொத்தம் எட்டு பேர் கிளம்பினோம். என் மனைவியின் தங்கை, அவள் பையன், மனைவி, ஒரு வயதாகிற அவன் குழந்தை, அவனுடைய மாமனார், மாமியார். இவர்களுடன் பெங்களூரில் இருக்கும் மனைவியின் அக்கா.
'ரயிலில் ஷ்யாம் குழந்தை கலாட்டா செய்யப் போறது' என்று நினைத்தேன். அது சமர்த்தாக இருந்தது. குழந்தையைப் போய் கொஞ்சினேன். என்னைப் பார்த்து பெரிதாக அழ ஆரம்பித்து விட்டது. அழுகையை நிறுத்த பெரும்பாடாக இருந்தது. நான் பேசாமல் அந்தக் குழந்தையைத் தூரத்திலேயே ரசித்திருக்கலாம். எல்லோரும் பரத் அபார்ட்மென்ட்ஸ் நோக்கித் தான் போனோம். லால் பகதூர் நகரில் இருக்கும் அந்த அபார்ட்மென்ட். அத்தனைப் பேரையும் தாங்கக் கூடிய வலிமை படைத்தது.
ஏற்கெனவே பவித்ரா மெஸ்ஸுக்கு போய் வேண்டிய சாப்பாடு பொட்டலங்களை வாங்கிக் கொண்டேன். நான் இங்கு அலுவலகத்தில் பணிபுரிந்தபோது (தனியாகத்தான் இருந்தேன். மனைவி என்னுடன் வந்து இருக்கவில்லை) பவித்ரா மெஸ்ஸில்தான் சாப்பிடுவேன்.
எனக்கு பத்மநாபனைப் பார்க்கும் முக்கிய நோக்கமும் இருந்தது. எங்கள் குலதெய்வக் கோயில் மயிலாடுதுறை பக்கத்தில் இருக்கும் அசிக்காடில் இருக்கிறது. சில குடும்பங்கள் சேர்ந்து அங்குள்ள குலதெய்வக் கோயில்களைப் பராமரிக்க அர்ச்சகரை ஏற்பாடு செய்திருக்கிறோம். 75 வயது நிரம்பிய கோபாலன்தான் அந்த அர்ச்சகர். அசிக்காடு, மறையூர் போன்ற கிராமக் கோயில்களை அவர் பார்த்து வருகிறார்.
நான் மயிலாடுதுறைக்குப் போனால் அசிக்காடு போகாமல் இருக்க மாட்டேன். நாங்கள் எல்லோரும் சேர்ந்து கோபாலனுக்கு மாதம் வருமானம் வருகிற மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறோம். அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை எங்கள் குடும்பங்கள் வருடத்துக்கு ஒருமுறை வசூல் செய்து கோபாலனுக்கு மாதம் ஒருமுறை சம்பளமாகக் கொடுக்கிறோம்.
'அசிக்காடிலேயே ஒரு இடம் வாங்கலாம்' என்று நான் நினைத்தேன். அப்படி ஒரு வீடும் கிடைத்தது. எனக்கோ தயக்கமாக இருந்தது. வாங்கவில்லை. நான் அப்போது மயிலாடுதுறை கிளை அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். 'ஏன் கிராமத்தில் வாங்குவதற்குப் பதிலாக மயிலாடுதுறையில் வாங்கலாம்' என்று தோன்றியது.
எங்கள் பூர்விகக் கிராமம் அசிக்காடு. அப்பா, பெரியப்பாக்களும் இங்குதான் படித்தார்கள். வளர்ந்தார்கள். அவர்கள் எல்லாம் இருந்தபோது, இன்னும் மோசமாக இருக்கும் இந்தக் கிராமம். எந்த வசதியும் இருக்காது. அப்போது கிராமத்தில் பஸ் ஓடவில்லை.
என் இரண்டாவது பெரியப்பாவுக்கு ஏகப்பட்ட பெண் குழந்தைகள். முதல் பெண்ணின் திருமணத்தை அசிக்காட்டில்தான் வைத்துகொண்டார். அங்கேயே வசிக்கும் முதல் பெரியப்பாதான் இந்தக் கல்யாணத்தை நடத்தினார்.
என் முதல் பெரியப்பாவுக்கு ஒரே பையன். தாமதமாகப் பிறந்தவன். அவன் ஊரில் உள்ள எல்லாவற்றையும் ஒட்ட விற்று விட்டு மயிலாடுதுறைக்கு வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டான். எங்கள் குடும்பத்துக்கும், இரண்டாவது பெரியப்பா குடும்பத்துக்கும் பூர்விகச் சொத்திலிருந்து ஒன்றும் கொடுக்கவில்லை. எங்கள் இருவர் குடும்பங்களும் இதை கண்டுகொள்ளவில்லை. அவன் செய்தது முதல் பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும் வருத்தம். அவர் பார்த்த கிராமத்தைவிட்டு டவுனுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை வாட்டியது.
மயிலாடுதுறைக்கு மாற்றலாகி வந்தபோதுதான், 'எனக்கு இங்கே இருந்தால் என்ன?' என்று தோன்றியது. அப்போது முதலாவது பெரியப்பாவும் பெரியம்மாவும் உயிரோடில்லை. ஆனால் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அதில் விருப்பமில்லை. இங்கே இருந்தபோது என் பையன் பெயரில் ஒரு அடுக்ககம் வாங்கி விட்டேன். அதுதான் பரத் அபார்ட்மென்ட். அது எவ்வளவு தப்பு என்று இப்போதுதான் உணருகிறேன். இங்கு மருத்துவ வசதி இல்லை. உங்களுக்கு ' ஹார்ட் அட்டாக்' வந்தால் கவனிக்க மருத்துவர்கள் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்து என் கண்முன்னாலேயே ஒருவர் இறந்துபோனதால் சொல்கிறேன்.
'இந்த முறை வீரனுக்குக் கொடுக்க வேண்டிய வருடாந்திர பணத்தைப் பத்மநாபனை பார்த்துகொடுத்து விடலாம்' என்று நினைத்தேன்.
பத்மநாபன் எங்கள் தாயார்திக்காரர். பில்டர். மயிலாடுதுறையிலேயே வசிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரைப் பார்த்துகொடுப்பதுதான் வழக்கம்.
என் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் கோயில்களுக்குச் சுற்றத் தொடங்கி விட்டார்கள். நான் வரவில்லை. 'இந்த வீட்டில் இருக்க வேண்டும்' என்று கூறிவிட்டேன்.
நான் மயிலாடுதுறையில் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது தான் இந்த பரத் அபார்ட்மென்டில் ஒரு அடுக்ககம் வாங்கினேன். கிட்டத்தட்ட 5 வருடம் மேலாகிவிட்டது. நான் அடுக்ககத்தை வாடகைக்கு விடவில்லை. என் புதல்வனோ, அமெரிக்காவில் பணிபுரிகிறான். நாங்கள் எப்பவாவது வந்தால் தங்க வசதியாக இருக்கும்.
நான் மாலை 4 மணிக்கு வீரன் கோயிலுக்குப் போக நினைத்தேன். அதற்கு முன் பத்மநாபனைப் பார்த்து வீரனுக்குச் செலுத்த வேண்டிய தொகையை நேரிடையாகவே கட்டி விடலாம் என்று நினைத்தேன்.
பத்மநாபன் அலுவலகத்துக்குச் சென்றேன். 'அவர் இல்லை' என்றும் 'சென்னை சென்றிருக்கிறார்' என்றும் அவருடைய அலுவலகத்தில் உள்ள திருமூர்த்தி கூறினார்.
திருமூர்த்தியை எனக்குத் தெரியும். சமீபத்தில் நடைபெற்ற கிராமக் கோயில்களில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் நெருக்கமாகவே தெரியும். அவர் என்னவோ என்னைத் தெரியாமல் இருந்தார்.
''என்னைத் தெரியுமா?'' என்று திருமூர்த்தியிடம் கேட்டேன். உண்மையில் இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது.
அவர் உடனே, ''ரமணனா?'' என்று பதில் சொன்னார்.
''இல்லை. என் பெயர் தெரியவில்லையே உங்களுக்கு..ரமணன் என் சகோதரனின் பெயர்.. அவன் நேரிடையாக வந்து பணம் கொடுக்க மாட்டானே.''
''மடிப்பாக்கத்தில் இருக்கிறீர்களா?''
''அதுவுமில்லை. நான் மாம்பலத்தில் வசிப்பவன்'' என்று கூறி, நான் வீரனுக்கு மொத்தமாகத் தர வேண்டிய தொகையை அவரிடம் நீட்டினேன்.
அவர் வாங்கி எண்ணிப் பார்த்து, ''சரியாய் இருக்கு'' என்றார்.
''சரி ரசீது கொடுங்கள். என் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்'' என்றேன்.
''உங்கள் பெயரைக் குறித்துகொள்கிறேன். ஆனால் ரசீது கொடுக்க மாட்டோம்'' என்றார்.
''ஏன்''
''அது வழக்கமில்லை. நாங்கள் இந்தப் பணத்தை வாங்கி அப்படியே வங்கிக் கணக்கில் சேர்த்து விடுவோம்.''
என்ன தோன்றியதோ எனக்கு. ''அப்படியென்றால் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறிவிட்டேன்.
அவரும் திகைத்துப் போய் திருப்பிக் கொடுத்து விட்டார்.
''என் பெயரும் நான் கேட்கும்போது உங்களுக்குச் சொல்ல வரவில்லை. பணத்தை வாங்கியதற்கு ரசீது கொடுக்க மாட்டீர்கள் என்று கூறிவிட்டீர்கள்'' என்றேன் எரிச்சலுடன்.
''இது கோயில் பணம். எங்கள் கணக்கில் வரவு வைத்துகொள்ள முடியாது. மேலும் இது சர்வீஸுக்காக நாங்கள் செய்து வருகிறோம்.''
''அப்ப ரசீது கொடுத்தால் என்ன வந்தது. ஒரு தாளில் எழுதிக் கொடுக்கலாம் அல்லவா?''
''அதெல்லாம் முடியாது. நீங்கள் கொடுத்தால் கொடுங்கள். கொடுக்காவிட்டால் போங்கள்'' என்றார் திருமூர்த்தி.
''நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள்.. ஒரு நல்ல காரியத்துக்காகப் பணத்தை வசூல் செய்கிறீர்கள்.''
''நீங்கள் நம்பவில்லை எங்களை. உங்கள் பணம் வேண்டாம்.''
கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். 'அவரிடம் நம்பி பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகலாம்' என்று தோன்றியது.
திருமூர்த்தியைப் பார்த்து, ''நீங்கள் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்..கொடுக்காமல் போக எனக்கு விருப்பமில்லை. என் பெயரை மாத்திரம் நோட்டில் குறித்துகொள்ளுங்கள்'' என்றேன்.
இதற்கு அவர், ''உங்களிடமிருந்து பணம் வாங்க முடியாது. நீங்கள் பேசி என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள்'' என்றார்.
என்ன சொல்லியும் அவர் பணத்தை வாங்கிக் கொள்ளத் தயாராயில்லை. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
''நீங்கள் பணத்தை நேரிடையாக வங்கியில் கட்டி விடுங்கள்'' என்றார் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர்.
நான் மூர்த்தியிடம் போன் பண்ணிப் பேசினேன். அவர்தான் எங்களையெல்லாம் ஒன்று சேர்த்து பணம் வசூலித்து இந்த நல்ல காரியத்தைச் செய்துகொண்டு வருகிறார்.
''மூர்த்தி..திருமூர்த்தி என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்ள மாட்டேங்கறார்'' என்றேன். மூர்த்தி தாம்பரத்தில் இருக்கிறார். என் வயது தான்.
மூர்த்தி உடனே திருமூர்த்தியுடன் பேசினார். மூர்த்தி பேசியும் பணம் வாங்கிக் கொள்ள திருமூர்த்தி சம்மதிக்கவில்லை.
''பேசி என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள்'' என்றார்.
என்ன சொல்லியும் அவர் பணத்தை வாங்கிக் கொள்ளத் தயாராயில்லை. 'என்ன செய்வது' என்று எனக்குத் தெரியவில்லை.
''நீங்கள் பணத்தை நேரிடையாக வங்கியில் கட்டி விடுங்கள்'' என்றார் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர் மீண்டும், ''நான் மூர்த்தியிடம் போன் பண்ணிப் பேசினேன். இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாரே என்று திருமூர்த்தி மீது வெறுப்பாக இருந்தது. அங்கிருந்து வேறு வழி இல்லாமல் திரும்ப வேண்டியிருந்தது.
அன்று வீரன் கோயிலுக்கு மனக் கிலேசத்துடன் சென்றேன். குருக்கள் கோபாலனைப் பார்த்து திருமூர்த்தியைப் பற்றிச் சொன்னேன்.
''அவன் அப்படித்தான் மனுஷாள மதிக்கத் தெரியாதவன். திருப்பியும் கொடுக்கும்போது வாங்காமல் ஏன் இருக்கணும்.''
''என்னவென்றால் மூர்த்தி போன் செய்தும் பிரயோசனமில்லை.''
''மூர்த்திக்கு அவ்வளவுதான் மதிப்பு.. வேற வழியே இல்லை அவனுக்கும்..
இவங்க முன் நின்னு ஒவ்வொரு முறையும் சம்பளம் வாங்கத்துக்குள்ளே போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.''
நான் வீரன் கோயிலில் பூஜையை
முடித்துவிட்டு வீடு திரும்பினேன். இந்தச் சம்பவம் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.
'திருமூர்த்தி ஏன் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார்' என்று யோசித்துகொண்டிருந்தேன். என் மனம் சமாதானம் ஆகவில்லை.
''இது நியாயமில்லை. நானே திரும்பவும் பணம் கொடுக்க வந்தேன். வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார் திருமூர்த்தி'' என்று வாட்ஸ் அஃப் செய்தியை அனுப்பினேன் மூர்த்திக்கு.
மூர்த்தி அதற்குப் பதில் சொல்லவில்லை.
திருமூர்த்தியின் பாஸ் பத்மநாபனுக்கு போன் செய்தேன். அவர் போனில், ''நான் செய்தது நியாயமில்லை'' என்றார். ''அவர் எப்படி உங்களிடமிருந்து பணத்தை வாங்குவார்..நீங்கதான் அவரை நம்பவில்லையே.'' என்று மீண்டும் சொன்னார்.
''முதலில் நான் அப்படி இருந்ததற்கு அவர் என் பெயரைச் சரியாய் ஞாபகப்படுத்திச் சொல்லவில்லை. என் சகோதரன் பெயரைச் சொன்னார்..என் சகோதரனோ அவனுடைய பங்கை உங்கள் அலுவலகத்தில் வந்து கட்டியதில்லை..ரசீதுதான் கேட்டேன்..தர முடியாது என்றார்..பரவாயில்லை என்று விட்டு விட்டேன். நான் திரும்பவும் பணத்தைக் கொடுக்க வந்தால் ஏற்க முடியாது என்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்'' என்றேன்.
''நான்தான் அப்படிச் சொன்னேன். வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். நீங்கள் பணத்தைக் கணக்கில் கட்டுங்கள்.''
''அது எனக்குத் தெரியும்'' என்று போனை வைத்துவிட்டேன்.
இந்த நிகழ்ச்சியை என் மனைவியிடம் சொன்னேன்.
''பைத்தியம் மாதிரி அவரிடம் போய் என் நின்னீர்கள்'' என்றாள். ''இப்போதுதான் வசதி இருக்கிறதே..
கூகுள் பேயில் மூர்த்திக்கே அனுப்பியிருக்கலாம்'' என்று தொடர்ந்து சொன்னாள்.
எனக்கு அது தோன்றவில்லை. உண்மையிலே பத்மநாபனைப் பார்க்கலாம் என்று நினைத்தேன், 'சமீபத்தில் அவர் அப்பா இறந்து போய்விட்டாரே அந்தத் துக்கத்தையும் விசாரிக்கலாம்' என்று நினைத்தேன். அவர்கள் கோயில்களுக்கெல்லலாம் போய்விட்டு களைப்பாக இருந்தார்கள்.
''ஷ்யாம், நான் மதியம் சாப்பாட்டுக்குத் தடுமாறிப் போய்விட்டேன். இங்கிருந்து ஓட்டலுக்குப் போக ஆட்டோவே கிடைக்கலை. என்ன ஊர்'' என்றேன்.
''உங்க நண்பர் பிரபு இருக்காரே..அவரிடம் சொன்னால் டூ வீலரில் கொண்டு போய் விட்டு விடுவாரே'' என்றான் ஷ்யாம்.
''இந்த வீட்டை வாங்கும்போதுதான் அவன் எனக்கு நண்பன். சுத்தி சுத்தி வருவான். உதவி என்று போனால் போனை எடுக்க மாட்டான்'' என்றேன் வெறுப்புடன்.
பிரபுதான் இந்த அடுக்ககத்தை உருவாக்கினான். அவன் ஒரு என்ஜினீயர். முதன் முதலில் கட்டும்போது என்னைத் தொந்தரவு செய்து வாங்க வைத்துவிட்டான். அப்போதெல்லாம் நான் வள்ளலார் கோயில் தெருவில் ஒரு அறை எடுத்துத் தங்கி இருந்தேன்.
கடன் வாங்கி வீடு வாங்குவதற்குத் தயக்கமாக இருந்தபோது, அவன் தொந்தரவு செய்து வாங்க வைத்துவிட்டான். ஆனால் அவன் கட்டித் தந்த இடம் சிறப்பாக இருந்தது. என்ன சிட்டியிலிருந்து கொஞ்சம் தூரம். எந்த இடத்துக்குப் போக விரும்பினாலும் ஆட்டோக்காரர்களைத்தான் நம்ப வேண்டும். இன்னும் இந்த இடத்தில் ஒரு பஸ் வசதி இல்லை. உண்மையில் மயிலாடுதுறையில் ஆட்டோக்கள் அதிகம். நினைத்தபோது தான் கிடைக்காது.
எல்லோரையும் ஷ்யாம் அழைத்துகொண்டு கோயில், கோயிலாகச் சுற்றியபோது, நான் ஓட்டலுக்குப் போய் சாப்பிட தவியாய் தவித்தேன். பிரபு நினைத்திருந்தால், இரண்டு நிமிடங்களில் ஓட்டலில் கொண்டு நிறுத்தியிருக்கலாம். அவனுக்கு நான் போன் பண்ணும்போது எடுக்கவே இல்லை. இந்த அழகில்தான் திருமூர்த்தியைப் பார்த்து வந்த வெறுப்பு என்னை ஆட்கொண்டிருந்தது. கோயில் நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து எல்லோரும் வழக்கம்போல் சென்னைக்குத் திரும்பி விட்டோம்.
கொஞ்ச நாள்கள் கழித்து நான் கூகுள் பேயில் மூர்த்திக்குப் பணத்தை அனுப்பி விட்டேன். 'இவ்வளவு சுலபமாய் இது இருக்கும்போது, ஏன் போய் நின்றோம்' என்று தோன்றியது.
மூர்த்தியின் பெரிய பையனுக்குக் கல்யாணம். தாம்பரத்திலேயே ஒரு சத்திரத்தில் கல்யாணம். நானும் மனைவியும் சென்றோம். மூர்த்தி ஆர்வமாய் வரவேற்றார்.
என்னைப் பார்த்தவுடன், ''வீரனின் அருளால்தான் இந்தத் திருமணமே நடக்கிறது'' என்றார் மூர்த்தி. அவர் பையனுக்கு நாற்பது வயதாகிவிட்டது. அவர் பையனையும் பெண்ணையும் பார்த்தேன். வயதுக்கேற்ற முதிர்ச்சி தெரிந்தது.
மூர்த்திக்கு அவ்வளவுதூரம் வீரன் மீது அபிமானம். கிராமத்தில் ஒருமுறை மூர்த்தி டூ வீலரில் வந்து கொண்டிருந்தபோது வண்டி வழுக்கி விபத்துக்குள்ளானது. ஆனால் மூர்த்திக்கு ஒரு இடத்திலும் அடிபடவில்லை. வண்டிக்குத்தான் சேதம். அவர் விழுந்த இடத்தில் ஐந்து பனை மரங்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றைத்தான் முதலில் வீரனாக நினைத்து வணங்குவார்கள். ஏதோ விதத்தில் வீரன் தன்னை காப்பாற்றி விட்டதாக அசைக்க முடியாத நம்பிக்கை. 'அன்றே அங்கு வீரனுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும்' என்று தீர்மானித்தார். ஆனால் கோயில் கட்ட கட்ட கட்டவிடாமல் சரிந்து சரிந்து கோயில் விழுந்து கொண்டிருந்தது. ஆனால் விடாமல் கோயில் கட்டுவதைப் பற்றி ஒரு சிவாச்சாரியார் மூலம் குறி கேட்டபோது கட்ட உத்தரவிட்டதாம் வீரன்.அவர் கனவிலேயே வீரன் வந்து உத்தரவு இட்டதாகச் சொன்னார்கள்.
என்னைப் பார்த்து மூர்த்தி, ''நம்முடைய குலதெய்வம் வீரன்தான். வைத்தீஸ்வரன் கோயில் இல்லை'' என்று அடிக்கடி சொல்வார் . அசிக்காடு கிராமத்தில் செல்வாக்கு உள்ள பணக்காரர் மூர்த்தி. இன்று இவ்வளவு தூரம் நடக்கிறதென்றால் மூர்த்தியால் மட்டும்தான் நடக்கிறது.
பத்மநாபன் வந்திருந்தார். மூர்த்தியின் நெருங்கிய உறவினர்.
நான் அவரிடம் போய், ''தேவையில்லாமல் உங்கள் அலுவலகத்துக்கு வந்து உங்கள் திருமுர்த்தியைத் தொந்தரவு செய்து விட்டேன்'' என்றேன்.
''அதெல்லாம் அப்பவே முடிந்து விட்டது.''
''உங்கள் அலுவலகத்துக்கு வந்தபோது எனக்கு அவசரமாக பாத்ரூம் போக வேண்டியிருந்தது. கொல்லைப் பக்கம் போகச் சொன்னார் திருமூர்த்தி. இருட்டாக இருந்தது. அவர் என் கூட வரவில்லை.. குனிந்துப் போகவில்லை என்றதால் தலையில் இடித்துகொண்டேன்..அவர் கூட வந்து வழிகாட்டியிருக்கலாம்..அப்பத்தான் அவருக்கு என் மேல் கோபம்.''
''திருமூர்த்திக்கு உடம்பு சரியில்லை. அவருக்குத் தலையில் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் சில காலம் இருந்தார்.''
''ஐய்யய்யோ எனக்கு இதெல்லாம் தெரியாதே..அவர் வந்திருக்கிறாரா இந்தக் கல்யாணத்துக்கு...''
''வந்திருக்கிறார். அதோ அங்கே இருக்கிறார் பாருங்கள்'' என்று ஓர் இடத்தைக் காட்டினார்.
நான் திருமூர்த்தி இருக்கிற இடத்துக்குப் போனேன். அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை.
''என்னை ஞாபகமிருக்கா'' என்று கேட்டேன்.
திருமூர்த்தி திருதிருவென்று விழித்தார். பின்னர் மெதுவாக, ''ரமணனா?'' என்று கேட்டார்.
''இல்லே. தப்பா சொல்கிறீர்கள்.''
''மடிப்பாக்கம்தானே நீங்கள்...''
''நீங்க என்னை மறந்து விட்டீர்கள்'' என்றேன்.
திருமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.