திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பாத வளைவுக்கு எளிய தீர்வு

பாத வளைவு என்பது பிறந்த குழந்தையின் பாதம் (கணுக்காலுக்குக் கீழே) உள்நோக்கி அல்லது கீழ்நோக்கி முறுக்கப்பட்டு காணப்படும் நிலையாகும்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 8:29 pm IST

பாத வளைவு என்பது பிறந்த குழந்தையின் பாதம் (கணுக்காலுக்குக் கீழே) உள்நோக்கி அல்லது கீழ்நோக்கி முறுக்கப்பட்டு காணப்படும் நிலையாகும். பிறவிக் குறைபாடாகவுள்ள இந்தப் பிரச்னைக்கு இதுவரை சரியான காரணம் கண்டறியப்படவில்லை. உலக அளவில் ஐந்நூறு குழந்தைகளுக்கு ஒரு குழந்தை பாத வளைவுடன் பிறக்கிறது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் பத்து நிமிடங்களுக்கு ஒரு குழந்தைக்கு பாத வளைவு பாதிப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் குழந்தைகளுக்குஅதிகமானோர் பிறவி பாத வளைவுடன் பிறக்கின்றனர். இந்தப் பாத வளைவுக்கு ஏற்கெனவே இருந்த அறுவைச் சிகிச்சை முறையில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது அறுவைச் சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் 'போன்செட்டி முறை' வெற்றிகரமாக உள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சை மூலம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடலியல் மருத்துவம், புனர்வாழ்வுத் துறைத் தலைவர் டி. திருமலைபாண்டியன் தெரிவித்தது:

'பிறவிக் குறைபாடான பாத வளைவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இதுதான் காரணம் என உறுதியாகச் சொல்ல முடியாது. குழந்தை பிறந்தவுடனோ, கருவில் இருக்கும்போதோ இந்தப் பாதிப்பு தெரிந்துவிடும். தாமதப்படுத்தாமல் விரைவாக சிகிச்சை அளித்தால், குழந்தைக்கு மற்றவர்களைப் போல இயல்பான கால் போன்று குணமாக்கிவிடலாம்.

இதற்கான சிகிச்சையில் முன்பெல்லாம் மாவுக் கட்டு போடப்படும். சில நேரம் அறுவைச் கிகிச்சை செய்ய நேரிடும். அவ்வாறு செய்தாலும் நூறு சதவீதம் குணமாகுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஒழுங்கமைக்கப்படாத இந்தச் சிகிச்சைக்கு நீண்ட காலம் தேவைப்படும். இதனால், நிறையப் பேர் தொடர் சிகிச்சைக்கு வரமாட்டார்கள்.

போன்செட்டி சிகிச்சை முறை: 1995 - 96- ஆம் ஆண்டில் போன்செட்டி சிகிச்சை முறை பரவலானது. இதன் மூலம் எளிதாக நூறு சதவீதம் குணப்படுத்த முடிகிறது. மருத்துவக் கல்லூரி உடலியல் மருத்துவத் துறையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு வரும் பாத வளைவு குழந்தைகளுக்கு முதல் நாளிலேயே மாவுக் கட்டு போடத் தொடங்கிவிடுவோம். வாரம் ஒரு முறை என மொத்தம் 4 முதல் 6 முறை மாவுக் கட்டு போடப்படும். சில குழந்தைகளுக்கு 15 முதல் 20 மாவுக்கட்டு போடும்படியாக இருக்கும்.

பின்னர், 'அப்டக்சன் ஸ்பிளிண்ட்' என்கிற சிறப்புக் காலணி வழங்கப்படும். இதைக் குழந்தைகள் நடக்கும் வரை போட்டுவிடுவோம். பெரும்பாலும் 3 ஆண்டுகளில் முழுமையாகக் குணமாகிவிடும்.

அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்தால் போதும். மிகச் சில பேருக்கு மட்டும் தசைநார் வெட்டுச் சிகிச்சை (டீனாட்டமி) என்கிற சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.

குழந்தைகள் குணமாகி நடக்கும் வரைக்கும் சிறப்புக் காலணியைத் தொடர்ந்து அணிய வேண்டும். சில பேர் குழந்தை அழுகிறது என்பதால், இடையில் நிறுத்துவிடுகின்றனர். அதுபோலச் செய்தால், முழுமையாகக் குணப்படுத்த இயலாது. நடக்க ஆரம்பித்த பிறகு சில ஆண்டுகளுக்கு சிறப்புக் காலணியை இரவு நேரத்தில் அணிந்து வந்தால் நல்லது. ஆறு வயதுக்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால், முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். பெரியவர்களான பிறகு சிகிச்சை அளிக்க இயலாது.

தமிழ்நாட்டில் 27 மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்தச் சிகிச்சை அளித்தாலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குத்தான் நிறையப்பேர் வருகின்றனர். எந்த மாவட்டத்திலிருந்து வந்தாலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தப் பாத வளைவு பாதிப்புடன் வாரத்துக்கு 15 பேர் வரை வருகை தருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 3,000 பேரைக் குணப்படுத்தியுள்ளோம்.

தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் சிறப்புக் காலணிக்கு ரூ. 2,000 வரை செலவு செய்ய நேரிடும். மாவுக் கட்டு போடும்போது ஒவ்வொரு முறையும் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை செலவாகும். ஆனால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துமே இலவசமாகச் செய்யப்படுகிறது.

'க்யூர் இந்தியா' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலவசமாக காலணி வழங்கும் இந்தத் திட்டத்தை எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் மேத்யூ வர்கீஸ் செயல்படுத்தி வருகிறார். இந்தச் சிகிச்சைக்கு மருத்துவர் எம். தனகோபால், 'க்யூர் இந்தியா' திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். அஞ்சலி உள்ளிட்டோர் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் மருத்துவர் திருமலைபாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.