முந்நூற்று ஆறு ஆண்டுகாலச் சாதனையை முறியடித்து, 'உலகின் மிகக் குறைந்த வயதில் பேராசிரியர்' ஆகிப் பெருமை பெற்றுள்ளார் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த பதினெட்டு வயது இளைஞரும் இந்திய வம்சாவளியுமான நாதன் தாமஸ்.
அவர் வயதில் உள்ள இளைஞர்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்கும்போது, நாதன் தாமஸ் கல்லூரிப் பேராசிரியராக வகுப்புகள் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இன்னும் சில வாரங்களில் 19 வயது பூர்த்தி செய்யப் போகும் நாதன், 'உலகில் மிகக் குறைந்த வயது பேராசிரியர்' என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டார்.
நாதனின் தாய் மெர்லின் ராணி தாமஸ், கேரளத்தை பூர்விகமாகக் கொண்டவர். அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார். தந்தை பொறியாளர். அதனால், நாதன் சிறு வயதிலேயே கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கற்றலை சுவாரஸ்யமாக்கும் வகையில் கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள நாதனின் தாய் பெரிதும் உதவினார்.
பத்தாவது வயதில் 'இரட்டைச் சேர்க்கை' முறையில் பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் தொடங்கிய நாதன், 14-ஆவது வயதில் புளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 16-ஆவது வயதில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார். அப்போது, நாதனின் வயது 18.
நாதனின் திறமை, அவரை மீண்டும் அவர் படித்த மியாமி டேட் கல்லூரிக்கு அழைத்து வந்தது... இம்முறை ஒரு மாணவராக அல்லாமல் ஒரு பேராசிரியராக கல்லூரிக்குள் நுழைந்தார்.
மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் பாடத்தில் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்த நாதன், தன் வயதொத்த அல்லது மூத்த வயதுடைய மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார். 'கற்றுக் கொள்ளும் ஆர்வம்தான் வயதைவிட முக்கியமானது' என்று நாதன் நம்புகிறார்.
அறிவைப் பெறவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும்தான் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். வயது என்ற வரம்பைத் தாண்டி, நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை உயர்கல்வித் துறையில் கெளரவமான ஒரு ஸ்தானத்தைப் பெற்றுத்தரும் என்பது நாதன் விஷயத்தில் நிரூபணம் ஆகியுள்ளது.
ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் 1717-இல் 19 வயதில் கல்லூரிப் பேராசிரியராகி 'உலகில் மிகக் குறைந்த வயதில் பேராசிரியர்' என்ற பெருமையைப் பெற்றார். 306 ஆண்டுகளாக நீடித்த இந்தச் சாதனையை நாதன் 18 வயதில் கல்லூரிப் பேராசிரியராகி முறியடித்துள்ளார். 2008-இல் அலியா சபூர் என்ற பெண் 18 வயதிலேயே இளம் பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். ஆனால், நாதன் தாமஸ், அலியா சபூரைவிட 16 நாள்கள் இளையவர். இதனால், இருபாலரிலும் நாதன்தான் மிகக் குறைந்த வயதில் கல்லூரிப் பேராசிரியர் ஆனவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார்.
தாமஸ் 2023 ஆகஸ்ட் மாதம் மியாமி டேட் கல்லூரியில் 'பொறியாளர்களுக்கான சி நிரலாக்க மொழி' (C programming) என்ற பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். இப்பாடம் பொறியியல் மாணவர்களுக்கு 'சி' நிரலாக்கத்தின் அடிப்படைகள் மற்றும் கணினி வழி சிக்கல் தீர்க்கும் முறைகளை அறிமுகப்படுத்துகிறது.
பொறியியலைத் தாண்டி, நாதன் தொடர்ந்து கல்லூரியில் கற்பித்துக் கொண்டே, மியாமி பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் முனைவர் பட்டத்துக்காகவும் படித்து வருகிறார்.
இந்தப் படிப்பு 2028-இல் நிறைவு அடையுமாம். தனது பொறியியல் பின்னணியை சட்ட நிபுணத்துவத்துடன் இணைத்து, அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெற நாதன் விரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் விதிமீறல்: தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றும் கல்லூரிப் பேருந்துகளால் விபத்து அபாயம்

ஆட்டோ மீது கல்லூரிப் பேருந்து மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான்: 10,000 பேர் பங்கேற்பு!

வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: உயர் நீதிமன்றம் கருத்து
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


