
காதலால் கொடுமை - அனுபமா பரமேஷ்வரன்
மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் முறிவு தொடர்பாக இருக்கிறது என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணலில், காதலித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அவரின் பேட்டியில், 'அந்தப் பழைய உறவில் சுமார் இரண்டு ஆண்டுகள் நான் கடுமையான மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன். அந்தக் காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தேன். எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால், இரண்டு ஆண்டுகால வலியும் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களும் உள்ளன. முழுமையாகக் குணமடைந்த பிறகே அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று காத்திருந்தேன்.
இது தன்னைத்தானே கண்டறிந்து மீண்டு வந்த ஒரு பெண்ணின் பயணம். நான் காதலித்த நபர் ஒரு நேரம் ரெமோவாக அளவுகடந்த காதலை வழங்குவார். அடுத்த நாள் அந்நியனாக கொடூரமாக நடந்துகொள்வார். அதற்கு அடுத்த நாள் அம்பியாக மாறி, அப்பாவியாக மன்னிப்பு கேட்டு கெஞ்சுவார். நடிகை மடோனா செபாஸ்டியன் மன ரீதியான கொடுமைகள் குறித்துப் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்த பிறகே, நான் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இருந்தோம் என்பதை உணர்ந்து நடுங்கினேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சேரன் ஆதங்கம்!
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே படத்தின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி உருவாகியுள்ள 'ஒன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் சேரன், 'மருத்துவர் ராமதாஸ் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை முதலில் திரைப்படமாக எடுக்க முயன்றவர் தம்பி சங்ககிரி ராஜ்
குமார்தான். அவர் அதற்கான கதையையும் குறிப்புகளையும் தயாரித்து வைத்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் என்னை அணுகியபோது, 'ராஜ்குமாரே இந்தப் படத்தை இயக்கட்டும்... நான் கூட இருந்து ஆதரவு தருகிறேன்' என்றுதான் கூறினேன். ஏனெனில், ஒருவரது கனவை நான் தட்டிப்பறிக்க விரும்பவில்லை.
ஆனால், ராமதாஸ் ஐயாவின் அன்பையும் வேண்டுகோளையும் என்னால் தட்ட முடியாமல் போகவே, நான் அந்தப் படத்தை இயக்க ஒப்புக் கொண்டேன். ராஜ்குமாரிடமும் நிலைமையை விளக்கினேன். 1987-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் என்பதால், பல ஆய்வுகளை மேற்கொண்டோம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்த வகையில் எங்களின் உழைப்பு வீணானது மிகப் பெரிய வலியைத் தந்துள்ளது. சங்ககிரி ராஜ்குமார் 'ஒன்' என்ற படத்தில் அனைத்துத் துறைகளையும் தானே ஏற்று 3-4 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார். ஒரே ஆள் நடித்து, ஒளிப்பதிவு செய்து, எடிட் செய்து, லைட்டிங் பார்த்து, சவுண்ட் ரெக்கார்ட் செய்து படம் எடுப்பது அசாத்தியமான விஷயம். ' என்றார்.
சூர்யாவின் கணக்கு!
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் சக்சஸ் மீட் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சூர்யா பேசுகையில், 'வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர் வம்சி என இருவரும் தெலுங்கு மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். மமிதா கேரளாவில் இருந்து, ரவீனா மேடம் மகாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்தான். ஆனால், நீங்கள் அந்த எல்லைகள் அனைத்தையும் அழித்துவிட்டீர்கள். 'இது ஒரு நல்ல திரைப்படம். இது மனதுக்கு நெருக்கமான ஒரு உணர்வு' என்று கூறி, இந்த குடும்பக் கதையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்தக் கதையில் ரவீனா மேடம், ராதிகா மேடம், மமிதா எனப் பெண்களுக்கான கதாபாத்திரங்களை அவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். அதற்காகவும், இந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டாடுவதற்காகவும் திரையரங்குக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி' எனப் பகிர்ந்திருக்கிறார்.
பாராட்டும் மகேஷ்பாபு!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'டிசி'. நடிகை வாமிகா கபி, நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
டிசி திரைப்படம் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துவிட்டதாக அண்மையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படம் குறித்து தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன் எக்ஸ் பக்கத்தில், 'டிசி மிகவும் புதிய முயற்சி. மிகச்சிறந்த ஒரு திரைப்படம். படம் உண்மையிலேயே வேற லெவல் ஸ்டைலாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்துப் பார்த்தேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, படக்குழுவினரை டேக் செய்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






