விஜயகாந்த் - நான் சந்தித்த பிரபலங்கள் - 40

விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
விஜயகாந்த் - நான் சந்தித்த பிரபலங்கள் - 40
Updated on
2 min read

விஜயகாந்த் என்ற விஜயராஜ் 1952 ஆகஸ்ட் 25 -இல் அழகர்சாமிக்கும் ஆண்டாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து, ஒரு வயதிலேயே தாயை இழந்து, அருப்புக்கோட்டை அருகிலுள்ள இராமானுஜபுரத்திலிருந்து தந்தையாருடன் மதுரை மேலமாசி வீதிக்குக் குடிபெயர்ந்தார். சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வமில்லாமல் தந்தையின் அரிசி ஆலையைக் கவனிக்கத் தொடங்கினார்.

பின்னர் சென்னைக்கு வந்து தங்கி, கடும் முயற்சியில் ஏழை எளிய மக்களின் இதயத்தில் இடம் பிடித்த படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களில் 'ஊமை விழிகள்', 'பூந்தோட்டக்காவல்காரன்', 'புலன் விசாரணை', 'வானத்தைப் போல', 'சின்ன கவுண்டர்' ஆகியவை சிகரம் தொட்டவை.

இவர் நடித்த 'செந்தூரப்பூவே' படத்துக்கு 1988-இல் சிறந்த நடிகர் என்ற தமிழக அரசின் விருது கிடைத்தது. 2001-இல் கலைமாமணி விருதுடன், தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றார். தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

1990-இல் பிரேமலதாவை மணந்தார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்று இரு மகன்கள். இவர் பெயர் சொல்லப் பிறந்தார்கள்.

நடிகர் சங்கத் தலைவராகி நடிகர் சங்கக் கடனை அடைத்ததோடு, நலிந்த கலைஞர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தார். புரட்சிக் கலைஞரானார். அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி தேமுதிக நிறுவனத் தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

இவர் 1978-இல் நான் இயக்குநராகி, தயாரிப்பாளரான நிலையில், இவர் அப்பாவை நன்கு தெரிந்த என் மூத்த சகோதரியின் கணவர் கதிரேசனிடம் ஒரு சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு வந்து சென்னை எல்லையம்மன் காலனியில் என்னைச் சந்தித்தார். அந்த நேரம் நான் வேறு பட முயற்சியில் இருந்ததால் டைரக்டர் கே. விஜயனுக்கு போன் செய்து, இவரை அபிராமபுரத்துக்கு அனுப்பினேன்.

'தூரத்து இடி முழக்கம்' படத்தில் ஹீரோவாக நடித்தபோது நான் செய்ய முடியாத ஒரு நல்ல காரியத்தை உதவியாளராக இருந்த எம். ஏ. காஜா மதுரை சேனாஸ்பாய் உதவியுடன் 'இனிக்கும் இளமை' படத்தை எடுத்து அடையாளம் காட்டினார்.

இவர் ஆரம்ப காலங்களில் தங்கி இருந்த பாண்டிபஜார் ரோஹிணி லாட்ஜில் அவருடன் உயிருக்குயிராக இருந்த இப்ராஹிம் ராவுத்தரைச் சந்திப்பேன். அவர் சிரித்த முகத்துடன் என்னை அணைத்து 'அத்தா' என்பார்.

நான் இரண்டு, மூன்று படங்கள் எடுத்து இழப்புக்கு ஆளான நிலை தெரிந்து, என் வீட்டுக்கு ராவுத்தர் வந்து, அவர்கள் வாங்கிய அம்பாசிடர் காரை காட்டினார். விஜிக்கு இப்போது நல்ல மார்க்கெட்.

'ஆரம்பத்தில் நீங்கள் செய்த உதவிக்கு உங்களுக்குப் படம் நடித்துத் தர ஆசைப்படுகிறார்' என்று நல்ல எண்ணத்துடன் கூறினார்.

அன்று நான் விஜயகாந்த்தை வைத்துப் படம் தயாரித்து இருந்தால் இன்று நூறு படங்களை முடித்திருப்பேன். என் துரதிருஷ்டம், என் கண்களை மூடி கைகளைக் கட்டிப் போட்டு கண்ணாமூச்சி விளையாடி விட்டது.

என்னைப் பற்றி விஜயகாந்த் கல்கி, குங்குமத்தில் எழுதியதற்கு அவரை நடிகர் சங்கத்தில் சந்தித்து நன்றி கூறினேன். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கற்பனையைத் தகர்த்தெறிந்து புதுப் புது இயக்குநர்களை உருவாக்கினார்.

நம் தமிழ்நாட்டின் ஆளுமைகளான எம்.ஜி.ஆர். டிசம்பர் 24-இல், ஜெயலலிதா டிசம்பர் 5-இல் காலமானது போல் இவர் டிசம்பர் 28-இல் மருத்துவமனையில் காலமானார்.

இவர் புகழ் உடல் தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்று பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் அடக்கம் செய்யப்பட்டது.

பாரதப் பிரதமர் மோடி இவரைப் பற்றிப் புகழுரை எழுதினார். இந்தியத் தலைவர்கள் அஞ்சலி செய்தார்கள். இவர் மறைவுக்குப் பின் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷண் வழங்கப்பட்டது.

'கொடையுள்ளமே தன் கோயில்' என்று நினைத்த எம்.ஜி.ஆரைப் போல் இவரும் மனிதாபிமானமிக்கவராய் வாழ்ந்ததால் இவரை 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று கொண்டாடினார்கள். இவர் கருப்பு வைரச் சுரங்கமும் கூட என்பது கலை உலகின் அடையாளம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com