ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கபம், இருமல் பிரச்னை தீர வழி?

இரவின் பனிவாடைக்காற்று, பகலில் வெயில் ஆகியவற்றின் விளைவாக எனக்கு தலை, மார்பு, பூட்டுகளில் பளுவான உணர்ச்சி, பிடிப்பு, பசியின்மை, ஓக்காளம், நாக்கில் வெண்படலம்...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கபம், இருமல் பிரச்னை தீர வழி?
Updated on
2 min read

இரவின் பனிவாடைக்காற்று, பகலில் வெயில் ஆகியவற்றின் விளைவாக எனக்கு தலை, மார்பு, பூட்டுகளில் பளுவான உணர்ச்சி, பிடிப்பு, பசியின்மை, ஓக்காளம், நாக்கில் வெண்படலம், ருசியின்மை, சிறிய இனிப்புச் சுவை, மலம், சிறுநீரில் கொஞ்சம் வெண்மை, சோம்பல், இருமல், ஜலதோஷம், கபம், தும்மல் முதலியவை ஏற்பட்டு துன்புறுத்துகின்றன. இவற்றை எப்படிக் குணப்படுத்தலாம்?

கணபதி, மேட்டுப்பாளையம்.

இரவில் பனிக்காற்றினால் உறைந்து போன சளியானது, பகலில் வெயிலினால் சூடாகி தலை மற்றும் மார்புப் பகுதியில் உருகுவதால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகளானது ஏற்படுகிறது. இந்தக் கப (சளி) இளக்கத்தை வாந்தியை ஏற்படுத்தி நீக்கிவிடலாம். அதற்கு வசம்பு சூர்ணம் மூணு கிராம், கடுகு சூர்ணம் ஒன்றரை கிராம், அரிசித் திப்பிலி சூர்ணம் ஒன்றரை கிராம், இந்துப்பு சூர்ணம் மூன்று கிராம் ' இந்த மருந்து பொருள்களை ஒன்றாகக் கலந்து சூர்ணம் செய்து கொள்ளலாம்.

சுமார் நாலு டம்பளர் நல்ல வெந்நீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்பளர் வெந்நீரில் இந்த சூர்ணத்தைக் கலக்கி முதலில் குடிக்கவும். உடனே பாக்கி இருக்கும் சுடுநீரையும் பருகவும். உடனே வாந்தி வரும். வயிறு சுத்தமாகிவிடும். இந்த வாந்தி சிகிச்சையை காலையில் வெறும் வயிற்றில் செய்து கொள்ள வேண்டும். வாந்தியாகி ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு குளித்து, எளிதில் செரிக்கக்கூடிய உணவு உண்ணலாம்.

ஒரு தடவை வாந்தி செய்தாலே உடல் கலகலப்பாய், இளகிய கபம் வெளியேறிவிட்டதால், அதனால் ஏற்பட்ட உபாதைகளும் நீங்கிவிடும். சளி மிகுதியாக இருந்து மீதமுள்ள சளி தொடர்ந்து இருந்தால், 10 ' 12 நாள்கள் கழித்து மறுபடியும் ஒரு தரம் இதே போல வாந்தி செய்து கொள்ளலாம்.

தலையில் உருகி நிற்கும் சளியைப் போக்க 'நஸ்யம்' எனும் மூக்கினில் மருந்துவிட்டுச் சளியை வெளியேற்றும் சிகிச்சை உபயோகமானது. விற்பனையில் உள்ள அணு தைலத்தை காலை, இரவு உணவுக்குப் பிறகு 2 ' 4 சொட்டுகள் உறிஞ்சி, அது தொண்டைக்கு வந்ததும், காரித்துப்பிவிடலாம். உடல் இயற்கையாகவே பலவீனமான வேர்களால் வாந்தி ' நஸ்யம் போன்ற சுத்தம் செய்து கொள்ளும் சிகிச்சை செய்து கொள்ள முடியாது. அவர்களுக்கு உருகிய சளியை அடக்கி, குணப்படுத்தக்கூடிய 'சமனம்' எனும் சிகிச்சை முறையே நல்லது. அதற்கு '

பிராணாயாமம் காலை, மாலை மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் செய்தால் தலை, மார்புப் பகுதிகளைச் சார்ந்த உள்புறக் குழாய்களைச் சுத்தமாக்கி கபத்தை அணுக முடியாமல் செய்துவிடும் மற்றும் அனேக நன்மைகளும் உண்டாகச் செய்யும்.

உடற்பயிற்சி ' பலவித உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் உடல் வலுவுக்குத் தகுந்தபடி தினசரி காலை, மாலை செய்து வந்தால், கப உபாதை ஏற்படாது. உடல் பயிற்சியானது கபத்தையும் கொழுப்பையும் குறைப்பதில் மிக உபயோகம்.

மூலிகைப் பொடி ' ராஸ்னாதி சூர்ணம், கச்சோராதி சூர்ணம், ஏலாதி சூர்ணம் போன்றவற்றில் ஒன்றிரண்டை மருத்துவர் ஆலோசனைப்படி இஞ்சிச் சாறிலோ, வெற்றிலைச் சாறிலோ குழைத்துச் சூடாக்கி, நெற்றி முழுவதும் தேய்த்து விட்டு, ஊற வைப்பதால் சளி வறண்டு காய்ந்து போய்விடும். அதிலுள்ள நீர்ப்பசை வற்றி விடுவதால், வறண்ட சளியானது வெளியேறிவிடும்.

லேபனம் ' இளம் சூடான வெந்நீரில் குளித்த பிறகு அகில், குங்குமப்பூ, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், சந்தனம் இவைகளின் கலவையை உடலில் பூசிக்கொள்வதால், சளியின் உபாதைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

 பகல் தூக்கம் கபத்தை வளரச் செய்யும்.

உணவு ' பழைய அரிசி, கோதுமை, பார்லி, பச்சைக் கறிகாய்கள், பழங்கள், தேன் நல்லது. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை தவிர்ப்பது நலம்.

குடிநீர் ' இளம் சூடாய் சாப்பிடுதல் நலம். கோரைக்

கிழங்கு, சுக்கு, சித்தரத்தை, கொத்தமல்லி விதை, வேங்கை மரவைரக்கட்டை இவைகளைக் கொஞ்சம் சேர்த்துக் காய்ச்சிய நீர் பருகுவது மிக நல்லது.

மருந்துகள் ' அசுவ கந்தாதி சூர்ணம், தாளீஸாதி சூர்ணம், ஸிதோபலாதி சூர்ணம், மஹாலக்ஷ்மீ விலாஸ மாத்திரை, மாலிநீ வஸந்த மாத்திரை, பிப்பல்யாஸவம், தசமூலாரிஷ்டம், வாஸாகண்டகாரீ லேஹியம், அகஸ்திய ரஸாயனம், சியவனப்பிராசம் இவைகளில் ஒன்றிரண்டு மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வருவது நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com