வேற்றுமையில் ஒற்றுமை!

'வேற்றுமையில் ஒற்றுமை' என்கிற தேசத்தின் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட சித்தன்னவாசல் அருகேயுள்ள 'வயலோகம்' எனும் கிராமம் விளங்குகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை!
Updated on
2 min read

'வேற்றுமையில் ஒற்றுமை' என்கிற தேசத்தின் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட சித்தன்னவாசல் அருகேயுள்ள 'வயலோகம்' எனும் கிராமம் விளங்குகிறது. இங்கு நடைபெறும் சந்தனக்கூடு விழாவுக்கு முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து சகடை, தேர் வடக்கயிறு ஆகியன எடுத்துச் செல்லப்படும்.

முத்துமாரியம்மன் தேர், சகாய மாதா சப்பரம், சந்தனக்கூடு தேர் ஆகிய மூன்றுமே நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வரும். கிராம மக்கள் ஒற்றுமையாக மூன்று விழாக்களிலும் பங்கேற்கின்றனர். பொதுவான கிராம கமிட்டிக்கு கருப்பையா, முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் தலைவர்களாகவும், காவுதீன் அம்பலமாகவும், ஜான் பீட்டர் மிராசுதாராகவும் பொறுப்பு வகிக்கின்றனர். பொது பிரச்னைகளில் இவர்கள் ஆலோசித்து முடிவெடுக்கின்றனர்.

மும்மத ஆலயங்கள்:

நான்கு புறமும் பச்சைப்பட்டு விரித்தவாறு, பூத்துக் குலுங்கும் நெல் வயல்கள் சூழ்ந்திருந்த ஊராக இருந்ததால் அந்தக் காலத்திலேயே இந்தக் கிராமத்துக்குக் காரணப் பெயராக 'வயலக நாடு' என அமைந்தது. இந்தக் கிராமத்தின் வடபுறம் ஆகமவிதிப்படி, அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதலாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கற்றளியாய் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில் கிராமத்தின் பழம்பெருமைக்குச் சான்றாகும்.

மேற்கே தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவர் காலத்தில் உருவான புனித அடைக்கல மாதா ஆலயம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15'ஆம் நாளில் கொடியேற்றத்துடன் பத்து நாள் விழா தொடங்குகிறது. தினமும் சப்பரத்தில் உற்சவ மாதா புறப்பாடு நடைபெறும். ஜனவரி 20'இல் செபஸ்தியான் விழா இரு நாள்கள் நடைபெறும். இந்த விழா கொண்டாடுவதற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக உள்ளது.

அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வயலோகத்தில் பலருக்கு வைசூரி அம்மை இருந்தது. அதனால் மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அப்போதைய பாதிரியார் செபஸ்தியான் என்பவர், கிராமத்தின் நான்கு திசைகளிலும் பந்தல் போட்டு இடைவிடாமல் ஜெபக்கூட்டம் நடத்தி பிரார்த்தனை செய்தாராம். இதனால், வைசூரி அம்மை பாதிப்புகள் குறைந்தது. இதற்காகவே செபஸ்தியான் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் குடும்பத்தினருடன் பங்கேற்பர்.

வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று முத்துமாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் பூச்சொரிதல் விழாவில், வயலோகத்தைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்தோரும் பூக்கூடையுடன் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

புதுக்கோட்டை மன்னர்கள் தங்கள் பட்டம் சூட்டு விழாவை குடுமியான்மலையில் உள்ள சிகாநாதர் ஆலய அம்பாள் சந்நிதியில் நடத்துவது மரபாக இருந்தது. இதுதவிர, வெள்ளிக்கிழமைகளில் மன்னர் குடும்பத்தார் பல்லக்குகளில் குடுமியான்மலை சுவாமி தரிசனத்துக்காக வயலோகம் வழியே செல்வது வழக்கம். ஒருமுறை செல்லும்போது, கிராமத்துச் சமையல் வாசனை பல்லக்கில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

மன்னர் குடும்பத்தினர் விசாரித்தபோது, சமையல் பொருள்கள் எல்லாம் வயலோக விளைச்சலால் வந்தவை என்பதை அறிந்து, விவசாயிகளை ஊக்கப்படுத்துகிற விதமாக வயலோகத்துக்கு நிலவரியை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் மன்னர்.

கிராமத்துக்குத் தெற்கே ஹிஜ்ரத் சையது முகம்மது ஒலியுல்லா பள்ளிவாசல் பிரம்மாண்டமாக உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு சையது முகமது, முகமது கனி ஆகியோர் குதிரைகளில் வணிகத்துக்காக வயலோகம் வந்தபோது, திருடர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாகவே தர்ஹா, பள்ளிவாசல் கட்டப்பட்டன.

ஆண்டுதோறும் ரஜப் மாதம் ஒன்றாம் பிறையில் சின்னக் கொடியேற்றம், பத்தாம் பிறையில் பூரான் கொடி என்ற பெரிய கொடியேற்றம், பதினைந்தாம் பிறையில் சந்தனக்கூடு திருவிழாக்கள் நடைபெறும். இந்த நேரத்தில் பள்ளிவாசல் வளாகத்தில் ஹிந்து மதப் பெண்களின் கும்மிப்பாட்டும், ஆட்டமும் நடைபெறும். புதுக்கோட்டை அரண்மனை சார்பில் விழாவுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைப்பது வழக்கம். அன்று நடைபெறும் சமபந்தி விருந்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொள்வர். சர்க்கரை, பேரீச்சம் பழம் ஆகிய பிரசாதங்களை அனைவரும் பெற்றுச் செல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com