விழி ஒளி..!

பார்வைக் குறைபாடுடைய சிறார்கள் கல்வி கற்பதே இமாலயச் சாதனை.
விழி ஒளி..!
Updated on
2 min read

'பார்வைக் குறைபாடுடைய சிறார்கள் கல்வி கற்பதே இமாலயச் சாதனை. பாடப்புத்தகங்களைத் தாண்டி, கதைகள் வாசிப்பதென்பது சிரமம்தான். கதை புத்தகங்களைஅச்சிடவே 'விழி ஒளி' உருவானது.

கற்பனையைத் தூண்டும் நவீன கதைகளை பிரெய்லி முறையில் புரவலர்களின் உதவியோடு அச்சிட்டு, சிறார்களிடம் இலவசமாகக் கொண்டு சேர்த்து வருகிறோம்' என்கிறார் சென்னையில் பார்வைக் குறைபாடுள்ள சிறார்கள் தொடர்பான சிறப்புக் கல்வியியல் பேராசிரியராகப் பணிபுரியும் ரேவதி பாலசந்திரன்.

அவர் கூறியது:

'பிரெய்லி வடிவில் 'நீதிக்கதைகள்', 'நாட்டுப்புறக் கதைகள்', 'தலைவர்களின் வரலாறுகள்' போன்ற கதைப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசின் பாடநூல், திருக்குறள் போன்றவை பிரெய்லி வடிவில் உள்ளன. சிறார்களுக்குக் கற்பனையைத் தூண்டும் கதைப் புத்தகங்கள் எளிய தமிழில் இல்லை. அப்படி இருந்தாலும், அவை நூலகங்களில் மட்டுமே உள்ளன. பார்வையற்ற குழந்தைகளால் நூலகம் சென்று வருவது முடியாத ஒன்று.

பார்வைக் குறைபாடுள்ள சிறார்களுக்காக ஒலிப்புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின. அவை கதைகளைக் கேட்க உதவினாலும், மொழியின் நுணுக்கங்களான எழுத்து, நிறுத்தல் குறிகள், வாக்கிய அமைப்பு, மொழியின் அழகு ஆகியவற்றை ஒரு குழந்தையால் பிரெய்லி புத்தகங்களை விரல்கள் உதவியுடன் தடவி, அதன் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

கேட்பது என்பது ஒரு செயலற்ற செயல்முறை. ஆனால், வாசிப்பது என்பது மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் செயலாகும். இது நினைவாற்றலை அதிகரிப்பதோடு, செய்திகளை ஆழமாக உள்வாங்கவும், தங்கள் மனரீதியில் உருவகம் செய்து கொள்ளவும் உதவுகிறது.

பொதுவாக, கதைகள் குழந்தைகளை ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. பிரெய்லி வடிவில் வழங்கும்போது, அந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே சுயமாக வாசிக்கும் இன்பத்தைப் பெறுகின்றனர். இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, கற்பனைத் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது. இதற்காக நான் அலைவரிசையில் இருக்கும் பொதுநலம் விரும்பும் நண்பர்களுடன் உருவாக்கியதுதான் 'விழி ஒளி' அமைப்பாகும்.

கற்பனைத் திறன் என்பது கண்களால் பார்ப்பது மட்டுமல்ல; அது மனதால் உணரப்படுவதாகும். 'ஒவ்வொரு குழந்தையும் கதைகளின் மாயாஜால உலகத்தை அனுபவிக்கத் தகுதியானவர்கள்' என்ற நோக்கத்துடன், பார்வைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளிடம் கதைகளைக் கொண்டு செல்ல 'விழி ஒளி' தன்னார்வலர்களின் அமைப்பு ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

எழுத்தாளர் விழியனின் மூன்று வித்தியாசமான, மனதைத் தொடும் கதைப் புத்தகங்களை பிரெய்லி வடிவில் , சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டோம். புரவலர்களின் உதவியுடன் பிரெய்லி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகிப்போம். 'விழி ஒளி' அமைப்பின் அடுத்த நகர்வு, பார்க்கும் படங்களுக்குப் பதிலாகத் தொடு உணர் படங்களுடன் கூடிய புத்தகங்கள் உருவாக்கும் முயற்சி. மங்கிய பார்வையுடையவர்களுக்கான பெரிய எழுத்துரு புத்தகங்கள், திரை வாசிப்பான் அணுகல் உள்ள எண்மப் புத்தகங்கள் என அனைத்துவிதமான அணுகல் வசதிகளையும் கொண்டு கதைகளைப் பார்வைக் குறைபாடுடைய சிறார்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய உதவுவது. அவர்களையும் கதைகள் எழுத வைப்பதும் 'விழி ஒளி'யின் லட்சியமாகும்.

சாதாரண புத்தகங்களைவிட பிரெய்லி புத்தகங்களை அச்சிட 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கூடுதல் செலவாகும். புத்தகத்தின் அளவும் பெரியது. ஏ 3 அளவு தாளில் அச்சிடவேண்டும். பார்க்க ஒரு கோப்பு வடிவத்தில் பெரிதாக இருக்கும். பிரெய்லி புத்தகத் தயாரிப்பு அதிக நேரம் எடுக்கும் வேலையாக அமைகிறது. தமிழில் உள்ள 'யுனிகோட்' அல்லாத பழைய எழுத்துருக்களை பிரெய்லிக்கு மாற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி என்பது ஒரு மாற்று வழி அல்ல; அது அவர்களின் அடிப்படை உரிமை. அதனால் அதிக அளவில் பிரெய்லி புத்தகங்களை வெளியிட உள்ளோம்.

'விழி ஒளி' அமைப்பானது சென்னையை அடுத்த பூந்தமல்லி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட பர்கூரில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளிகளில் உள்ள சிறார்களிடம் கதை சொல்லுதல் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பார்வைக் குறைபாடுடைய குழந்தைகளின் மனங்களை கதைகள் வழி அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் விழியனின் சிறார் கதைப் புத்தகங்களை பிரெய்லி வடிவில் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது' என்கிறார் ரேவதி.

குழந்தை கதை எழுத்தாளர் விழியன் கூறுகையில், 'பிரெய்லி புத்தகங்கள் பொதுமக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு எதுவும் இல்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சில சிறார் புத்தகங்களை ப்ரெய்லியில் கொண்டு வந்துள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் பிரெய்லி புத்தகங்கள் கொண்டு வர ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளனர். தனி மனிதராக பிரெய்லி புத்தகங்களைக் கொண்டுவருவது பெரிய சவால். 'விழி ஒளி' ரேவதியின் முன்னெடுப்பில் பார்வை குறைபாடுடைய குழந்தைகளுக்குக் கதை சொல்லும் முயற்சி மூலம் இந்தப் புத்தகங்கள் வெளிவந்துள்ளது ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும்' என்கிறார் விழியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com