வெள்ளி விழா இயக்குநர் பீம்சிங் தமிழ், ஹிந்தி என்று எந்தப் படமானாலும் நட்சத்திரப் பட்டாளங்கள் இல்லாமல் இயக்கியதில்லை. ஒரே ஒரு காட்சியில் வரும் போஸ்ட்மேன் கூட புகழ் பெற்ற நாடக நடிகராவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
இத்தனை ஆளுமை உள்ளவர் சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க நினைத்து நான்கு படங்களை எடுத்தார். 1966-இல் 'மதராஸ் டூ பாண்டிச்சேரி' எடுத்தார். ஒரு பஸ்சில் உள்ள பயணிகளுடன் நகைச்சுவையாகப் படம் முடிந்துவிடும். வெற்றியும் அடைந்தது. அடுத்தது ஒரு டாக்ஸியிலேயே படம் முடிந்து விடும். சிரித்து சிரித்து வயிறே வெடித்து விடும். அந்த டாக்ஸிக்குள் ஓ.ஏ.கே. தேவர் கொல்லப்பட்டு பிணமாகக் கிடப்பார்.
மூன்றாவது 'ஆலயம்'. விகடனில் முத்திரைக் கதையாக வந்து பிலஹரி எழுதி 'நெஞ்சே நீ வாழ்க' என்ற பெயரில் நாடகமாகி வெற்றி பெற்றதை 'ஆலயம்' என்ற பெயரிலேயே எடுத்தார். இது அலுவலகம் ஒன்றில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்குள் முடிந்துவிடும். இதில் சராசரி கிளார்க்காக மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். தமிழ்நாடு அரசு விருது, தேசிய விருது கிடைத்தது. நான்காவது பட்டத்து ராணி. இவை எல்லாமே 1966 -67-க்குள் முடிந்து வெளியான படங்கள்.
இவற்றில் எனக்கு முதன் முதலாக உதவி இயக்குநராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படங்களில் 'மதராஸ் டூ பாண்டிச்சேரி', 'பட்டத்து ராணி' படங்களில் கல்பனா என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்தார். இவர் கன்னடத்தில் இன்னொரு சரோஜாதேவியைப் போல் சாயலிலும் நடிப்பிலும் புகழ் பெற்றவராய் இருந்தார்.
லதா என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1943-ஆம் ஆண்டு ஜூலை 18 -இல் பிறந்து, கன்னடத் திரையுலகில் காவிய நடிகையானார். கன்னட உலகின் நிரந்தரப் புகழுடைய ராஜ்குமாருக்கு இணையாக நடித்தார். பாரதிராஜாவின் குருவாக மதிக்கப்பட்ட இயக்குநர் புட்டண்ணா கனகலின் அற்புதமான படங்களில் அசத்தலான நடிகையாக பிரகாசித்தார்.
'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கர்ணன்', 'கப்பலோட்டிய தமிழன்' போன்ற காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்த பி.ஆர். பந்தலுவின் படங்களில் நடித்தார். துளு, மலையாளப் படங்களிலும் நடித்த இவர், பிலிம்பேர் விருது, கர்நாடக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகளை மூன்று முறை பெற்றுள்ளார்.
இவர் இங்கே தொடர்ந்து பீம்சிங்கின் படங்களில் நடித்தபோது, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கி இருந்தார். இவர் ஹெரால்டு கார் ஒன்று வைத்திருந்தார். அவரே அந்த காரை ஓட்டி வருவார். அதில் என்னை ஏற்றிக் கொண்டு அவர் வீட்டுக்குச் செல்வார்.
படப்பிடிப்பில் பேச வேண்டிய, நடிக்க வேண்டிய காட்சிகளைப் பற்றி விவரமாகக் கேட்பார். சில வசனங்கள் புரியாத நிலையில், அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் கேட்பார். அவர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அங்கேயே எனக்கு டிபன், காபி, சாப்பாடு முடிந்து விடும். இனிமையாகவும் மரியாதையாகவும் பழகுவார்.
'மதராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தில் நடிக்கும் போது எல்லோரிடமும் நன்றாகப் பழகுவார். 'பட்டத்து ராணி' படத்தின் போது கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார்.
காரணம், அங்கே எல்லோரையும் செட்டில் பயமுறுத்தும் பானுமதி அம்மாவுடன் நடிக்க வேண்டியது வரும். பாம்பைக் கண்டால் கூட பயப்படாமல் இருக்க முடியும். பானுமதி அம்மாவைக் கண்டால் பயப்படாமல் இருக்க முடியுமா? இதில் ஹீரோவாக நடித்த ஜெமினிகணேசன் செட்டுக்கு வந்தால்தான் நிம்மதி பெரு மூச்சு விடுவார்.
இவர் நடித்த படங்கள் எல்லாம் வெளியான பின், என்னை அவர் வீட்டுக்கு அழைத்து ஒரு சின்னப் பொம்மை கடிகாரத்துடன் இருந்ததை எனக்குப் பரிசாகத் தந்தார். 'பொம்மை எனக்கு எதற்கு?' என்றேன். அதைத் திறந்து காட்டினார். அதில் விலை உயர்ந்த ஒரு பேனா இருந்தது.
'நீங்கள் எழுத்தாளராக வர ஆசைப்படுகிறீர்கள். அதற்கு என் அன்பளிப்பு' என்று தந்தார். நான் பிரபல எழுத்தாளரானதும் இவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். அது முடியாமல் போனது. காரணம்?
உலகப் புகழ் பெற்ற மர்லின் மன்றோ, குரு தத் மனைவி பிரபல பின்னணிப் பாடகி கீதா தத், மீனாகுமாரி, சில்க் சுமிதா, ஷோபா, படாபட் ஜெயலெட்சுமி, கோழி கூவுது விஜி, மோனல், மயூரி, குல்ஜித்ரந்தவா போன்றவர்கள் தற்கொலை செய்துகொண்டதைப் போலவே இவரும் 36-ஆவது வயதில் 1979, மே 12-இல் நடக்க இருந்த திருமணம் ரத்தானதால் மோதிரத்தில் இருந்த வைரத்தை விழுங்கி எரி நட்சத்திரமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.