சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மரக் கன்றுகளைப் பரிசாக வழங்கி மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார், ஆசிரியர் என்.எம். பிரேம்ராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளையை அடுத்த வாறுதட்டு பகுதியைச் சேர்ந்த நாற்பத்தைந்து வயதான என்.எம். பிரேம்ராஜ், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு விருதுகளோடு பல்வேறு அமைப்புகள் வழங்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தனது சாதனை குறித்து அவர் கூறியதாவது:
'நான் உடற்கல்வி முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்து, வாறுதட்டு மார் மத்தேயு காவுகாட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறேன். எங்கள் பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பல சாதனைகளைப் படைக்கின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாணவர்கள், சக ஆசிரியர்களுடன் இணைந்து முதல்கட்டமாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதுடன், நெகிழி பயன்பாடற்ற பள்ளியாக எங்கள் பள்ளியை மாற்றியுள்ளேன்.
'வாறுதட்டு அன்னை தெரசா இளைஞர் இயக்கம்' என்ற அமைப்பை 2007-இல் தொடங்கி, இளைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். இந்த அமைப்பை 2022-இல் அறக்கட்டளையாக மாற்றி, பள்ளிகள், கல்லூரிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு, தனியார் அலுவலக வளாகங்கள், சாலையோரங்களில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறேன்.
சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, பரிசுகள், பணம் வழங்காமல் மரக்கன்றுகள் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன். இதனால் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை மணமக்கள் மத்தியிலும், திருமணத்துக்கு வரும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறேன்.
முந்தைய காலங்களில் குடும்ப விழாக்களில் மரம் நடும் பழக்கம் இருந்து வந்தது. இந்தப் பழக்கத்தை நாகரிக கலாசாரத்தில் மறந்துவிட்டோம். வீட்டு வளாகத்தில் ஒரு மரக் கன்றை நட்டால் பிற்காலத்தில் வீட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அந்த மரம் பயன்படும்.
மாநில அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்கள், அமைப்புகளுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக விருதுகளை வழங்கி வருகிறேன்.
அண்மைக்காலமாக மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்வதும், விழாக்களில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் செயல்பாடுகள் அதிகரித்து வருவதும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.
2011- ஆம் ஆண்டில் சென்னை கிண்டி பூங்காவில் நடைபெற்ற உலக வன நாள் விழாவில், அப்போதைய வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமாலிடம் 'தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் புரவலர்' எனும் விருதைப் பெற்றேன். அதே ஆண்டு மத்திய அரசின் 'நேரு யுவகேந்திரா' சார்பில் சிறந்த மாவட்ட இளைஞர் விருதை, அப்போதைய ஆட்சியர் மதுமதியிடம் பெற்றேன். இதுதவிர, பல்வேறு அமைப்புகளின் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்.
இந்த விருதுகள் எனக்கு இயற்கையை நேசிக்க வேண்டும் என்றும், மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஊக்கத்தையும், உந்துதலையும் தந்து கொண்டிருக்கிறது' என்கிறார் என்.எம். பிரேம்ராஜ்.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.