பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் கலம்காரி ஓவியங்கள்!

'சாதாரண அனாட்டமி வகை ஓவியங்களை வரைவதைக் காட்டிலும், கலம்காரி ஓவியங்கள் வரைவது கடினமானது.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:02 am IST

சுஜாதா மாலி

'சாதாரண அனாட்டமி வகை ஓவியங்களை வரைவதைக் காட்டிலும், கலம்காரி ஓவியங்கள் வரைவது கடினமானது. ஆனால், தனித்துவமானது. அதீதமான நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் பிரபஞ்ச இயக்கத்துடன் தொடர்புடையது. கடவுளர்களுக்குரிய யந்திரங்களை முன்னோர்கள் தயாரித்ததும் இதன் நுட்பம்தான். இதுபோன்ற எளிய வடிவங்களான கோலங்களின் வாயிலாக வாஸ்து குறைபாடுகள் தன்னாலேயே நிவர்த்தியானது. இன்றைய வேகமான வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களைக் கைவிட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாமல் தவிக்கின்றோம்' என்கிறார் ஓவியர் ராஜ்மோகன்.

"கலம்காரி' என்கிற பாரசீக வார்த்தைக்கு (கலம் - எழுதுகோல் /பேனா; காரி - கைவினை வேலை) எழுதுகோலால் செய்யப்பட்ட கைவேலைப்பாடு என்பது பொருள். அக்காலத்தில் மரக் குச்சிகளால் இயற்கை வண்ணங்களைத் தொட்டு துணிகளில் வடித்த ஓவியங்கள் இவை. "கலம்காரி ஓவியங்கள்' என்றால் ஆந்திரம்தான் பூர்விகம் என்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் "கருப்பூர் கலம்காரி' பாணி ஓவியங்கள் 900 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறது. அந்தத் தொன் பாரம்பரியத்தின் நீட்சியாக விளங்கிடுபவர் ஓவியர் ராஜ்மோகன்.

மரபு வழியுடன் தனது புது முயற்சிகளையும் இணைத்து நவீன "ஈகோ ஃப்ரெண்ட்லி' ரக ஓவியங்களை முன்னெடுத்து அவர், இ.ஆர்.ஏ.ஹெச். (எம்பெருமாள் ராஜமோகன் ஆர்ட் ஹவுஸ்) என்கிற பெயரில் தன்னுடைய படைப்புகளை அளித்துவருகிறார்.

கும்பகோணம் - திருப்பனந்தாளுக்கு அருகேயுள்ள சிக்கல் நாயக்கன் பேட்டை கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட அவரிடம் பேசியபோது:

'நாயக்க வம்சர்கள் ஆட்சியில் கருப்பூர் கலம்காரி ஓவியங்களுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அப்போதெல்லாம் எங்கள் முன்னோர்கள் அற்புதமான கலம்காரி ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். அவர்கள் உபயோகப்படுத்திய அதே சூத்திரங்கள், வழிமுறைகளைக் கையாண்டு ஓவியங்களை வரைந்து வருகிறேன். எனது தந்தை எம்

பெருமாள், கலம்காரி ஓவியப் படைப்புகளுக்காக சில்பகுரு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். அவர்தான் குரு. விவரம் அறிந்த நாள் முதல் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள கலைக்கூடத்திலேயேதான் வளர்ந்தேன். இயற்கையான வழியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் கலைக்கூடத்தில் இன்றும் உள்ளன. தஞ்சை, தாராசுரம் வருபவர்களின் அடுத்த தேர்வாக இருப்பதே என்னுடைய கலைக்கூடம்தான்.

பி.எஃப்.ஏ., டி.எஃப். டெக் படித்ததால், திரைத்துறையில் ஆர்வம் இருந்தது. இருந்தாலும், பாரம்பரிய உணர்வு என்னை முழுநேர கலம்காரி ஓவியராகவே மாற்றியது. 10 ஆண்டுகளாக அடுத்த நிலைக்கு இந்தக் கலையைக் கொண்டு செல்லும் ஆர்வத்தில் ஓர் ஆராய்ச்சியாளனாகவே என்னை அர்ப்பணித்துவிட்டேன்.

Story image

ஓவியங்கள் வரைவது எப்படி?

ஓவியத்தை வரைவதற்குப் பயன்படுத்திய வண்ணங்கள் மரப்பட்டை, இலைகள், பூக்கள், சில மூலிகைகள் ஆகியவற்றின் கலவைச்சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவையாகும். இயற்கைச் சாயங்கள் தயாரிப்பதற்கு நேரமும் மெனக்கெடலும் அதிகம். பொறுமை அவசியம். தயாரித்தவுடனேயே பயன்படுத்தி விட வேண்டும். இப்போது செயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். ஆனாலும், நான் இயற்கைச் சாயங்களையே பயன்படுத்துகிறேன்.

ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தக் கூடிய துணியைப் பக்குவப்படுத்துவதற்கே நிறைய வழிமுறைகள் உள்ளன. முன்பெல்லாம் முறுக்கேற்றப்பட்ட பஞ்சு இழைகளை வரிசையாக அடுக்கி அடுக்கிக் கையால் தயாரிக்கப்பட்ட துணிகளையே பயன்படுத்தினர். பின்னர், பஞ்சை ஊறவைத்து மென்மையாக்கித் தட்டி தட்டி விரித்தும் தயாரித்து உள்ளனர்.

தற்பொழுது உபயோகப்படாத செயற்கைப் பொருள்கள், துணி, திசுக் கழிவுகளை ஊறவைத்து பக்குவப்படுத்தி கேன்வாஸ் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைச் செய்து வருகிறேன். இதனால் நல்ல தரமாகக் கிடைப்பதோடு எளிதில் மட்காத பொருள்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கலாம்.

வெப்பம், வெளிச்சம் முதலான விஷயங்களைக் குறைத்து, இயற்கையான சூழலில் ஓவியங்களைத் தயார் செய்வது நல்லது. செயற்கை மின் உபகரணங்கள், மின் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் அந்தி நேரத்துக்குப் பின்னர் வேலை செய்ய முடியாது. இந்த அடிப்படையில் தயாராகும் ஓவியங்கள் ஐரோப்பியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

என்னுடைய முன்னோர்கள் பயன்படுத்திய அதே வழிமுறைகளைப் பயன்படுத்தித் தயாரிப்பதால் "ஆதென்டிக்' என்கிற வார்த்தைக்கு முழு அர்த்தத்தைத் தர முடிகிறது. அவர்கள் செய்துள்ள பல விஷயங்களைப் பார்க்கும்போது, "ஏன்? எதற்கு? எப்படி?' என எழும் ஐயங்களுக்குத் தீர்வு காண்பதே சவாலாக இருக்கிறது.

முன்பெல்லாம் பல அடிகள் நீளமுள்ள திரைகளில் புராண, இதிகாசக் காட்சிகளை இந்த முறையில்தான் வரைந்துள்ளனர். இந்த அளவு நீளமான நுணுக்கமான வேலைப்பாடுகளை அருங்காட்சியகங்களில் கூட அரிதாக உள்ளது. காலத்துக்கேற்ப தனித்தனிக் காட்சி ஓவியங்களாக வரைகிறேன்.

எனது ஓவியங்கள் எல்லாவற்றுக்குமே அடிப்படை ஜியோமிதி வடிவங்களும், அவற்றிலிருந்து பெறப்படும் கோடுகளும்தான். இந்த ஓவியங்கள் கட்டம், வட்டம், முக்கோணங்களைக் கொண்டே விவரிக்கப்பட்டவை. பார்ப்பதற்கு நவீன ஓவியங்களாகத் தெரிந்தாலும், அதன் உள்ளே அசாத்தியமான நுணுக்க வேலைப்பாடுகளுடன் கூடிய உருவங்கள்தான் அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு, ராமர் என்றால் அவருடைய அவதார நேரத்தில் கோள்கள் இருந்த நிலையைக் கொண்டு அவரின் உருவத்தைக் கணிக்க முடியும். பிறகு பஞ்சபூதங்களிலிருந்து கிடைக்கின்ற அதிர்வுகளை உள்வாங்கி, தூரிகையில் அவரது உருவத்தைக் கொண்டு வர வேண்டும்.

பட்டுப்புடவை, கைப்பை முதலானவற்றிலும் இந்த கலம்காரி ஓவியங்களை வரையச்சொல்லி வாங்குவது உண்டு. ஒன்றுபோல் இன்னொன்றை உருவாக்கிட முடியாது.

அந்நிய நாடுகளில் பாரம்பரியக் கலைகளுக்கு ஏக வரவேற்பு இருக்கிறது. கலைத்திறன் உடையவர்கள் இந்தக் கலையை ஆர்வமாகக் கற்றதால், அதனை அழியாமல் பாதுகாக்க வேண்டும். உலக அளவில் நம் கலைத்திறன் பெருமையைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும்' என்கிறார் ராஜ்மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.