'ஹலோ பிரதர்... இரவு நான் உங்க வீட்டுக்கு வருகிறேன். இரவு டின்னர் உங்களோடுதான். 'புட் அப்'பில் ஆர்டர் கொடுத்து விட்டு வரட்டுமா?' என்று கேட்கும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் அபார்ட்மென்டுகளில் குடியிருக்கும் அவர்களது நலம் விரும்பிகள் சொல்லும் ஒரே பதில் என்ன தெரியுமா?
' ஹலோ... ஆர்டர் செய்யாதீர்கள். எங்க அபார்ட்மென்ட்டில் ஒரு ஆண்டி சூப்பராக டிபன், ஸ்நாக்ஸ் செய்வாங்க. அவங்களிடம் சொல்லிட்டா அவங்க இன்னைக்கு என்ன ஸ்பெஷலோ அதை 7 மணிக்குக் கொடுத்திருவாங்க. நீங்க வந்துடுங்க. இங்க டின்னர் ரெடியா இருக்கும்...' என்ற பதிலே இருக்கும். இப்படிக் கூறும் அபார்ட்மென்ட்வாசிகள் பெங்களுரில் இருந்த நிலையில், தற்போது சென்னையிலும் பெருகிவிட்டனர்.
தற்போது பிரபலமாகிவரும் 'அபார்ட்மென்ட் டேக்அவே' குறித்து, பெங்களூரில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது சென்னையில் முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவரும் நிதீஷ்பாபுவிடம் பேசியபோது:
'இந்த அபார்ட்மென்ட் டேக்அவேக்கள் கமர்சியல் செட்அப் இல்லாமல் இருப்பதால், உணவு வீட்டு உணவு போன்றே உள்ளது. உடலுக்கும் சத்தானது. நமக்கு அளிப்பதையே அவர்களும் வீட்டில் சாப்பிடுவதால் தரம் நன்றாக இருக்கும்.
வீட்டில் சமைக்க முடியாமல் தவிக்கும் பெண்கள், 'ஒர்க் அட் ஹோம்' முறையில் தொடர்ந்து இரவு 8 வரை பணி செய்யும் தம்பதியர் போன்றோருக்கு இந்த உணவு முறையானது விடிவுகாலமாக உள்ளது. 'கிளவுட் கிச்சன்' எல்லா நாள்களிலும் இருக்கும். இதில் உணவு சமைப்பவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த உணவு கிடைக்கும்.
இந்த டேக்அவேவை ஆரம்பிக்க உங்களுக்கு இடம் தேவை இல்லை. வேலைக்கு ஆள்கள் தேவை இல்லை. அரசிடம் அனுமதி பெற தேவையில்லை. உணவுத் தரச் சான்றிதழ் பெற தேவையும் இல்லை. அவரவர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ளோர் சேர்ந்திருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் அங்கம் வகித்தால் போதுமானது.
கணவர் மட்டும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், ஓய்வாக இருக்கும் மனைவிகளால் இந்த அபார்ட்மென்ட் டேக்அவேக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கு பேரும் தேவை இல்லை. வாட்ஸ்அப்பில், 'இன்று எங்கள் வீட்டில் அடை அவியல் செய்துள்ளோம். இந்த அடை அவியல் இரண்டு கொண்ட பேக் 90 ரூபாய். தேவைப்படுவோர், 5 மணிக்குள் எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அளித்துவிட்டு, ஏழு மணிக்கு எனது வீடு எக்ஸ் டைப்பில் எக்ஸ்.ஒய்.இசட் என்ற எண்ணில் வந்து பெற்றுச் செல்லலாம்' என அனுப்பி விடுவார்கள். கூடுதலாக இது 25 பேக் மட்டுமே என்ற தகவலையும் தெரிவித்து விடுவார்கள். தேவைப்படுவோர் ஐந்து மணிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, ஏழு மணிக்கு மேல் சென்று அந்த அபார்ட்மென்ட் குடியிருப்பில் பெற்றுக்கொள்ளலாம். வெளி அபார்ட்மென்ட்டில் வசிப்போர் இடம் பெற முடியாது. அந்த அபார்ட்மென்ட் உள்ளேயே இந்த டேக் அவே நடத்தப்படும்.
அதே நாளில் இன்னொருவர், 'எனது வீட்டில் ஆற்காடு சீரகசம்பா மட்டன் பிரியாணி, சிக்கன் 65 உள்ளது. தேவைப்படுவோர் 5 மணிக்குள் தகவல் அளித்து, 7 மணிக்கு மேல் பெற்றுக் கொள்ளலாம்' என்பார்கள். இதுபோல் ஒரே நாளில் சுமார் நூறு வீடுகள் உள்ள அபார்ட்மென்டுகளில் குறைந்தது 15 பேரும், 250 வீடுகள் உள்ள கேட்டட் கம்யூனிட்டிகளில் 50 பேருக்கு தினசரி தகவல் போடுகின்றனர்.
இதை குறிப்பாக நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்மணிகள், வீட்டில் அந்தக் கால சமையலை நன்றாகச் சொல்லித் தரும் மாமியார்களுடன் வசிப்பவர்கள் நடத்துகின்றனர். அவர்களுக்கு இது தனி வருமானமாக அமைகிறது. தங்களால் முடியாத நாளில் அவர்கள் வாட்ஸ்அப்பில் தகவல் தருவதே இல்லை. தகவல் வரும் இடத்தைப் பார்த்து வாங்குபவர்கள் அதன் தரத்தை முடிவு செய்துகொண்டு வாங்கலாமா? வேண்டாமா என முடிவு செய்துவிடுகின்றனர்' என்கிறார் நிதீஷ்பாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








