'விளையாட்டுத் துறை சார்ந்த புகைப்பட இதழியல் என்பது பெண்களுக்கான வேலை அல்ல என்று தோழிகள், தெரிந்தவர்கள் பலரும் என்னிடம் சொல்லிப் பார்த்தனர். உற்றார் உறவினர்கள், விளையாட்டுத் துறை சார்ந்த புகைப்படங்களைப் பிடிப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்து என் தாயாரிடம் எச்சரித்தனர்.
ஆனால், நான் பின்வாங்கவில்லை'' என்று கூறும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கீதிகா தாலுக்தார், 2026 பிஃபா கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் குறித்த செய்திகளைச் சேகரிக்க, படங்கள் பிடிக்க இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பெண் புகைப்படக் கலைஞர்களில் ஒருவர்.
அதற்கு முன்பு நடந்த பிஃபா கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து, 2026 போட்டிகள் குறித்த 'திக்... திக்', சிலிர்க்கவைக்கும் கணங்களை ஒளிப்
படங்களாக கீதிகா வார்க்கப் போகிறார். கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒலிம்பிக் போட்டிகள், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, ஐபிஎல் போட்டிகள், பெண்களுக்கான பிஃபா உலகக் கோப்பை, உலகின் மிகச்சிறந்த விளையாட்டுத் தருணங்கள் பலவற்றை கீதிகா காமிரா மூலம் பதிவு செய்துள்ளார். கீதிகா மேலும் சொல்வதாவது:
'எனது சொந்த ஊர், அசாமில் உள்ள 'டூம் டூமா' தேயிலை நகரம். இந்தத் துறையில் நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். ஒருமுறை, கும்பல் ஒன்று எனது காமிராவை உடைத்து நொறுக்கியது.
இன்னொரு முறை, மைதானத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக எனது முழங்கால்களில் ஏற்பட்ட காயம் மிகவும் தீவிரமாக இருந்ததால், மூன்று மாதங்களுக்கு என்னால் நடக்க முடியவில்லை. சுமார் 40 ஆண் புகைப்படக் கலைஞர்களால் நிரம்பிய அறையில் காமிராவை ஏந்தியபடி நிற்கும் பெண் ஒளிப்படக் கலைஞராக இருப்பதில் எனக்குப் பெருமைதான்.
அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்: தென் கொரியாவின் விளையாட்டு, கலாசார அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகையுடன், சியோல் தேசியப் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய விளையாட்டு மேலாண்மைப் படிப்பை நிறைவு செய்தேன். ஜூன் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியக் கால்பந்தாட்ட அணி பங்கேற்க முடியவில்லை.
ஆனால், இந்தியாவிலிருந்து பெண் புகைப்படக் கலைஞராக நான் கலந்து கொள்ள அனுமதி கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும். பிஃபா-விடமிருந்து எனக்குக் கிடைத்து வரும் தொடர் ஆதரவு, எனது தொழிலில் உள்ள நம்பகத்தன்மைக்கும், உலகளாவிய கால்பந்து செய்திகளை வழங்குவதில் எனது பங்களிப்புக்கும், விளையாட்டுப் புகைப்படத் துறையில் எனது அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என்பேன்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்த இருக்கும் 2026 பிஃபா உலகக் கோப்பைப் போட்டிகள் கால்பந்தாட்ட வரலாற்றிலேயே மிகப் பெரிய நிகழ்வாக அமையும். போட்டியில் 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருவதற்குக் காரணம், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு என்னைப் பரிந்துரை செய்வதுதான்'' என்கிறார் கீதிகா.
லோபமுத்ரா
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த புகைப்பட இதழியலில், லோபமுத்ரா இன்னொரு குறிப்பிடத்தக்க ஒளிப்படக் கலைஞராகத் திகழ்கிறார். அவர் எடுத்த ஒளிப்படங்கள் உலகைப் பிரமிக்க வைக்கின்றன. அவர் கூறுகிறார்...
'எந்தப் பயணத்தையும் தொடங்க கால நேரம் பார்க்கக் கூடாது. பொழுது போக்காக இருந்த காமிரா எனது தொழிலாக மாறியதும் திடீரென்றுதான். 2010-இல் கணவர் பரிசளித்த கேமரா அதற்கான உபகரணங்களுடன் பயணம் தொடங்கியது. அப்பாவும் கணவரும் திறமையான ஒளிப்படக் கலைஞர்கள்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்ற நான் புகைப்படம் எடுப்பதிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். அப்போது, எதிர்காலம் எனக்காக இவ்வளவு அற்புதமான ஒரு திருப்பத்தை அன்பளிப்பு செய்யும் என்று சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
மூன்று முக்கிய நபர்கள்: எனது பயணம் 2012-இல் வேகம் எடுத்தது. சர்வதேச புகைப்படப் போட்டிகளில் பங்கேற்று, நான் பிடித்த படங்கள் மூலம் பாராட்டுகளைப் பெற்றேன். அந்தப் பாராட்டுகள், சர்வதேசப் பத்திரிகைகளில் ஆவணப்படங்கள் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தன. அதற்காகப் பயணங்கள் நிறைய செய்ய வேண்டிவந்தது. எனது கட்டுரைகளிலும், ஒளிப்படங்களிலும் மனித உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
சமூக ஆவணப் படங்கள், பயணத்தின்போது படங்கள் பிடிப்பது எனக்கு எளிதாக, செளகரியமாக இருப்பதாக உணர்ந்தாலும், தெருப் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு மிகவும் சவாலாக அமைந்தன. அனைத்துக் கூறுகளும் ஒன்றிணைந்து ஒரு முழுமையான கதையைச் சொல்லும் அந்த மாயாஜாலத் தருணத்தை காமிராவினால் பதிவு செய்யும் தருணம், எனக்கு ஈடுஇணையற்ற பரவசத்தையும் சிலிர்ப்பையும் அளிக்கிறது.
எனது பயணத்தில் மூன்று முக்கிய நபர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களான வினீத் வோஹ்ரா, சுவோமோய் மித்ரா, என் கணவர் சப்யசாச்சி. என்னை மேம்படுத்திக் கொள்ளவும், உயர்ந்த இலக்குகளை அடையவும் ஊக்கமளித்ததில் இந்த மூவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
தங்கப்பதக்கங்கள்: ஒளிப் படம் என்பது காமிராவின் மூலமாக உருவாக்கப்படுகிறதே தவிர, எந்தவொரு புகைப்படத் திருத்த மென்பொருளின் மூலமாக அல்ல. ஒரு பயண ஒளிப்படக் கலைஞராக, உலகின் மிகச் சிறந்த, தனித்துவமான இடங்கள் பலவற்றுக்கும் பயணம் செய்திருந்தாலும், எனது 'விருப்பப் பயணப் பட்டியலில்' இன்னும் செல்ல வேண்டிய சில இடங்கள் எஞ்சியுள்ளன. படம் பிடிப்பதில், வேறொருவரின் பாணியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் .
இந்தியப் பத்திரிகை ஒன்றின் சார்பாக 2018-இல் ரஷ்யாவில் நடந்த பிஃபா உலகக் கோப்பையை ஆவணப்படுத்தியிருக்கிறேன். நேஷனல் ஜியோ கிராஃபிக் டிராவலருக்காகப் பணியாற்றியுள்ளேன். 2021-இல் 'சியன்னா' முதல் பரிசையும் வென்றுள்ளேன். பல்வேறு சர்வதேசக் கண்காட்சிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன்.
'கேனன்' நிறுவனத்தில் வழிகாட்டியாகப் பணியாற்றி, தற்போது, ஃபுஜி ஃபிலிம் நிறுவனத்தில் புகைப்படப் பட்டறைகளை நடத்தி, எதிர்காலத் தலைமுறைக்குப் புகைப்படக் கலையின் நுணுக்கங்களைக் கற்பித்து வருகிறேன்'' என்கிறார் லோபமுத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழா - முழு விவரம்!

பிஃபா வரலாற்றில் இடம்பெற்ற தமிழ் வம்சாவளி வீரர்கள் நிஷான் வேலுப்பிள்ளை, முத்துசாமி!
பிஃபா உலகக்கோப்பை! கத்தார் அணியில் விளையாடும் 19 வயதான கேரள வம்சாவளி வீரர்!





