விவசாயத்துக்கும் பல்வேறு தொழில்களுக்கும் தேவையான இயற்கை வளம் நம்மிடம் இருந்தாலும்கூட, வெளிநாட்டில் இருந்து பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலை இந்தியாவில் உள்ளது.
இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு பெரும் அளவில் இருப்பதை ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன.
இவை அந்தமான் ஆழ்கடல் பகுதியில் பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நடத்திய ஆய்வில், மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பதை உறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே, போர் காரணமாக பெட்ரோலியப் பொருள்கள், எரிவாயு இறக்குமதியில் பல்வேறு இடையூறுகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தித்து வரும் சூழலில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரை அருகே விஜயாபுரம்-2, விஜயாபுரம்-3 ஆகிய கிணறு
களில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கிணறுகள் அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில், 355 மீட்டர் கடல் ஆழத்தில் அமைந்துள்ளது. இங்கு 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் துளையிட்டு சோதனை செய்தபோது தொடர்ச்சியான எரிவாயு வெளியேற்றம் காணப்பட்டது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 80 முதல் 85 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. அந்தமான் எரிவாயு பயன்பாட்டுக்கு வரும்போது, இந்த இறக்குமதிச் சுமை பெருமளவு குறையும். எனவே இந்த எரிவாயு கிணறு இந்திய மக்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள எரிவாயுவின் அளவு, இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தப்படுவதோடு, உள்நாட்டிலேயே குறைந்த விலையில் மின்சாரம், உரம், சிஎன்ஜி போன்ற எரிபொருள்களை உற்பத்தி செய்ய முடியும். நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைத்து, தூய்மையான ஆற்றலை நோக்கி இந்தியா பயணிப்பதற்கு இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு உதவும்.
இந்திய அரசு, ஓஎன்ஜிசி நிறுவனம் தற்போது சர்வதேச முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் இணைந்து, அந்தமானில் உள்ள எரிவாயுவை வணிக ரீதியான பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது வெறும் எரிவாயுவை எடுப்பதற்கான கிணறு மட்டுமல்ல, இது 'ஸ்ட்ராடிகிராஃபிக் கிணறு' வகையைச் சேர்ந்தது. அதாவது, அந்தமான் படுகையின் புவியியல் அமைப்பு, பாறை அடுக்குகள் மற்றும் அங்கு மறைந்திருக்கும் ஹைட்ரோகார்பன் அமைப்பைப் பற்றிய மிகத் துல்லியமான தரவுகளை அளவிடுவதுதான் இதன் முதன்மை நோக்கம்.
தொலைதூர ஆழ்கடலில் துளையிடுவது என்பது மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலாகும். ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த சவால்களைத் தாண்டி, வெற்றிகரமாகத் திட்டமிட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பது இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சித் திறன் சர்வதேசத் தரத்துக்கு உயர்ந்துள்ளதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றியுள்ளது.
இந்தப் புதிய எரிவாயு கிணறு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு, இந்திய மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிகரீதியாக முழு அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்ய சில காலம் ஆகலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினாலும், அதற்கான தூரம் அதிகமில்லை என்பதுதான் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










