தில்லியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நூறு இடங்களில் மண்பானைகளை அமைத்து இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறார் எழுபத்து ஏழு வயதான நடராஜன்.
கோடைக்கால வெப்பத்தை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், வழிப்போக்கர்களுக்கு உதவும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் மண் பானைகளில் இவர் நாள்தோறும் அதிகாலையிலேயே குடிநீரை நிரப்புகிறார்.
தாகம் தீர்க்கும் சேவையை மேற்கொள்ளும் நடராஜன் 'மண்பானை தண்ணீர் வழங்குபவர்' என்ற பொருள்படும் வகையில் 'மட்கா மேன் பட்டாபி' என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார். தன்னலமற்ற சேவை குறித்து நடராஜன் கூறியது:
'நான் பெங்களூரில் வளர்ந்தேன். இளம் வயதில், சுற்றுலா விசாவில் லண்டனில் இருந்த என் சகோதரியைச் சந்திக்கச் சென்ற நான், அங்கேயே நாற்பது ஆண்டுகள் தங்கிவிட்டேன். அங்கு நான் தொழிலதிபராகி, குடும்பத்தையும் அமைத்துக்கொண்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்குக் குடல் புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, என்னை அர்ப்பணிக்கத் தீர்மானித்தேன்.
தற்போது புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபட்டு, தில்லியில் வசித்து வருகிறேன். என்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு தேவைப்படுபவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.
மிகவும் உறுதியான, திறமையாகச் செயல்படக்கூடிய மிதிவண்டி ரிக்ஷாக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். அநாதை இல்லம், முற்றிய நிலை புற்றுநோயாளிகளுக்கான காப்பகத்துக்காக என்னால் இயன்ற சேவைகளை வழங்கினேன். சாந்தினி செளக் பகுதியில் வீடற்றவர்களுக்கு இலவச உணவு வழங்கினேன். ஆதரவற்றவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தினேன்.
2014-இல் தில்லியின் கடுமையான கோடை வெப்பத்தின்போது, எனது கவனம் குடிநீர் விநியோகத்தின் மீது திரும்பியது. பொதுஇடங்களில் நூறு மண்பானைகளை வைத்து குடிதண்ணீர் வழங்கும் சேவை செய்துவருகிறேன். தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் தங்களால் முடிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அது தண்ணீரோ, உணவோ, நேரமோ எதுவாக இருந்தாலும் சரி. எதையும் மனப்பூர்வமாக வழங்கும்போது அந்தச் செயல் முக்கியத்துவம் பெறுகிறது.
வாரம் ஒருமுறை இலவசமாக உணவு வழங்கி வருகிறேன். சமூக சேவை என்பது பிரம்மாண்டமான செயல் கிடையாது. இல்லாதவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களை அங்கீகரிப்பதுமே உண்மையான சமூக சேவை. பெரும்பாலான உதவிகளை எனது பணத்தில் செய்துவருகிறேன். தெரிந்தவர்கள், நண்பர்களும் உதவுகிறார்கள்' என்கிறார் நடராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








