சீதாராம்
'நல்ல பாட்டா போடு தம்பி... புதுப்படத்திலிருந்தாலும் சரி... சாமி பாட்டாயிருந்தாலும் சரி...'
டிரைவர் காளியின் களிப்பைப் பார்த்து கிளீனர் பழனிக்கு ஆச்சரியம். எப்போதும் இறுகிய முகத்துடனேயே லாரியை ஓட்டும் காளியிடம் இன்று பரவசம்.
'என்ன விஷயம் அண்ணே... இன்னைக்கு சந்தோஷமா இருக்கீங்க?'
'கஷ்டப்பட்டு ராப்பகலா வண்டி ஓட்டினதுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் போனஸ் தர்றதா லாரிக்குச் சொந்தக்காரர் சொல்லி, இருபத்தஞ்சாயிரத்தை இன்னைக்கு கையில கொடுத்துட்டார். இந்தப் பணத்தை இப்ப கட்டிட்டேன்னா எனக்குன்னு சொந்தமா சின்னதா ஒரு வீடும் கிடைச்சுடும். அஞ்சு வருமா தவணை கட்டிட்டு வரேன்...'
'அப்படியாண்ணே... சரி, வண்டியை ஏன் மெதுவா ஓட்டறீங்க... டவுன் வரத்துக்கு பத்துப் பதினஞ்சு கிலோமீட்டர் இருக்கும்போலத் தெரியுதே...'
'முன்னால பார், கூட்டம். அதனாலதான் வேகத்தைக் குறைச்சேன்...'
பழனி பார்த்தான். பாதி வீதி வரை கூட்டம் கூடியிருந்தது. வண்டிகள் போக அதிக வழியில்லை.
லாரியை காளி ஓரமாய் நிறுத்தினான். இருவரும் இறங்கிப்போய்ப் பார்த்தார்கள்.
சாலை விபத்து. மாருதி கார் சின்னாபின்னமாய்க் கிடந்தது. லாரி மாதிரி ஏதோ ஒரு பெரிய வண்டி அடித்துவிட்டு ஓடியிருக்க வேண்டும்.
'கடவுளே!' காளியிடமிருந்து ஒரு சோகப் பொருமல்.
பெரியவர் ஒருவர் அடிபட்டுக் கிடந்தார். வயது எழுபது இருக்கும். தலையிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. கால்களும் மடங்கியிருந்தன.
காளி சந்தேகத்துடன் அருகில் சென்று பார்த்தான். நெஞ்சுப் பகுதியில் சிறிது அசைவு தெரிந்தது.
'வாங்க... அவரைத் தூக்கலாம்... ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகணும்... சீக்கிரம் எடுத்துக்கிட்டுப்போனா பிழைக்க வச்சுடலாம்.'
காளிதான் விரைந்தான். ஆனால், ஒருவரும் கூட வரவில்லை.
'போலீஸ் வரணும்.', 'அரசாங்க மருத்துவமனை ரொம்ப தூரத்தில இருக்கு...' என ஏகப்பட்ட முணு முணுப்புகள்.
சற்றே முன்புறம் நூறடிகள் தள்ளி தனியார் மருத்துவமனையைப் பார்த்த ஞாபகம் காளிக்கு இருந்தது.
'என்னோட பொறுப்பு! இவரை பக்கத்து ஆஸ்பத்தியில சேர்க்கவாவது உதவி பண்ணுங்க... ஒரு உயிரைக்காப்பாத்தணும்...'
பழனியை ஒரு பக்கம் பிடிக்கச் சொன்னான். குறைந்த பட்சம் அவனது லாரி முன் சீட்டில் வைக்கவாவது இரண்டு மூன்று நபர்கள் வந்தார்கள்.
மூச்சிரைக்க லாரியிலிருந்து இறக்கி தள்ளுவண்டியுடன் அவசரப் பிரிவில் அந்த பெரியவரைச்சேர்த்தபோது பத்து நிமிடங்கள் கரைந்திருந்தன. நல்லவேளையாக மூச்சு இன்னும் இருந்தது.
அவசர ஆபத்துப் பிரிவில் இருந்த நர்ஸ், 'என்ன ஆச்சு?' என்றாள்.
'உங்க ஆஸ்பத்திரிக்கு ஒரு நூறடி தள்ளி நெடுஞ்சாலையில விபத்து நடந்திடுச்சு. அதுதான் அவசரமா தூக்கிட்டு வந்தோம்...'
நர்ஸ் நோயாளியின் நிலைமையைப் பார்வையிட்டாள்.
'தலையில அடிபட்டிருக்குங்க. சாலை விபத்து கேஸ்னு வேற சொல்றீங்க... அரசாங்க ஆஸ்பத்திரி போயிருக்கணுமே...போலீஸ்கிட்டயும் சொல்லணும்...'
'சிஸ்டர் ! இப்ப தனியார் மருத்துவமனையிலேயும் சிகிச்சை தரலாம். போலீஸூக்குச் சொல்லிடலாம். நானே போன் பண்ணிடறேன். இப்ப இவர் உயிரைக்காப்பாத்தறது முக்கியம். மொதல்லஅதைப்பாருங்க...'
'சரி ! நான் பெரிய டாக்டர்கிட்டசொல்லிடறேன்... இவர் பெயர், விலாசம். எல்லாம் ஃபாரத்தில எழுதிக்குடுங்க. சிகிச்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஐம்பதாயிரம் பணம் கட்டிடுங்க...'
காளிக்குத் திக்கென்றிருந்தது.
'சிஸ்டர் ! இவர் யாருன்னுகூட எனக்குத் தெரியாது. விபத்து நடந்து இடத்தில போய்ப் பார்த்துட்டு வரேன். இவர் கார்ல ஏதாவது மொபைல் போன், விலாசம் ஏதாவது கிடைக்கலாம். சொந்தக்காரங்களுக்குத் தகவல் சொன்னா அவங்க வந்து கட்டுவாங்க. உங்களுக்கு வேண்டிய தகவல்களையும் தருவாங்க. இப்ப தலைக்காயத்தை மொதல்ல கவனியுங்க...'
'மன்னிச்சுக்குங்க... ஆஸ்பிடல் சட்ட திட்டப்படி நோயாளியோட விவரத்தோட முன்பணமும் கட்டியே ஆகணும். இன்சூரன்ஸ் இருந்தா பின்னால திருப்பித் தந்துடுவாங்க...'
சிஸ்டர் நகர முற்பட்டாள்.
'சிஸ்டர்! பெரிய டாக்டர் எங்க இருக்காங்க... நான் அவர்கிட்ட கேட்கிறேன்...'
சிஸ்டர் பதில் சொல்வதற்குள் பியூன் வந்து போய்க் கொண்டிருந்த அறை காளியின் கண்களில் பட்டது. உடனே அங்கு பாய்ந்துவிட்டான்.
சிஸ்டர் பின்னால் அலறிக்கொண்டே வந்தாள்.
பெரிய குளுகுளு அறை. கண்ணாடியும் ஸ்டெதாஸ்கோப்புமாய் அமர்ந்திருந்தவர் தான் அந்த பெரிய டாக்டர் என்பது காளிக்குத் தெரிந்தது.
அவசரம் அவசரமாக கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்த காளியை டாக்டர் அதிர்ச்சியுடன் கவனித்தார். பரட்டைத் தலை! உடையில் லாரி கிரீஸின் அழுக்கு... பல நாள்களாக சவரம் செய்யப்படாத கன்னங்கள்...
டாக்டர் வாயைத் திறக்கும் முன் காளி தன் முறையீடலைச் சொல்லி முடித்தான்.
'தம்பி! இது தனியார் மருத்துவமனை. எந்த அரசாங்க உதவியில்லாமலும் கட்டப்பட்டது. அத்தனை பேருக்கும் சம்பளம், ஆஸ்பத்திரி கட்டடச்செலவுக்கான கடனுக்கு கட்ட வேண்டிய பணம்னு அத்தனையும் நாங்க நோயாளிகிட்ட இருந்து வசூலிக்கிற பணத்திலிருந்துதான் செலவு செய்யறோம். பதினஞ்சு வருஷம் முன்னாடி என் படிப்புக்கே நான் எழுபது லட்ச ரூபாய் செலவு பண்ண வேண்டியிருந்தது...'
'இப்ப நீ கொண்டு வந்த நோயாளிக்கு யாரும் சொந்தக்காரங்களே வரலைன்னா நாங்க என்ன செய்யறது.. . எத்தனை பேருக்கு நாங்க இலவச சிகிச்சை செய்ய முடியும்? பேசாம அரசாங்க மருத்துவமனைக்கே கூட்டிட்டிப்போயிடு...'
'என்ன சொல்றீங்க டாக்டர்... அரசாங்க ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போகற வரைக்கும் இவர் உயிரோட இருப்பார்னு எனக்கு நம்பிக்கையில்லை... டாக்டர் தொழில் புனிதமானதுன்னுநான் உங்களுக்குச்சொல்லணுமா? மனிதாபிமானத்தோட இந்த உயிரைத் தயவுசெய்து காப்பாத்துங்க...'
முன்பின் தெரியாத உயிருக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கற... நீயே அந்த முன் பணத்தையும் கட்டிடேன். நாங்க சிகிச்சைய ஆரம்பிச்சிடறோம்.'
காளிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. பட்டென்று ஏதோ ஞாபகம்.
பேண்ட்பாக்கெட்டுக்குள்துருத்திக் கொண்டிருந்த ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் அவனுக்கு ஏதோ சொல்ல விழைந்ததுபோல் இருந்தது. அவற்றை எடுத்தான்.
'இது என்னோட சொந்தப் பணம் டாக்டர். கடைசி வீட்டுத் தவணைக்காக வச்சிருந்தேன். வீடு கையில வர அஞ்சு வருஷம் காத்திருந்தேன். இன்னிக்கு ஒரு வீட்டுக்கு சொந்தக்காரன் ஆகியிருக்கலாம். பரவாயில்ல. இன்னும் ஒரு வருஷம் என்னால் காத்திருக்க முடியும். ஆனா, இருபத்தஞ்சாயிரம் ரூபாய்தான் என்கிட்ட இருக்கு. தயவு செஞ்சு இதை முன்பணமா வச்சுக்கிட்டு நீங்க அடிபட்டிருக்கிறவரைக் கவனியுங்க. அதுக்குள்ளஅவங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களான்னு பார்க்கிறேன்.'
'அவ்வளவு மனிதாபிமானம் எங்ககிட்டயும் இருக்கு. தலைக்காயம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பண்ண வேண்டியிருக்கும். வயசானவர்னு சொன்னாய். இதயத்தின் செயலையும் பார்க்க வேண்டியிருக்கும். செலவு அதிகமாகவே இருக்கும். அதனால மீதிப்பணத்துக்கும் சொந்தக்காரங்க மூலமா வழி பண்ணிடு. இன்சூரன்ஸ் இருந்தா கம்பெனிகிட்டயும் பேசலாம்.'
டாக்டர் ஓடி வந்த நர்ஸிடம் ஆபரேஷன் தியேட்டரைத் தயார் செய்யச் சொன்னார்.
பெரிய டாக்டர் உத்தரவு கிடைத்ததுமே அனைவரும் இயந்திரம் போல் சுழன்றார்கள். விபத்தில் அடிபட்டவரைத் தள்ளுவண்டியுடன் ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்வதைப் பார்த்தவுடன் தான் காளிக்கு நிம்மதி பிறந்தது.
முன் பணத்தின் ரசீதை காளி பத்திரமாக பையில் வைத்துக் கொண்டான். பழனியை அழைத்தான். விபத்து நடந்த இடத்துக்குப் போய் யாராவது அடிபட்டவரின் உறவினர்கள் வந்திருந்தால் அவர்களை இங்கு அழைத்து வரச் சொன்னான். பின்னர் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆபரேஷன் தியேட்டர் வாயிலிலேயே அமர்ந்துகொண்டான்.
அடிபட்டவரின் உறைந்த குருதியை வழித்து சுத்தம் செய்த நர்ஸ் அத்தனை உபகரணங்களையும் பொருத்தினாள். பின்னர் பெரிய டாக்டரை அழைத்தாள்.
முகக்கவசம் அணிந்து கைகளில் உறைகளையும் அணிந்துகொண்டு டாக்டர் தயாராக வந்தார். நீலவிரிப்பால் மூடப்பட்டு இருந்த அடிபட்டவரின் இதயத்துடிப்பு போன்றவற்றை முதலில் கவனித்தார். நர்ஸ் எழுதி வைத்திருந்த குறிப்புகளை நோக்கினார். பின்னர் அடிபட்டவரின் தலைக்காயத்தைக் கவனிக்கக் குனிந்தார்.
அதிர்ச்சி !
டாக்டர் திடீரென நிலைகுலைந்தார். கிட்டத்தட்ட கீழே விழுந்து விடும் நிலை. அங்கிருந்த நர்சுகளுக்கும் ஜூனியர் டாக்டர்களுக்கும் திகைப்பு. நல்ல சாமர்த்தியமான ஒரு மருத்துவர் எப்படி மனோதிடத்தை இழந்தார் ?
அவர்கள் வாயெடுக்கும் முன் சுதாரித்துக்கொண்ட டாக்டர் சைகையாலேயே அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்பதைத் தெரிவித்தார். திடீரென அவரிடம் நிதானம், துரிதம் என இரண்டும் சேர்ந்து வெளிப்பட்டன. கண்களைப் பிரித்து சோதனையிட்டார். இதய இயக்கத்தைக் கவனித்த பிறகு அவருக்கு சற்று நிம்மதி பிறந்திருக்க வேண்டும். சி.டி. ஸ்கேன் பண்ணத் தயாராகச் சொன்னார்.
வெளியில் காளிக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென ஆபரேஷன் தியேட்டருக்குள் நர்சுகள், ஜூனியர் டாக்டர்கள் என ஒருவர் பின் ஒருவராக நுழைவு. யாரும் அவன் ஈனசுரத்தில் கேட்ட கேள்விக்கோ அவனது பரிதாப பார்வைக்கோ பதில் தரவில்லை. அடிபட்டவருக்குத் தீவிர சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
பழனியும் சிறிது நேரத்தில் வந்தான். விபத்து நடந்த இடத்தில் போலீஸ் இருக்கிறது; அவர்களுக்குத் தகவலும் கிடைத்திருக்கிறது; ஆனால் அடிபட்டவரின் சொந்தக்காரர்கள் எவரும் இல்லை எனத் தெரிவித்தான்.
காளிக்கு கிலி பிடித்துக்கொண்டது. செலவு அதிகமாகி டாக்டர் இன்னும் பணம் கேட்டால், என்ன செய்வது? காளி இதுவரை செய்யாத பிரார்த்தனைகள் எல்லாம் செய்துகொண்டிருந்தான். அப்படியே ஓடிவிடவும் முடியாது. ஓடவும் கூடாது. தனக்குத் தானே பேசிக்கொண்டும் இருந்தான்.
வயிறும் காலி. பழனிக்குப் புரிந்திருக்கவேண்டும். பழனி ஓடிப் போய் கேன்டீனிலிருந்து வாங்கி வந்த தேநீரை மட்டும் அமைதியாக வாங்கிக் கொண்டான்.
மூன்று மணி நேரங்கள் கழிந்திருந்தன. காளி தன்னை அறியாமல் சற்றே கண்ணயர்ந்திருந்தான். அவன் தோளை யாரோ தட்டி எழுப்புவது தெரிந்தது. பெரிய டாக்டர்.
'டாக்டர்! டாக்டர் ! அடிபட்ட பெரியவர் இப்ப எப்படியிருக்கார்? பிழைச்சுடுவார் இல்லையா?' காளி குழறினான்.
'நல்லவேளை! தலைக்காயத்தால கோமா கட்டத்துக்குப் போகல. ரத்த இழைப்பையும் கட்டுப்படுத்திட்டோம். அவரை ரொம்பவும் தாமதிக்காம ஆஸ்பத்திரியில சேர்த்த நீதான் அவர் உயிர் பிழைச்சதுக்குக் காரணம்...'
டாக்டர் காளியை அணைத்துக்கொண்டார். டாக்டர் கண்களிலிருந்து விழுந்த நீரும் காளியின் தோளை ஈரப்படுத்தியது.
காளியிடம் பேரதிர்ச்சி. சங்கடமாக இருந்தது. அதிகம் படிச்ச பெரிய டாக்டர் நம்மளபோய் கட்டிப் பிடிச்சிக்கிட்டு...
'டாக்டர் ! நான் வெறும்னு அவரை இங்க கொண்டுவந்து தான் சேர்த்தேன். ஆனா, அவரை நீங்க தான் உயிர் பிழைக்க வச்சீங்க. நீங்கதான் தெய்வத்துக்குச் சமானம்.'
'ஆனா, நான் காப்பாத்தினது என்னோட கடவுளுக்குச் சமமானவானரப்பா. அதுக்கு நீ தான் காரணம்...'
காளிக்கு டாக்டரின் வார்த்தைகள் திகைப்பைக் கொடுத்தன. 'டாக்டர் ! நீங்க சொல்றது எனக்கு விளங்கல...'
'தம்பி! அந்த அடிபட்டவர் வேறயாருமில்ல... என்னோட அப்பாதான். நல்லவேளையா வண்டி ஓட்டும்போது பெல்ட் போட்டிருந்திருக்கணும். அதனாலதான் பிழைச்சுக்கிட்டார். ஆனா, தேறி வர ஒரு மாதம் ஆகும். என்னைப் பார்க்கத்தான் வந்திட்டிருந்தார்னு நினைக்கிறேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு. அவர் போனும் எங்கேன்னு தெரியல. தெய்வம் மாதிரி நீதான் வந்து காப்பாத்தியிருக்கே... என்னை வளர்த்து ஆளாக்கிய அவருக்கு இதுவரைக்கும் ஒண்ணும் செய்யலையேன்னு வருத்தம் இருந்தது. அதையும் ஒருவிதத்தில நீ போக்கிட்டே...'
காளிக்கு எதுவும் பேசத் தெரியவில்லை. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு நகர முற்பட்டான்.
'தம்பி! நில்லு... உங்கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துகிட்டேன். அதுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம். நீ கட்டின முன் பணத்தைத் தயவு செய்து வாங்கிட்டுப்போயிடு...'
அடுத்த விநாடியே அதை மறுத்த காளி, 'இல்லைங்க ஐயா ! இந்த மாதிரி விபத்துகள்ல லாரி ஓட்டறவங்க நிறையப் பேரைப் பார்க்கிறோம். விபத்து நேரக் கூடாது; யாருக்கும் அடிபட்டு உயிர்ச்சேதம் ஆகக்கூடாதுன்னுதான் நினைக்கிறோம். ஆனா, யாரோ ஒருத்தர்அஜாக்கிரதையால இப்படி ஆயிடலாம்.
அப்ப பக்கத்தில இருக்கிற இந்த மாதிரி ஒரு ஆஸ்பத்திரிக்குத்தான் அவங்க ஓடணும். நான் கட்டின முன் பணம் உங்ககிட்ட ஒரு டெபாசிட் மாதிரி இருக்கட்டும். தப்பித்தவறி உங்க ஆஸ்பத்திரி பக்கத்தில ஏதாவது விபத்து நடந்துட்டா அவங்களுக்கு முதலுதவி செய்யவோ அல்லது தீவிர சிகிச்சை செய்யவோ இந்தப் பணத்தை நீங்க உபயோகப்படுத்திக்கலாம்...'
வெளியேற முற்பட்ட காளியை டாக்டர் நிறுத்தினார். அவர் முகத்தில் இப்போது பூரண தெளிவு!
'தம்பி ! மருத்துவ சேவை மட்டுமில்ல மனிதாபிமானமும் முக்கியம்னு காட்டி எங்க கண்களையும் திறந்துட்டே. சாலை விபத்துகளுக்கு முன் உதவி இலவசம்னு இப்பவே ஒரு போர்டை வெளியில மாட்டிடறேன். நீ தந்த பணத்தை முன்பணமா வச்சு ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கிறேன்.
நான் சொன்னா நிறைய கம்பெனிகள், டாக்டர்கள், சேவை மையங்கள் நன்கொடை தர தயாரா இருப்பாங்க. உங்கள மாதிரி வண்டி ஓட்டறவங்க அத்தனை பேருக்கும் இலவசமா மருத்துவ உதவிகள் செய்யவும் பின்னால ஏற்பாடு செய்யறேன். மொதல்ல குறைந்தபட்சம் இலவச முன் உதவியோட இந்த நல்ல காரியத்தைத் தொடங்கறேன்'.
காளி அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான். பின்னர் பழனியைக் கூட்டிக்கொண்டு வெளியேறினான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிரி... சிரி...
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

புள்ளிகள்

தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
