11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

News image
Updated On :46 நிமிடங்கள் முன்பு

சுஜாதா மாலி

'இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம். பட்டுக் கூடுகளில் இருந்து நூலிழையாகப் பெறப்படும் பட்டால் தயாராகும் வண்ணமயமான கலைப்பொருள்கள் உலகச் சந்தையை எட்டி இருக்கின்றன' என்கிறார் சிறுதொழில் முனைவர் மரகதமணி செந்தில்குமார்.

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட கோபிசெட்டிப்பாளையம் அருகே பாரியூர் வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பட்டுப் பூச்சி வளர்ப்பு அதிகமுள்ளது. பட்டுப் பண்ணை அலுவலகங்களுக்கு 'காகூன்' எனப்படும் பட்டுக் கூடுகளை உற்பத்தியாளர்கள் விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர். இவற்றில் இயற்கையான முட்டை வடிவம், அழகான நிறம், உறுதி, நீடித்த தன்மை என பிரத்யேகச் சிறப்புகள் உள்ளன. லேசான காகிதம் போல எடை குறைவாக இருந்தாலும் உறுதித்தன்மை அதிகம். எளிதில் வீணாகாது.

பட்டுப் புழுக்களின் வாயிலிருந்து சுரக்கும் இழை போன்ற ஃபைப்ரோயின், செரிசின் திரவங்கள் காற்றில் பட்டவுடன் நூலாக மாறுவதுதான் பட்டு இழை. சிறிய கூட்டில் 500 முதல் 1,000 மீட்டர் வரை நீளமுள்ள ஒற்றை இழை நூல் கிடைக்கிறது. பட்டுக்கூடுகளைத் துளையிட்டவுடன் கிடைக்கும் கூடுகள் இயற்கையான நிறத்தில் அழகாக, மென்மையாக இருக்கும். ஆனால் புழு பூச்சியாக மாறி துளைத்துவிட்டால் உள்புறம் கருத்து நிறம் மாறி விடும். இதனை எதற்கும் பயன்படுத்த முடியாது.

பட்டுக்கூடு என்பது முழுவதும் பட்டு இழைகளாலானதுதான். முதலில் தூய்மையான கூடுகளின் மேல் படர்ந்திருக்கும் அதன் இழைகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். இந்த இழைகளே பல நூறு மீட்டர் இருக்கும். வாழைத்தண்டு சுத்தம் செய்வது போன்றதுதான் இது. பின்னர் இயற்கையான முறையில் சாயம் தோய்க்க வேண்டும். பீட்ரூட், கேரட், மஞ்சள் சாறுகளில் ஊறவிட்டு சாயம் ஏற்றுகிறோம்.

வாடிக்கையாளர் கேட்கும் நிறத்தைத் தர வேண்டியிருந்தால், பட்டுப்புடைவைகளுக்கு உபயோகப்படுத்தும் நிறத்தை வாங்கிவந்து உபயோகப்படுத்துவதும் உண்டு. சாயம் ஏறியவுடன் அறை வெப்ப நிலையில் இரண்டு நாள்கள் உலர்த்த வேண்டும். வெயில் கூடாது.

பட்டுக்கூட்டின் அழகான வடிவத்துக்கு அதில் இருக்கும் 'செரிசின்' எனப்படும் பசைத்தன்மைதான் காரணம். அதன் தன்மை மாறாமல் வெட்ட வேண்டும். கூர்மையான ஸ்கால்பல் வகை கத்திரிக்கோலைப் பயன்படுத்தினால் மட்டுமே நேர்த்தியாக பூ இதழ்களைச் செதுக்க முடியும். பின்னர் பட்டுப் பூக்களை மென்மையாகத் துளையிட்டு கற்பனைக்கேற்றவாறு கோர்க்க வேண்டும். இடையிடையே தேவைக்கேற்ப செயற்கை மணிகள், கற்கள், ஜரிகை போன்றவற்றை இணைக்கும்போது அற்புதமான கலைப்படைப்புகள் தயாராகிவிடும்.

Story image

கைகளால் செய்ய வேண்டிய வேலை. எந்த இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவது கிடையாது. பொறுமையாக பல படிகளில் செய்ய வேண்டிய வேலை என்பதால் ஒரு குழுவாகச் சேர்ந்து செய்வது நலம்.

செயற்கை வண்ணம் தோய்த்துத் தயாரிக்கப்படும் காதணி, முடி கிளிப், ப்ரூச் போன்றவை பெண்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. விசேஷ நாள்களில் அவர்கள் அணியும் உடைக்கேற்ற நிறத்தில் பட்டுக்கூடு ஆபரணங்களை அணிகின்றனர். முகூர்த்தப் புடைவைக்கு இணையாகப் பட்டுப்பூ மாலைகளை வாங்குகின்றனர். ரசனைக்கேற்றவாறு உடைக்குப் பொருத்தமாகக் காதணிகள், தலையலங்காரப் பூக்கள், பூங்கொத்துகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

பட்டுக்கூடு பூக்கள் எத்தனை ஆண்டுகளானாலும் மங்கிப்போவது இல்லை. வீணாவது இல்லை. பட்டுப்புடைவைகளை எப்படிப் பாதுகாக்கிறோமோ அதே முறையைக் கையாள வேண்டும்.

ஒருமுறை வாங்கிவிட்டால் நெடுங்காலம் அப்படியே இருக்கும். நூறு சதவீதம் பிளாஸ்டிக் கலக்காதவை என்பதால், கடவுள், முன்னோர் வழிபாடுகளுக்காக இவற்றை வாங்குகின்றனர்.

பட்டுப் பூ ஹேர் கிளிப்புகள் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நூறு ரூபாய் முதல் இதன் விலை உள்ளது. கண்காட்சிகளிலும் இடம் பெறச் செய்து வருகிறோம்.

பூங்கொத்துகள், தோரணங்கள், வரவேற்பறை அலங்காரங்கள், சாவிக்கொத்துகள் போன்றவற்றை ஏற்றுமதியும் செய்கிறோம்.

பட்டுக் கூடுகளை பட்டுத் துறை அலுவலகங்களில் இருந்து வாங்கிக் கொண்டு நம் உழைப்பையும், கற்பனைத்திறனையும் மேற்கொண்டாலே போதும். பட்டுக்கூட்டின் விலையைப் பொறுத்து தயாரிப்பின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சாதாரணமாக கிலோ 900 ரூபாயில் கிடைக்கும் பட்டுக் கூடு சில நேரங்களில் ரூ.2 ஆயிரம் வரையில் விற்கும். இவற்றின் செய்முறை, உற்பத்தி, வணிகம் குறித்த வழிகாட்டுதல்களை அரசு பட்டுத் துறையினர் அளிக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவருடன் கடையை நடத்திவந்த நான், ஒருவார காலப் பயிற்சியைப் பெற்று தொழில் முனைவோர் ஆகியுள்ளேன்' என்கிறார் மரகதமணி செந்தில்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.