படப்பிடிப்பில் தீபிகா; குழந்தை வளர்ப்பில் ரன்வீர்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் வெளியான 'துரந்தர் 2' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால், படம் இந்த அளவுக்கு அதிக வசூலைக் கொடுத்த பிறகும் ரன்வீர் சிங் புதிய படம் எதிலும் பங்கேற்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
அதோடு ரன்வீர் சிங் இப்போது வீட்டை விட்டு வெளியில் வராமல், தனது மகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். ரன்வீர் சிங் மனைவியான நடிகை தீபிகா படுகோனே தற்போது குழந்தையை மும்பையில் விட்டுவிட்டு நடிகர் ஷாருக்கானுடன் 'கிங்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வெளிநாடு சென்று இருக்கிறார்.
எனவே அவர் திரும்பி வரும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலையை ரன்வீர் சிங் செய்து வருகிறார். தனது வேலைகளுக்கு பிரேக் கொடுத்துவிட்டு குழந்தையைக் கவனித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொழிலில் ஆதரவாக இருப்பது குறித்து பாலிவுட்டில் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தீபிகா படுகோனே அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்படி இருந்தும் ஷாருக்கான் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று இருக்கிறார். ஷாருக்கானும், தீபிகா படுகோனேயும் தண்ணீரில் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. 'கிங்' படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சில நாள்களுக்கு தீபிகா படுகோனே தென்னாப்பிரிக்காவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தந்தை, தாய் ஆகியோரின் இரண்டு வேலையையும் ரன்வீர் சிங் செய்து வருகிறார்.
ரன்வீர் சிங்குக்கும், 'டான் 3' படத்தயாரிப்பாளர் பர்ஹான் அக்தருக்கும் இடையே இருந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது. பாலிவுட் நடிகர்கள் அமீர்கான் போன்ற பிரபலங்கள் இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு முடிவு கண்டுள்ளனர்.
ரன்வீர் சிங், 'டான் 3' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ரூ.10 கோடி முன்பணமும் வாங்கினார். அவரை நம்பி தயாரிப்பாளர் தரப்பில் இடம் தேர்வு போன்ற படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது.
ஆனால், ரன்வீர் சிங் திடீரென இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ரன்வீர் சிங் தங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பர்ஹான் அக்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது பேச்சுவார்த்தையில் ரன்வீர் சிங் வாங்கிய முன்பணம் ரூ.10 கோடியைத் திரும்பக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
மகன் வளர்ப்பு குறித்து மாதவன்!
திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளியான 'துரந்தர் 2' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அண்மையில் மாதவன் தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், தனது மகன் வேதாந்த் மாதவனை வளர்த்த விதம் குறித்து சில சுவாரஸ்யமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
அவரின் பேட்டியில், 'குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களை விவரங்கள் தெரியாமல் வளர்ப்பது அல்ல; மாறாக அவர்களுக்கு உலகத்தின் எதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பதாகும். அதுவே சிறந்தது.
வேதாந்தை மிகச்சிறு வயதிலிருந்தே பெரியவர்களைப் போலவே மதிப்பளித்து வளர்த்தேன். குறிப்பாக, பெரும்பாலான பெற்றோர்கள் பேசத் தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல், பாலியல் பாதுகாப்பு, கருத்தடை போன்ற விஷயங்களைப் பற்றி, வேதாந்த் டீன்-ஏஜ் பருவத்தை எட்டுவதற்கு முன்பே, அதாவது அவரின் 4 வயதிலிருந்தே நான் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசி வருகிறேன். இது அவருக்கும் எனக்குமான நம்பிக்கையை அதிகரித்தது.
இந்த வெளிப்படையான அணுகுமுறை வேதாந்த்துக்கு என் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியதோடு, அவரை ஒரு பொறுப்புள்ள இளைஞராக மாற்றவும் உதவியுள்ளது.
சினிமா நட்சத்திரத்தின் வாரிசாக இருப்பதால் ஏற்படும் தேவையற்ற செல்வாக்கு, புகழின் இருண்டப் பக்கங்கள், பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது போன்ற வாழ்வியல் பாடங்களையும் அவருக்கு முன்கூட்டியே கற்றுக்கொடுத்தேன். இதன் மூலம் வெளி உலக அழுத்தங்களை வேதாந்த் எளிதாகக் கையாள முடியும் எனக் கருதினேன்.
பல தந்தைகள் தங்கள் பிள்ளைகள் தங்களின் திரைப் பயணத்தைத் தொட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், நான் இதில் முற்றிலும் மாறுபடுகிறேன். எனது மகன் என் நிழலில் வளராமல், தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.
அதனால்தான் தற்போது சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்று வரும் வேதாந்த், நான் அவருக்குக் கொடுத்த அந்தச் சுதந்திரத்தையும், முதிர்ச்சியையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி வருகிறார்' என்றார்.
தாவூத்தை பாராட்டும் வர்மா!
பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவரது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் தனது பேட்டியில், 'தாவூத் இப்ராஹிமால்தான் எனது பிழைப்பு நடக்கிறது. எனது வெற்றிக்கு தாவூத் இப்ராஹிம்தான் காரணம். அவர் இல்லையென்றால், என்னால் 'சத்யா', 'கம்பெனி' போன்ற வெற்றிப்படங்களை எடுத்திருக்க முடியாது.
இந்தத் திரைப்படங்கள் என்னை பாலிவுட்டில் தனியாக அடையாளப்படுத்திக் காட்டியது. அதோடு இந்தப் படங்கள்தான் எனக்கு இப்போதும் வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கதைக்களங்களால்தான் தனது வாழ்க்கையும் பொருளாதார நிலையும் உயர்ந்தது. எனவே எனது சுயசரிதையை முதலில் அந்தத் தாதாவுக்குத்தான் அர்ப்பணித்தேன். ஆனால், வெளியீட்டாளர்கள் அந்தப் பெயரை நீக்கிவிட்டனர்.
1990-களில் பல இயக்குநர்களுக்கு நிழல் உலக தாதாக்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்தபோது, எனக்கு ஒரு மிரட்டல் அழைப்புகூட வந்ததில்லை. தாதாக்கள் எனது படங்களை நேசித்தனர். தாதாக்களின் வாழ்க்கையைத் திரையில் மனிதாபிமானத்துடன் காட்டியதால், அவர்கள் என்னை ஓர் ஆத்ம நண்பராகப் பார்த்தனர்' என்று அவர் குறிப்பிட்டார்.
தாவூத் இப்ராஹிமை ராம் கோபால் வர்மா பாராட்டிப் பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பான செய்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் கடுமையாக தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனம் சொன்னபடி செய்தேன்.. நாட்டுக்கே முன்னோடியான பஞ்சாப் சிறுவன்!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

கோலிவுட்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
