19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

பொறியாளரின் 40 ஆண்டு உழைப்பு!

'பெரிய தொழிற்சாலையான பூமியில் வீணாக்கும் பொருள்களே உணவாகுகிறது. மாணவராகப் பிறந்தோம்.

News image

Picasa

Updated On :24 மே 2026, 4:03 am IST

'பெரிய தொழிற்சாலையான பூமியில் வீணாக்கும் பொருள்களே உணவாகுகிறது. மாணவராகப் பிறந்தோம். மாணவராக வளர்ந்தோம். மாணவராக மறைய வேண்டும். கடல் போன்றது அறிவு. படிக்கப் படிக்க என்ன படிக்கவில்லை என்பது தெரிய வரும். உலகில் காணக் கிடைக்கும் அறிவை முழுமையாகப் பெறுவதற்கு ஏழாயிரம் பிறவிகள் எடுத்தால் போதாது. உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பான நமது உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும்' என்கிறார் பொறியாளர் பி.டி.ரவீந்திரா.

அவர் உலக அளவில் புகழ் பெற்ற பெங்களூரில் விஸ்வேஷ்வரய்யாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், மறுசுழற்றி அடிப்படையிலான பல புதுமையான சிந்தனைகளைக் காட்சிப்பொருளாக்கி அருங்காட்சியமாக்கி இருக்கிறார்.

பெங்களூரு பனசங்கரியில் உள்ள 'கலாஸ்பூர்த்தி ஹாபி மியூசியம்' என்ற பெயரில் மூன்றடுக்கு மாடியில் 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில் தனது நாற்பதாண்டு உழைப்பைச் செலுத்தியுள்ள பி.டி.ரவீந்திராவுக்கு தற்போது வயது எண்பத்து ஏழு. இந்த வயதிலும் மாணவர்களுக்கு எளிமையான செய்முறைகளில் அறிவியலைக் கற்றுத் தருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'பெற்றோர் பி.எஸ்.தேவதாஸ் - சரஸ்வதி ஆகியோரே எனது வழிகாட்டிகள். கார் டயர் பஞ்சராகிவிட்டால், அதை சரிசெய்ய என்னை அனுப்புவார் என் தந்தை. இளம் வயதில் இருந்தே அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் ஈடுபட்டு வந்தேன். பொறியியலில் இயந்திரவியல் பட்டம் பெற்றேன். ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் 21 ஆண்டுகள் பணியாற்றினேன். 1981-ஆம் ஆண்டு எனது 41-ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றபோது, அந்த நிறுவனத்தில் பராமரிப்புப் பிரிவில் தலைமைப் பொறுப்பு வகித்தேன்.

பணியின்போது, இயந்திரங்களுக்குத் தேவையான நட், போல்ட்டுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைக் கவனித்தேன். தூக்கி எறியப்படும் பொருள்களில் புதுமையான இயந்திரங்கள், கருவிகளைத் தயாரித்தேன். இதனால் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் 60 சதவீதம் குறைந்ததால், என்னை ஹெச்.ஏ.எல். நிறுவனம் பாராட்டியது.

ஒருமுறை பெங்களூரில் உள்ள ஜே.சி.சாலையில் சென்றபோது, சாலைத் தடுப்பாக வேட்டி, சேலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தைச் சீராக்க விளக்குகள், தடுப்பான்கள், சார்ஜர்கள், ஒலிப்பெருக்கி கொண்ட போக்குவரத்து உபகரணத் தொகுப்பை தயாரித்து, அதற்கு 'தீர்காயுஷ்' என்று பெயரிட்டேன். அறிவியல் இயங்கியலை எளிமையான செய்முறைகளில் இளைய தலைமுறையினருக்குப் பயிற்றுவித்தேன்.

மூன்று மாடிகளிலும் என்னென்ன?

அருங்காட்சியகத்தைத் தொடங்க, எனது வீட்டை மாற்றிஅமைத்தேன். அருங்காட்சியகத்துக்குத் தேவையான அறிவியல் பொருள்களை எனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தொழிலகப் பட்டறையில் தயாரித்தேன்.

மூன்று மாடிகள் கொண்ட அருங்காட்சியகத்தில் பல புதுமையான பொருள்களைக் காட்சிப்படுத்தியுள்ளேன். தரைத்தளத்தில்அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் கருவிகள், மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. மறுசுழற்சியில் தயாரித்த பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களை வைத்துள்ளோம். இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் வெட்கிரைண்டர்களை அந்தக் காலத்திலேயே தயாரித்தேன்.

அந்த வெட்கிரைண்டர்களுடன் சைக்கிள் பொருத்தப்பட்டிருக்கும். சைக்கிளை மிதித்தால், வெட்கிரைண்டர் வேலை செய்யும். இது பெண்களுக்கு உடற்பயிற்சியையும், மாவு அரைக்கும் வேலையையும் செய்து கொடுத்தது. சமையறையில் வைக்கக்கூடிய சுழலும் அஞ்சறைப் பெட்டி, குறைந்த இடத்தைப் பயன்படுத்தும் கட்டிலாக மாறும் மடிக்கக் கூடிய 4 பேர் உட்காரும் இருக்கைகள், உலோகப் பூந்தொட்டிகள், உலோக இருக்கைகள், ஜேக்கப்ஸ் ஏணி, உயர் வோல்டேஜ் ஏறும் வளைவு போன்ற பல பொருள்களை வைத்துள்ளேன்.

முதல்மாடியில் அறிவியல் அறிஞர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கோட்பாடுகளை விளக்கும் பலவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையான முறையில் அறிவியலை விளக்கியுள்ளேன். கழிவுநீர்க் குழாய்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள பெரிஸ்கோப், சூரியகிரகணம், சந்திரகிரகணம் போன்றவற்றை விளக்கும் மாதிரிகள் உள்ளன. அறிவியல் அறிஞர்களின் பொன்மொழிகளையும் ஆங்காங்கே எழுதி வைத்துள்ளேன்.

Story image

இரண்டாவது மாடியில் உள்ள காட்சியரங்கத்துக்கு எனது தாய் சரஸ்வதியின் பெயரைச் சூட்டி, 'அம்மா சரஸ்வதி உலகம்' என்று அழைத்திருக்கிறோம். மூன்றாவது மாடியில் எனது மனைவி விமலாவின் பெயரில் தியான மண்டபத்தை அமைந்திருக்கிறோம்.

பொழுதுபோக்காகச் செய்த பொருள்களை கண்காட்சியாக வைத்திருக்கிறேன். இதைப் பார்வையிட கட்டணம் எதுவும் இல்லை. எனவே, எல்லோரும் இங்கு வந்து அறிவியல் அறிவைப் பெறலாம்.

எனது அருங்காட்சியகத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஊடக நண்பர் ஒருவர், தனது வலையொளிப்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அதன்பிறகு அருங்காட்சியகத்துக்கு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியதால், அருங்காட்சியகத்தை ரோட்டரி சங்கத்தினர் தத்தெடுத்துள்ளனர். தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி நேரம் வரையில் அருங்காட்சியகம் திறந்திருக்கும். வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வரும் மாணவர்களும் அருங்காட்சியகத்துக்கு வருகை தருகின்றனர்.

வரலாற்றைப் பாதுகாப்பேன்:

ஒருமுறை இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றபோது, ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊருக்குச் சென்றேன். அந்த நகரத்தையும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் வீட்டையும் பார்த்து ரசித்தேன். அங்கிருந்து பெங்களூருக்கு வந்ததும், மாணவர்களை அழைத்துக் கொண்டு கன்னடக் கவிஞர்களின் வீடுகளுக்குச் சென்று வந்தேன். அந்த கவிஞர்களோடு கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து 2003-இல் நூலாக வெளியிட்டேன்.

இந்தியாவின் பண்டைய அறிவை வெளிப்படுத்தும் வகையில், 'சனாதன தர்ம வால்மீகி மந்திரா திட்டம்' என்ற பெயரில் வேதபாடசாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். அங்கு யோகா, வேதங்கள், பண்டைய கலை, நாட்டியம் குறித்த வரலாற்றை பதிவு செய்ய உள்ளேன்' என்கிறார் பொறியாளர் பி.டி. ரவீந்திரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.