ஊர்க்கட்டுப்பாடு!
கிராம மக்களின் உடல் நலத்தைப் பேணும் வகையில், மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சமயநல்லூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில் 'பீடி, சிகரெட் விற்கப்படுவதில்லை' என்ற தகவல் வியப்படச் செய்கிறது.
கிராம மக்களின் உடல் நலத்தைப் பேணும் வகையில், மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சமயநல்லூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில் 'பீடி, சிகரெட் விற்கப்படுவதில்லை' என்ற தகவல் வியப்படச் செய்கிறது. இதற்கு கிராம மக்களும், வியாபாரிகளும் ஆதரவளிக்கின்றனர்.
'இது எப்படி சாத்தியமாயிற்று?' என்று ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோனைமுத்துவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
'தேனூர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவான கிராமம். இருபது அடியில் கிடைக்கும் நிலத்தடி நீர் தேன் போல சுவையாக இருப்பதால், 'தேனூர்' என்று பேர் வந்துள்ளது. இங்கு குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். விவசாயம் நன்கு செழிக்கும் பகுதியும்கூட!
பழங்காலத்தில் மதுரை சித்திரைத் திருவிழா தேனூரில்தான் நடந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் 'தேனூர் வெத்தலையும், மானூர் சுண்ணாம்பும்' என்கிற சொல்லாடல் இடம் பெறுகிறது.
தேனூர் ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட கடைகளில் சுருட்டு, பீடி, சிகரெட் விற்கக் கூடாது என்கிற ஊர்க் கட்டுப்பாடு ஆண்டாண்டு காலமாக இருக்கிறது.
இதன் பின்னணி என்ன?
நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கிராமத்தில் கரைக்காரர்கள் என்று அழைக்கப்படும் பெரிய மனிதர்கள் இருந்தனர். அப்படி ஒரு கரைக்காரர் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் தீப்பெட்டி கேட்டார்.
இதனால் அதிர்ந்துபோன கரைக்காரர் சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட யாரும் பீடி பிடிக்கக் கூடாது என்று கூறி, ஊரில் இருக்கும் கடைகளில் இருக்கிற சுருட்டு, பீடி, சிகரெட் போன்றவற்றை எடுத்துவந்து கொளுத்தி விட்டார்.
பின்னர் அவர் ஊர் மக்களிடம், 'இன்றிலிருந்து நான் சுருட்டு பிடிப்பதை விட்டு விடுகிறேன். இனிமேல் ஊரில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், சுரு ட்டு போன்ற புகையிலைப் பொருள்களை விற்கக் கூடாது' என்று உத்தரவு போட்டார். அதுதான் இன்றைக்கும் தொடர்கிறது. அதுமட்டுமல்ல! மதுவுக்கும் அனுமதி கிடையாது. இப்படி பல விஷயங்களுக்கு தேனூர் கிராமத்தினர் கட்டுப்பட்டு இன்றளவும் நடக்கின்றனர்' என்கிறார் சோனைமுத்து.
இதுகுறித்து கிராமத்துவாசி ரபீக் ராஜா கூறியது:
'தேனூரில் பீடி, சிகரெட் விற்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. இஸ்லாமியர்களும், இந்து மக்களும் ஒன்றாக மாமன் - மச்சான் என்ற உறவு முறையோடு வாழ்கிறோம். கோயில் திருவிழாவுக்கு நாங்களும் வரி கொடுப்போம். சுவாமி வீதியுலா வரும்போது, பள்ளிவாசல் அருகே நிறுத்தி வைப்பார்கள். நாங்கள் அனைவரையும் வரவேற்று குளிர்பானங்களை அளிப்போம். எங்கள் பள்ளிவாசலுக்கு விசேஷம் என்றால் அவர்கள் வருவார்கள்.
பள்ளிவாசலின் புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு இவ்வூரின் அனைத்து சமூக மக்களும் சீர்வரிசைகளுடன் ஒன்றுசேர்ந்து வந்து சிறப்பித்தனர். நாங்களும் மாலை, மரியாதை அளித்து உபசரித்தோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

