சிட்டுக்குருவிகளுக்கு 15,000 கூடுகள்...
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினம் சிட்டுக்குருவி. உருவத்தில் சிறியவை.
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினம் சிட்டுக்குருவி. உருவத்தில் சிறியவை. பொதுவாக, இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சென்னையில் வசிக்கும் 'கூடுகள்' கணேசன் (38) மூன்று மாநிலங்களில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
நகர்ப்புறச் சூழல் மாறிவருவதால், சிட்டுக்குருவிகள் தங்களுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் கூடு கட்டும் இடங்களைக் கண்டறிவதில் சிரமப்படுகின்றன. சரியான சூழல் அமைக்கப்பட்டால், சிறிய இடத்தைக்கூட பறவைகளுக்கு உகந்த புகலிடமாக மாற்றமுடியும் என்பதை கணேசன் நிரூபித்து வருகிறார்.
அவர் சொல்வது:
'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிராமப்புறச் சூழலியலுடன் வளர்ந்தவன். இயந்திரப் பொறியியலில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற நான், பல துறைகளில் பணியாற்றியுள்ளேன். சிட்டுக்குருவிகள் தொடர்பான பணிகளை 2014-இல் தொடங்கினேன். 2020 முதல், பள்ளிகளில் சிட்டுக்குருவி பாதுகாப்புப் பணிகளை முன்னெடுத்தேன்.
மாணவர்கள் தயாரிக்கும் கூடுகள்
சிட்டுக்குருவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கூடுகளைத் தயாரித்தல், நேரடிப் பாதுகாப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களை இந்தப் பணியில் இணைத்தேன். இந்த முயற்சிகளுக்காக 'கூடுகள் அறக்கட்டளை' யை உருவாக்கினேன்.
தற்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களில் 80- க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் சிட்டுக் குருவிகளுக்காக கூடுகள் அமைத்து வருகிறேன். மாணவர்களால் சுமார் 15,000 பறவைக் கூடுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
ஒரு பள்ளி வளாகத்தை சிட்டுக்குருவிகளுக்கு உகந்த இடமாக மாற்ற விரும்பினால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலில் அந்த வளாகத்தில் பறவைகள் வாழ என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பறவைகளைத் தொந்தரவு செய்பவர்கள் அல்லது வேட்டையாடுபவர்கள் அந்தப் பகுதியில் உள்ளனரா என்று கணிக்க வேண்டும்.
சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான உணவு, நீர், தங்குமிடம், கூடு கட்டும் வாய்ப்புகள், இனப்பெருக்கத்துக்கான பாதுகாப்பான இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும் விதமாக தங்கும் இடம் அமையவேண்டும்.
சில சமயங்களில் மக்கள் கூடுகளை வைத்தால், தானாகவே சிட்டுக்குருவி குடியேறி வாழத் தொடங்கிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படியே, சிட்டுக்குருவிகள் கூட்டில் வசிக்கத் தொடங்கினாலும், மாணவர்கள் அடிக்கடி போய் கூட்டைப் பார்ப்பார்கள்.
அதிகப்படியான வெளிப்புறக் குறுக்கீடுகள், பறவைகளுக்கு இடையூறு விளைவிக்கும். பறவைகள் வசிக்கும் கூட்டை அடிக்கடி திறந்து பார்க்கக்கூடாது. பறவைகளுக்குப் பொருத்தமான சூழல்களை உருவாக்குவதுடன், பறவைகள் அவற்றை இயல்பாகப் பயன்படுத்த அனுமதிப்பதும் நமது பங்காக இருக்க வேண்டும்.

அதிகரிக்கும் எண்ணிக்கை
'கூடுகள்' அமைப்பின் பணிகளில் ஒன்றாக, வட சென்னையில் உள்ள ஆர்.பி.சி .மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 150 சிட்டுக்குருவி கூடுகள் வைக்கப்பட்டன. ஆறு மாதங்களுக்குள், சிட்டுக்குருவிகள் கூடுகளில் வசிக்க ஆரம்பித்துவிட்டன. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு ஒரு கற்றல் அனுபவமாக மாறியது. ஓராண்டு காலத்தில், பள்ளி வளாகத்தில் சிட்டுக்குருவிகளின் நடமாட்டமும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது.
சில மாணவர்கள், தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினர். இதன் விளைவாக, சிட்டுக்குருவியை வெறும் பறவையாக மட்டும் பார்க்காமல், நம்முடன் ஒரே சூழலைப் பகிர்ந்து கொள்ளும், ஓர் அங்கமாக புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
பள்ளி வளாகம் முழுவதும் கான்கிரீட் கட்டடங்களாக இருந்தால் என்ன செய்வது? எல்லாப் பள்ளிகளிலும் பெரிய மைதானங்களோ, வளர்ந்த மரங்களோ அல்லது தோட்டங்களோ இருப்பதில்லை. பசுமை மிகக் குறைவாக உள்ள வளாகங்களில், வெறும் கூடுகளை அமைத்தால் பறவைகள் வந்துவிடும் என்று முடிவு செய்யக் கூடாது. சிறிய அளவிலான பொருத்தமான செடிகளை வளர்க்கலாம். ஏற்கெனவே செடிகள் இருந்தால், அவற்றைப் பராமரித்துப் பாதுகாக்கலாம்.
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு
இந்த ஆண்டு, வேலூர் வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் எனக்கு சிட்டுக்குருவி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, உணரித் தொழில்நுட்பம், பிம்ப ஆய்வு மற்றும் ஒலி ஆய்வு போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வாறு சிட்டுக்குருவி பாதுகாப்புக்கு உதவக்கூடும் என்பதை நான் ஆராய்ந்து வருகிறேன்.
'கூடுகள்', மக்கள் தாங்கள் காணும் சிட்டுக்குருவிகள், அவை வசிக்கும் இடங்களைப் பதிவு செய்ய உதவும் கைப்பேசி செயலி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் பறவைகளின் ஒலியை அடையாளம் கண்டு, அவை எந்த இனத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய முடியும். இந்த அமைப்பு சிட்டுக்குருவிகள் மட்டுமின்றி, பல்வேறு பறவை இனங்களையும் அடையாளம் காணும் வகையில் செயல்பட்டு வருகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

