பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தமிழரின் கடல் வணிகம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழரின் முதுமொழி. பண்டைத் தமிழகம் பல்லவர், சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் பன்னெடுங்காலம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது.

இந்தோ ரோமானிய துறைமுகநகரம் (அரிக்கமேடு அகழாய்வு)

Published On :

மு. வெங்கடேசன்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழரின் முதுமொழி. பண்டைத் தமிழகம் பல்லவர், சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் பன்னெடுங்காலம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. மூன்று கடல்களையும் கொண்ட தீபகற்ப பகுதியில் தமிழகம் அமைந்திருந்ததால், 2800 ஆண்டுகளுக்கும் முன்பே செங்கடல் பகுதிக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் தமிழர்கள் கடல்வணிகம் செய்துவந்துள்ளனர்.

தமிழர்களின் கடல் கடந்த வணிகத் தொடர்புகளும் பயணங்களும் குறித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், கடல்சார் வரலாறு கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் (ஓய்வு) பேராசிரியர் சு. இராசவேலு விளக்குகிறார்:

'சோழர்கள் இன்றைய திருச்சிராப்பள்ளி எனப்படும் உறையூரைத் தலைநகரமாகவும், காவேரிப்பூம்பட்டினத்தை தங்களின் துறைமுக நகரமாகவும் கொண்டு ஆட்சி செய்தனர். பாண்டியர்கள் மதிரையை (இன்றைய மதுரை) தலைநகரமாகக் கொண்டும், புகழ்பெற்ற கொற்கை நகரைத் தங்களின் பிரதான துறைமுக நகரமாகக் கொண்டும் ஆட்சி செய்தனர்.

இதேபோன்று தமிழகத்தின் மேற்குப் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள், தங்களது தலைநகரமாக கருவூர் வஞ்சியையும், மேற்குக் கடற்கரையில் முசிறித் துறைமுகத்தையும் கொண்டிருந்தனர்.

நீண்ட கடற்கரையைக் கொண்ட பண்டையத் தமிழகத்தில் மேற்சொன்ன மூன்று முக்கியத் துறைமுகங்கள் தவிர, பல புகழ்பெற்ற துறைமுகங்கள் இருந்தன. வடக்கில் பழவேற்காடு தொடங்கி, கிழக்குக் கடற்கரையில் எண்ணிறைந்த பெரிய, சிறிய துறைமுகங்கள் இருந்தன.

பழவேற்காடு, மாதரசன் பட்டனம் எனப்பட்ட மதராஸ் பட்டனம், மைலாப்பூர், நீர்ப்பெயற்று (மாமல்லபுரம்), எயிற்பட்டினம் (மரக்

காணம்), அரிக்கமேடு, காவேரிப்பூம்பட்டினம், நாகை, தொண்டி, அழகன்குளம், கொற்கை, குமரி, சாலியூர், விழிஞம் போன்ற பெரும் துறைமுகங்களும், மேற்கில் முசிறி, தொண்டி, கொல்லம் போன்ற துறைமுக நகரங்களும் இருந்தன.

சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்ட காவேரிப்பூம்பட்டினம் எனப்படும் புகார் நகரம், சோழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கி வந்தது. இந்நகரம் மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரவும் பகலும் செயல்படும் துறைமுக நகரமாக விளங்கியது.

பொருள்களுக்கு வரிகள் விதிக்கப்பட்டு பொதிகளில் அரச முத்திரை குத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நங்கூரம் இட்டிருந்தன. இதனை பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றன.

காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்கள் சீன நாட்டுடனும், தென்கிழக்காசிய நாடுகளுடனும் வணிக உறவுகள் மட்டுமன்றி, அரசியல் ரீதியான உறவுகளையும் கொண்டிருந்தனர் என்பதை பல்லவர்களின் வாயலூர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அதுமட்டுமன்றி பல்லவர்கள் வெளியிட்ட நாணயங்களில் கப்பல் உருவம் பொறித்த நாணயங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன.

சீனாவிலிருந்து வரும் பெரிய நாவாய்களுக்கு வங்காள விரிகுடா ஒரு வழித்தடமாக இருந்தது. செங்கடல், மத்தியத் தரைக்கடல் பகுதி நாடுகளுக்குச் செல்ல சீனர்கள் தமிழகத் துறைமுகங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

பட்டினப்பாலையில் பல நாவாய்களை அதன் நூலாசிரியர் குறிப்பிடும்பொழுது, சீனக்கப்பலான தூங்கு நாவாய் என்ற பெரிய வகை கப்பலைக் குறிப்பிடுகின்றார். இந்நாவாய் இன்றைக்கும் சீனர்களால் பொருள்களை ஏற்றிச் செல்லவும், பயணிகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படும் கப்பலாக உள்ளது. இதனை அவர்கள் 'ஜுங்' என வழங்குவர். தெற்காசிய நாடுகளில் இன்றளவும் இவ்வகைக் கப்பல்களை 'தொங்கான்' என வழங்குவர்.

சென்னைக்கு வடக்கில் உள்ள பழவேற்காடு துறைமுக நகரம் விஜயநகரப் பேரரசு காலத்தில் அனந்தராயன் பட்டனம் என வழங்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த மன்னராக விளங்கிய கிருஷ்ணதேவராயரின் நாகலாபுரம் கல்வெட்டில் இத்துறைமுகத்தில் வந்திறங்கிய சரக்குகளுக்கு வரி விதிக்கப்பட்டதையும், அவ்வாறு வந்த கப்பல் ஒன்று தொங்கு கப்பல் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு

சீனாவில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு

அரிக்கமேடு அகழ்வாய்வு

புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்ற இடத்தில் அகழாய்வு செய்யப்பட்டதில், தமிழர்கள் மத்தியத் தரைக்கடல் நாடுகளுடன் வாணிக உறவை வைத்திருந்ததை அறிய முடிகிறது. ரோமாபுரி நாட்டைச் சேர்ந்த உயர் வகை மது தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. 'ஆம்போரா' எனப்படும் ஜாடிகளில் ரோமானியர்கள் எடுத்து வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய அரிட்டனின் என்னும் மட்கலன்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. மேலும் இவ்வகை மட்கலன்கள் கீழடி, அழகன் குளம் ஆகிய அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன.

ரோமானிய நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தோர் தமிழக அரசவைகளிலும் கடற்கரை நகரங்களிலும் பணியமர்த்தப்பட்டனர். மதுரை அரசவையில் அத்

தகைய வீரர்கள் இருந்ததையும், சோழ நாட்டின் புகார் துறைமுகத்தை ரோமானியர்கள் காவல் காத்தமையையும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள் தமிழக வீரர்களின் அங்க அமைப்பிலிருந்தும், உடை அமைப்பிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு விளங்கினர் என பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு குறிப்பிடுகின்றது.

குதிரையை அடக்கும் சவுக்கினை வளைத்து, தங்களது இடைக்கச்சையில் கட்டியிருந்த யவனர்கள் அணிந்திருந்த ஆடை உடலோடு ஒட்டி, தடித்த தோல் அங்கி போன்று இருந்தது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரக்குகளை இறக்கும் யானைகள்

பாண்டியர்களின் துறைமுக நகரமாக விளங்கிய இன்றைய அழகன் குளம் அகழாய்வில் வெளிநாட்டைச் சார்ந்த பல்வகை மட்கலன்கள் கிடைத்துள்ளன. இங்குக் கிடைத்த பானை ஓடுகளில் கப்பல் பொறித்த மூன்று ஓடுகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் இரண்டு வெவ்வேறு வகையான நாவாய்களாக உள்ளன. இது சீனக்கப்பலான தூங்கு நாவாயாகவும் இருக்கலாம்.

காற்றிலே அசைந்தாடும் பாய்மரக் கப்பல், அதன் மேலே கொடியுடன் பறக்கும் உயர்ந்த கம்பம். பாய் மரத்தைக் கட்டிய கயிறுகளின் பாங்கு போன்றவை அச்சிறிய பானை ஓட்டில் அழகாக கீறலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஓட்டில் படகிலிருந்து சரக்குகளை யானை ஒன்றைக் கொண்டு இறக்குகின்றனர்.

இக்கண்டுபிடிப்புகள் மூலம் அழகன் குளம் துறைமுகம் சங்க காலத்தில் மிகச் சிறந்த துறைமுக நகரமாக விளங்கியிருந்ததை நமக்குத் தெரிவிக்கின்றன.

கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனம் ஆகிய நாடுகளுடனும் மத்திய தரைக்கடல் நாடுகளுடனும் கடல் வாணிகம் மேற்கொண்டிருந்தனர்.

மத்திய தரைக்கடல் நாடுகளுடன் எளிதாக வாணிகம் செய்ய மேலைக்கடற்கரையில் இருந்த துறைமுகங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக சேரர்களின் துறைமுக நகரமான முசிறி மிகச் சிறந்த துறைமுகமாக அக்காலத்தில் விளங்கி வந்தது. முசிறி பெரியாற்றின் கரையில் அமைந்திருந்தது. இத்துறைமுக நகரில் பெரியாற்றின் இரு கரைகளிலும் பண்டக சாலைகள் பல அமைந்து இருந்தன. இவற்றில் ஏற்றுமதி செய்யப்படவேண்டிய பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் குவிந்திருந்தன. பல வெளிநாட்டு வணிகர்கள் இந்நகரில் இருந்தனர்.

அலெக்சாந்திரிய அருங்காட்சியகத்தில் கிடைத்த பெப்ரஸ் ஆவணம் ஒன்று, கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஒன்றாம் நூற்றாண்டு ஆவணமாகும். இவ்வாவணம் முசிறி துறைமுகத்தில் இருந்து செங்கடல் பகுதிக்கு வாணிகம் சென்ற தமிழ் வணிகன் அலெக்சாந்திரிய வணிகருடன் கடன் வாங்கியதற்கான ஒப்பந்தப் பத்திரமாகும். இவ்வாவணத்தில் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொருள்கள் எவை, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்கள் எவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்பொருள்கள் இன்றைய கப்பல் அளவில் ஏழு கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு ஈடானவை.

பிரமிடு சுவரில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்து

பிரமிடு சுவரில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்து

தமிழ் வணிகர்களின் பெயர்கள்

மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கு தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் வாணிகம் செய்துவந்துள்ளனர். சூயஸ் கால்வாய் செங்கடலையும் மத்தியத் தரைக்கடலையும் இணைக்கின்ற கால்வாய். அக்கால்வாய் 1869- ஆம் ஆண்டு முதல்தான் கப்பல்கள் கடந்து செல்வதற்காக செயற்கையாக வெட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

அவ்வாறெனில், மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு தமிழ் நாட்டு வணிகர்கள் எவ்வாறு சென்றனர் என்பதை அலெக்சாந்திரிய பாப்ரஸ் ஆவணம் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஆப்பிரிக்க கிழக்குக் கரைப்பகுதிகளில் செங்கடலை ஒட்டி இரண்டு துறைமுக நகரங்கள் உள்ளன. ஒன்று குசிர் அல் குவதாம் என்ற துறைமுக நகரம், மற்றொன்று பெரினிகே. இவ்விரு நகரங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. அகழாய்வுகளில் இந்தியப் பொருள்கள், மட்கல ஓடுகள், குறிப்பாக 7 கிலோ அளவுடைய மிளகு இருந்த பானை கண்டுபிடிக்கப்பட்டது. பானை ஓடுகள் சிலவற்றில் பண்டைத் தமிழ் எழுத்துப் பொறிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. சாதன், கொற்ற பூமான் ஆகிய தமிழ் வணிகர்களின் பெயர்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டன.

இவ்விரு துறைமுகங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் தங்களது நாவாய்களை இத்துறைமுகங்களில் இறக்கி, அங்கிருந்து மேற்கிலிருந்த நைல் நதிக் கரை நகரங்களுக்குச் சரக்குகளை ஒட்டகத்தின் வழியாக ஏற்றி, நைல்நதிக்கரையில் நங்கூரம் இட்டிருந்த நாவாய்களில் அவற்றை மீண்டும் ஏற்றி, வடக்கில் மத்தியத் தரைக்கடலில் நைல்நதி கலக்கும் முகத்துவராத்தில் இருந்த அலெக்சாந்திரியாவுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்து சரக்குகள் மீண்டும் மத்திய தரைக்கடலைக் கடந்து, அன்றைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணப்பட்டன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் சுற்றிய கடலோடிகளாக தமிழர்களே விளங்கினர் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

அலெக்சாந்திரிய நகரில் இருந்த ஒரு பெரும் தனவந்தரிடம் முசிறியில் இருந்து சென்ற வணிகன் கடன் வாங்குவதை விளக்கும் அலெக்சாந்திரிய பாப்ரஸ் ஓலை ஆவணம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து இடும் பகுதி கிழிந்துள்ளது. முசிறி வணிகனின் கையெழுத்து தமிழில் இடப்பட்டிருக்கவேண்டும். தமிழகத்திலிருந்து நறுமணப்பொருள்களும், மயில் தோகை, அகில், சந்தனம், தேக்கு, யானைத் தந்தம், அணிமணிவகைகள், முத்து போன்றவை வெளிநாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டன. இதனை அக்கால அயலக வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர்.

காற்றறிந்து, திசையறிந்து கலத்தை கடலில் செலுத்தும் வல்லமை உடையவர்களாக தமிழர்கள் விளங்கினர்.

Story image

கடல் கொள்ளைக்காரர்களை வீழ்த்திய சேர அரசர்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முசிறியிலிருந்து கலங்களையும் பெரிய நாவாய்களையும் அரபிக் கடலில் செலுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இந்திய தீபகற்பத்தை ஒட்டி கடற்கரை ஓரப்பகுதிகள் வரை முசிறியிலிருந்து நாவாய்கள் குஜராத் கத்தியவார் பகுதி வரை சென்று, அப்பகுதியிலிருந்து தான் மேற்கு நோக்கிப் பயணித்தன. அவ்வாறு செல்லும்பொழுது வழியில் கடற்கொள்ளைக்காரர்களின் ஆதிக்கமும் அதிக அளவில் இருந்தன. கடல் கொள்ளைக்காரர்களை சேர அரசர்கள் வீழ்த்தினர்.

கடல்பிறகோட்டிய செங்கோட்டு வேல் என்னும் அரசர், கடம்பர் எனும் கடல் கொள்ளையர்களை வேரறுத்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

எனவே வணிக மரக்கலங்களுக்குத் துணையாக படையுடன் அரச நாவாய்களும் அக்காலத்தில் பயணித்தன. நடுக்கடலில் துறைமுக நகரங்களை ஒட்டிச் சென்ற கப்பல்கள் செங்கடலுக்குச் செல்ல குறைந்தது மூன்று மாதங்கள் ஆயின. வழியில் ஓமன் கடல் பகுதியில் தெற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த சில துறைமுகங்களில் இந்நாவாய்கள் நங்கூரம் இட்டு நின்று தங்களுக்கு வேண்டிய உணவு, குடிநீர் ஆகியவற்றை நிரப்பிக்கொண்டு மீண்டும் செங்கடல் நோக்கிப் பயணித்தன.

அண்மையில் ஓமன் தெற்குப் பகுதியில் கோர் ஒரி என்ற துறைமுக நகரில் நடத்தப்பட்ட அகழாய்வில் '..ந்தை கீரன்' என்னும் தமிழ்ப் பெயர் பொறித்த பானை ஓடு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது இதனை உறுதி செய்கின்றது.

தமிழ் வணிகர்கள் அக்காலத்தில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், அய்யப்பொழில், நானதேசி போன்ற குழுக்காக உலக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

மணிக்கிராமத்தார், ஐந்நூற்றுவர் குறித்த கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனம் ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. அங்கு நிரந்தரமாகக் குடியேறியும் உள்ளனர். அப்பகுதிகளில் பல கோயில்களும் கட்டியுள்ளனர்.

13 -ஆம் நூற்றாண்டில் சீனாவில் குப்ளாய்கான் மன்னர் உடல் நலம் குன்றி இருந்தமையால், அவர் உடல் நலம் சீர்பெற இறைவனை வேண்டி சம்பந்த பெருமாள் என்பவர் சேஷங்கீஸ்வரர் என்னும் பெயரில் சிவாலயம் ஒன்றைக் கட்டியதை சீனாவில் குவான்ஷொ என்ற இடத்தில் கிடைத்த தமிழ் மற்றும் சீன மொழிகளின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

தாய்லாந்தில் கிடைத்த பொன் உரசிப்பார்க்கும் கல்

தாய்லாந்தில் கிடைத்த பொன் உரசிப்பார்க்கும் கல்

கடலில் மூழ்கிய நகரம்

தமிழகத்தின் பல துறைமுகங்கள் கடலால் காலவெள்ளத்தால் அழிந்தன. குறிப்பாக, புகார் எனப்படும் பூம்புகார் நகரம் சுனாமியால் அழிந்துள்ளது. இன்றைக்கு 5 கி.மீ. தொலைவுக்கு கடலில் மூழ்கிய நகரமாக இது விளங்குகிறது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழக அரசு இப்பகுதியில் கடலில் அகழாய்வுகள் செய்ய முனைப்பு காட்டி வருகின்றது. வருங்காலத்தில் இதன் மூலம் கடலால் அழிந்த பூம்புகாரின் வரலாறு முழுமையாக நாம் அறியும் வாய்ப்பு உள்ளது.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.