வரலாறு காட்டும்  செங்கல் கட்டடக் கலை

அண்மையில் நடைபெற்ற  கீழடி அகழாய்வில் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட தொன்மையான கட்டடப்பகுதிகளும்,
வரலாறு காட்டும்  செங்கல் கட்டடக் கலை

அண்மையில் நடைபெற்ற  கீழடி அகழாய்வில் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட தொன்மையான கட்டடப்பகுதிகளும், உறைகிணறுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரமான களிமண்ணைப் பிசைந்து வடிவமைத்து அதனை நெருப்பில் இட்டு (சூளையில் இட்டு) பயன்படுத்தியுள்ளனர். சுட்ட செங்கற்களைக் கொண்டு இல்லங்கள், மாளிகைகள், அரண்மனைகள், கலங்கரை விளக்கம் போன்றவை கட்டப்பட்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

பண்டைய கட்டடங்கள் முறையோடு கட்ட மனைநூல்கள் இருந்தன. "நூலோர் பண்டிழைத்த மரபினது தான்' என்று சிலம்பு கூறுகிறது.

சங்க காலத்தில் பொதுவாகக் கட்டடங்கள் செங்கற்கள் - மரங்கள் கொண்டு கட்டப்பட்டவையாக விளங்குகின்றன. செங்கற்கள் "இட்டிகை' என இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் காணலாம்.

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் என்ற அகநானூற்றுப் பாடல் (167) கூறுகிறது. "இட்டிகை புரிசை' (மதில் சுவர்) என்ற குறிப்பும் (பாடல் 287) காணப்படுகிறது.

இட்டிகை - இஷ்டகம்:  இட்டிகை என்பது வடமொழியில் "இஷ்டகம் என அழைக்கப்படுகிறது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (590-630) பாறையைக் குடைந்து குடைவரைக் கோயிலை முதன்முதலில் உருவாக்கியவன். மண்டகப்பட்டுக் குடைவரைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டு விசித்திரசித்தனாகிய தான், பிரம்மா, சிவன், திருமாலுக்குச் செங்கல் (இஷ்டகம்) இன்றி, மரமின்றி, உலோகம் - சுதை இல்லாமல் எடுப்பித்தேன் என்று கூறுவதைக் காணலாம்.

திருக்கோயில்களின் கட்டுமான அமைப்பில் "ஆத்யேஷ்டகம்', "ஆன்ம இஷ்டகம்', "மூர்த்தி இஷ்டகம்' என்ற மூன்று வகை செங்கற்களை இடும் வழிபாட்டு நெறி வழிகளை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன என முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார். எனவே தான் கோயில் மற்றும் கட்டடப்பணி துவங்குவதற்கு முன்பாக செங்கற்கள் இடப்பட்டு வழிபாடுகளுடன் பணி துவங்கப்படுகிறது.

"இட்டிகை' என்ற சொல் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.  திருவாரூரில் பங்குனி உத்திர நாளில் அடியார்களுக்கு வேண்டியன அளிக்க இறைவனிடம் பொன் வேண்டி சுந்தரர் பெருமான் திருப்புகலூர் திருத்தலம் வருகிறார். இறைவனை வணங்கிய பின்னர் உறங்கச்செல்கிறார். திருப்பணிக்காக வைக்கப்பட்டுள்ள இரண்டு செங்கற்களை தன் தலைக்குத் தலையணையாக வைத்து உறங்கினார். 

உறங்கி எழும்பொழுது அவை பொன்னால் ஆன கற்களாக மாறியது கண்டு மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியைக் கூறும் பாடல்களில் செங்கற்கள், "சுடுமட்பலகை' என்றும், வெற்றிவிடையார் அருளாலே வேமண்கல்லே விரிசுடர் செம்பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவன் அருள்போற்றி என்று குறிப்பிடப்படுவதைக் கண்டு மகிழலாம். கருவூர்த்தேவர் தாம் அருளிய திருவிசைப்பாவில் (ஒன்பதாம் திருமுறை) திருவிடைமருதூர் இறைவனைப் போற்றும் பொழுது "என் மீது அன்பு வைத்து கடுமையான செந்தீயினால் சுடப்பட்ட செங்கற்களைப் போன்று மேண்மை பொருந்தியவர்' எனப் போற்றப்படுகிறார். அவர் தம் பாடலில் ""செந்தீப்பட்ட இட்டிகை போல் விழுமியோன்'' என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

நன்னிலம் வட்டத்தில் உள்ள திருப்புகலூர் அக்னீசுவரர் கோயிலில் காணப்படும் இரண்டாம் ராஜராஜசோழனது கல்வெட்டில் இக்கோயில் பழுதுபட்டு கிடப்பதை எடுத்துரைக்கிறது. செங்கற்களால் திருப்பணி செய்ய தானம் அளிக்கப்பட்டதை "இக்கோயில் ஜீரணித்து (பழமை அடைந்து) அழிவுபட்டுக் கிடக்கையில் கோயிலும் திருமண்டபமும் சுற்றுத் திருப்பணிகளும் உடையார் கோயிலும் இட்டிகையாலே செய்விக்க கடவதாகவும்' என்று சுட்டிக்காட்டுகிறது. திருப்புகலூர் கோயில் மதில் சுவர் முன்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோர் ஒன்றிணைந்து கருங்கல்லால் கட்டினர் என்பதை கி.பி. 1751- ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

கும்பகோணம் அருகில் திருவைகாவூர் என்ற சிறப்புமிக்கத்  திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் செங்கற்களால் கட்டப்பட்டு விளங்கியது. இதனை, "திருவைகாவுடைய மகாதேவர் கோயிலும் முன்பு இஷ்டிகையாய் ஜீரணித்தமையில் இக்கோயில் இழிச்சித் (இடித்து) திருக்கற்றளியாக (கற்கோயிலாக) கட்ட அரசனது அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்டது ‘ என்று குலோத்துங்க சோழனது கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. செங்கற்கோயிலாக இருந்த திருக்கோடிக்காவல் விருத்தாசலம், ஆடுதுறை, குத்தாலம், திருவாரூர், செம்பியன்மாதேவி போன்ற பல கோயில்களைச் கற்றளிகளாக மாற்றிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவியும், உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவியாரை சேரும்.

செங்கல் - வரலாற்றுச் சான்றுகள்: சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அருளிய திருப்பாவையில் (பாடல் - 14) ""செங்கல் பொடிக்கூறை வெண்பற்றவத்தவர்'' என்று குறிப்பிடுகிறார். செங்கல் நிற காவி உடை அணிந்த துறவியர் பற்றிய குறிப்பு இப்பாடலில் கூறப்படுகிறது.

திருக்கோயில் கட்டுமானத்தில் செங்கற்கள் முக்கிய இடம் பெறுகிறது. கோயிற் கலை பற்றிய செய்திகளை கூறும் "மயமதம்' என்ற சிற்ப நூலில் செங்கற்கள் தயாரிக்கும் முறை பற்றி "திரவிய பரிகிரஹம்' என்னும் 15-வது அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள கூரம் என்ற தொன்மையான ஊர். பல்லவமன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் (670- 700) காலத்தில் அமைக்கப்பட்டது. இவ்வூரில் கிடைத்த கூரம் செப்பேடு வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்ததாகும். இவ்வூரில், வித்யாவினீத பல்லவ பரமேசுவர கிருகம் என்ற சிவன் கோயிலை எடுப்பித்தான். கோயிலுக்கு வேண்டிய செங்கல் சூளையினை ஊருக்கு வெளியே அமைப்பதற்கு நிலம் வாங்கி அளித்ததைக் கூரம் செப்பேடு விரிவாகக் கூறுவுதைக் காணலாம்.

நன்னிலம் வட்டம் திருவீழிமிழலை திருக்கோயிலில் காணப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டில் அவ்வூரில் இருந்த திருச்சிற்றம்பலமுடையார் திருமடம் செங்கற்களால் கட்டப்பட்டதை ""செங்கல் மடமாய்'' என்று கல்வெட்டு குறிக்கிறது. திருப்புறம்பியம் கோயில் கல்வெட்டில் திருக்கோயில் பணிக்காக இருந்த "செங்கல்' பற்றிய குறிப்பு காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் மண்ணீசுவரர் கோயிலுக்கு விஜயநகர மன்னர் இம்மடி நரசிங்கராயர் காலத்தில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. அவற்றில் ஒரு நிலத்தினை ""செங்கல் சூளை தடிக்குழி'' என்று கல்வெட்டு பெயரிட்டு அழைக்கிறது. பெருநகர் கோயில் கல்வெட்டில் "இட்டிகைப்பட்டு' (பற்று) என்ற குறிப்பு காணப்படுகிறது. செங்கல் தயாரிப்பதற்காக அளிக்கப்பட்ட நிலம் எனக் கருதலாம்.

செங்கல் எழுத்துப் பொறிப்பு: காஞ்சிபுரம் அருகே நவாசிப்பேட்டை என்ற சிற்றூரில் உள்ள காசிவிசுவநாதர் கோயில் மடப்பள்ளி, செங்கற்கட்டடமாக உள்ளது. அதில் ஒரு செங்கல்லில் "நவாசிப்பேட்டை விசுவநாதன் சுவாமிக்கு முனியன் என்பவர் திருப்பணி செய்வித்தார்' என்ற 18-ம் நூற்றாண்டு எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது. இதே போன்று சதுர வடிவமுள்ள செங்கல்லில் கிரந்த எழுத்துப் பொறிப்புடன் காணப்படும் செங்கல் விழுப்புரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரிலிருந்து சேகரிக்கப்பட்டு விழுப்புரம் ஆசிரியர் வீரராகவன் சேகரிப்பில் உள்ளது.

அகழ்வாராய்ச்சிகளில்: தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் செங்கற்கட்டடப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மாங்குளம், மாமல்லை (சாளுவன்குப்பம்), பட்டரைப்பெரும்புதூர், காஞ்சிபுரம், கொற்கை, சேந்தமங்கலம், படைவீடு, தரங்கம்பாடி, பாஞ்சாலங்குறிச்சி மற்றும் அரிக்கமேடு (புதுச்சேரி மாநிலம்) போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் அகழாய்வில் கட்டடப்பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கங்கைக்கொண்ட சோழபுரம்:

குறிப்பாக ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு சோழர் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் "சோழ கேரளன் திருமாளிகை', "கங்கை கொண்ட சோழன் மாளிகை' என்ற பெயரில் மாளிகைகள் இருந்ததாக கல்வெட்டுகள் வழியே அறிகிறோம். கோயிலுக்கு மேற்கே உட்கோட்டை செல்லும் வழியில் மாளிகைமேடு என்ற பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சோழர்கால அரண்மனையின் அடித்தளப் பகுதிகள் வெளி செங்கற்கட்டடத்தில் 37 வரிசை செங்கற்கள் உடையதாகவும், இரட்டைச் சுவர் உடையதாகவும், இம்மாளிகை அமைக்கப்பட்டதை அறிய முடிந்தது. செங்கற்கட்டுமானத்தில் புதைக்கப்பட்டிருந்த சதுரவடிவிலான கருங்கற்கள் மரத்தூணின் அடித்தளப்பகுதியாக அமைந்ததும் அறியப்பட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்து விளங்கிய சோழர்கால கட்டடக்கலையின் நுணுக்கம், சிறப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வு பெரிதும் உதவுகிறது.

தொடர்ந்து விஜயநகர, நாயக்க மன்னர்கள், மராத்திய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களும் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் செங்கற்களால் திருக்கோயில் கோபுரங்கள், வெளவால் நெற்றி மண்டபம், சத்திரங்கள், படித்துறைகள், பாலங்கள் போன்றவை கட்டப்பட்டன.

இத்தகைய கட்டடங்களை சோழ நாட்டில் அதிக அளவில் காணமுடிகிறது. சோழ நாட்டில் வலிமையான கருங்கற்கள் கிடைக்காத காரணத்தால் செங்கற்களை வைத்து கருங்கற் கோயிலைப் போன்றே அலங்கார அமைப்புடன் கட்டியுள்ளதைக் காணலாம். 

செங்கற்களை நெருப்பில் சுடுவதற்கு முன்பாக வேண்டிய அமைப்பில் வடிவமைத்து கட்டியுள்ளதை பல திருக்கோயில்களில் காண முடிகிறது. செங்கற்களுக்கு இடையில் காணப்படும் சாந்து மிகவும் மெல்லியதாக இருக்கும். மேலும் மிகவும் வலிமையுடைய சாந்தாகத் தயாரித்து இக்கட்டடங்களை எழுப்பியுள்ளனர். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் காலத்தில் ஒரத்தநாடு, முக்தாம்பாள் சத்திரம், நீடாமங்கலம் - யமுனாம்பாள் சத்திரம் போன்றவை அழகு மிக்க செங்கற்கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. மராத்திய மன்னர்கள் திருக்கோயில்களில் செங்கற்களால் தளவரிசை அமைத்தும், திருப்பணிகளும் செய்துள்ள செய்தியை மராத்தியர் கால கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

கீழடி அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட செங்கல் கட்டடப்பகுதிகளைக் கண்டு வியக்கிறோம். நம் முன்னோர்களின் கட்டடக்கலை திறமையைப் போற்றுகிறோம். 

சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேலாக செங்கற்கட்டடப் பகுதிகள் நல்ல நிலைமையில் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். சங்க காலத்திலிருந்து தொடர்ச்சியாகச் செங்கற்கட்டடக்கலை தமிழகக் கட்டடக்கலை வரலாற்றில் ஒரு சிறப்பிடம் பெற்று விளங்குவதை வரலாற்றுச் சான்றுகளால் அறிந்து பெருமை கொள்கிறோம்.

கட்டுரையாளர் : தொல்லியல் துறை(ஓய்வு) சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com