தி.ஜானகிராமன் நூற்றாண்டு: தி.ஜானகிராமனின் நாவல்களில் பெண்கள்!

""பெண்ணைத் தெய்வமாக வணங்கினால் உனக்கு ஏதாவது கிடைக்கிறதா?'' என்று கேட்டான் பாபு. 
தி.ஜானகிராமன் நூற்றாண்டு: தி.ஜானகிராமனின் நாவல்களில் பெண்கள்!


""பெண்ணைத் தெய்வமாக வணங்கினால் உனக்கு ஏதாவது கிடைக்கிறதா?'' என்று கேட்டான் பாபு.
""ஒன்றும் கிடைக்கவில்லை. மனது சுத்தமாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது'' என்றான் ராஜம்.
""நீ எப்படி வணங்குகிற வழக்கம்?''
""அவர்களுடைய முகத்தை இதயத்தில் வைத்துக் கொண்டு வணங்குகிறதுதான்''

- "மோகமுள்' நாவலில் தி.ஜா.


ஜானகிராமன் ராஜமாகத்தான் தன்னை இருத்திக் கொண்டு தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் பெண்களை உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. பெண்களின் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் நேசமும் கொண்ட ஒருவரால்தான் இத்தகைய பெண்களைப் படைக்க முடிந்தது என்பதில் இரண்டாவது அபிப்பிராயம் இல்லை.

"மோகமுள்'ளில் வரும் யமுனா வாசகர் மனதில் எட்ட முடியாத உயரத்தில் வீற்றிருப்பவளாக இருக்கிறாள். யமுனாவின் ஒப்பற்ற அழகும் பாபுவுக்கு அவள் மேல் உண்டான தவிப்பும் ஜானகிராமனின் நாவலைப் படிக்கும் வாசகர்கள் பலரையும் கவர்ந்து (எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, பிரபஞ்சன், சுகுமாரன், இதை எழுதும் ஸிந்துஜா ஆகியோரை ) கதை நிகழ்ந்த இடமான கும்பகோணத்துக்குச் சென்று துக்காம் பாளையத் தெருவில் இருந்த யமுனாவின் வீட்டைத் தேட வைத்திருக்கிறது !

ஜானகிராமனின் நாவல்களில் வரும் பெண்களின் அழகு பெண்களையே கலவரப்படுத்துகிறது. ஆண்களை வெறுத்து ஒதுக்கும் பெண்ணியவாதிகளை ஜானகிராமனை விட அவரது பெண்கள் அதிகமாகப் பாதிக்கிறார்கள்.

ஜானகிராமனின் "மோகமுள்' யமுனா, "உயிர்த்தேன்' செங்கம்மா, அனுசூயா , "மலர்மஞ்சம்' பாலி, "அன்பே ஆரமுதே' டொக்கி , ருக்மிணி, "மரப்பசு' அம்மிணி "செம்பருத்தி' புவனா ஆகிய பெண்கள் தத்தம் வாழ்க்கையில் காட்டும் பரஸ்பர அன்பு, மனிதாபிமானம், புத்திசாலித்தனம் நிரம்பிய பேச்சு, பரிவு ஆகியவை ஒரு தேர்ந்த வாசகனின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. சூழலுக்கு ஏற்ப சில மனிதர்கள் பெருந்தன்மையுடன் வாழ்வது மட்டுமல்ல, வேறு சிலர், அயோக்கியத்தனத்தில் புரளுவதும், பற்றிப் பேசி யதார்த்த உலகு இவர்களால் ஆனது என்று அழுத்தமாகக் கூறுகின்றன அவரது நாவல்கள்.

தி.ஜா.வின் பெண்கள் பொதுவாக உண்மைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மிக அந்தரங்கமானவர்களிடம் உண்மையைக் கூறி வாழ்வதில் அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் அந்தரங்கமான விஷயங்களில் உண்மையைத் தவிர்த்து விடும் ஒருவருக்கு, ஜானகிராமனின் பெண்கள் தம்மை மிகவும் வெளிப்படையாகக் காண்பித்து நடமாடும் தருணங்கள் அவர் மனதில் அதிர்ச்சி அலைகளை உருவாக்குகின்றன.

கல்யாணமான தன் மீது வெறித்தனமான அன்பு கொண்டு மூன்றாம் மனிதனான பழனி தன்னை அணைத்து விட்டதைத் தன் கணவனிடம் செங்கம்மா வந்து சொல்வதும் (உயிர்த்தேன்), மனைவி, பையன், பெண் என்று குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் செல்லப்பா அவர் வேலை வாங்கிக் கொடுத்து முன்னேற்றிவிடும் சிவசாமியின் மனைவி மங்களம் மீது கொள்ளும் உறவை ஒரு நாள் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் மங்களம் செல்லப்பாவின் மனைவியிடம் தானே முன்வந்து கடிதம் மூலம் தெரிவித்து விடுவதும் (குறுநாவல் "அடி') வாசகர்களை அதிர்ச்சி அடையச்செய்யலாம். இம்மாதிரிப் பெண்களை வாழ்வில் சந்திக்க முடியுமா என்று வாசகனுக்குத் தோன்றக் கூடும். ஆனால் அவர்கள் தமக்குத் தாமே நேர்மையாக இருப்பதுதான் முக்கியம் என்று உறுதி பூண்டவர்களாக வாழ நினைக்கையில் இது சாத்தியம்தான்.

சிறுகதைகளில் வரும் அவரது பெண்களின் பார்வை நவீனத்துவத்தையும் தைரியத்தையும் காண்பிக்கின்றன. தி. ஜா ஏன் ஆண்-பெண் உறவைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதினார் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஏன் கூடாது என்பதும் ஒரு முக்கியமான பதில்தான்.

வாழ்க்கையில் அது ஓர் அடிப்படையான அம்சம்; அதை மறுத்துக் கொண்டே வாழ்வதில் அர்த்தம் இல்லை. பெண் விடுதலை என்பது அவள் உடுத்தும் துணிமணியிலோ, ஆணைப் போல் வெளியே சென்று வேலை பார்ப்பதிலோ மட்டும் இல்லை; பெண்களுக்கான பாலியல் சுதந்திரத்தை ஒரு பெண் அடைவது பெண் விடுதலைக்கு அடிப்படையான ஓர் அம்சம் என்று அவர் நம்பினார். அதையே எழுதிக் காட்டவும் செய்தார்.

இலக்கியச் செயல்பாடுகளும் மனிதர்களை போல வித்தியாசங்களை உள்ளடக்கியவாறு இருக்கின்றன. உண்மையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் ஓர் இலக்கியவாதி, பெரும்பான்மையான ஜனசமூகத்தின் போக்குகளுக்கும், நிர்பந்தங்களுக்கும் குடை பிடித்துச் செல்ல மறுக்கிறான். அவனது தரிசனத்தின் தேடலில், அவன் கண்டு கொண்ட உண்மைதான் பிரதானம் வகிக்கும். இது சமூகம் ஏற்படுத்தியிருக்கும் நியதிகளுக்கு, குனிந்து சென்று ஒப்புதல் பெற முயலும் போக்கை மறுக்கும் வலிமை வாய்ந்தது. ஜானகிராமனின் எழுத்தில் பெண்மையின் இத்தகைய தரிசனத்தை நாம் கண்டு உணர முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com