Enable Javscript for better performance
மில்கா சிங்கின் ஒலிம்பிக் கனவு!- Dinamani

சுடச்சுட

    மில்கா சிங்கின் ஒலிம்பிக் கனவு!

    By - சத்தீஷ் வைத்யா  |   Published on : 23rd July 2021 10:09 PM  |   அ+அ அ-   |    |  

    sk2

     

    இந்திய - பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து மதக் கலவரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம், பாகிஸ்தானுடன் இணைந்த மேற்கு பஞ்சாபில் ஹிந்துக்களும் சீக்கியர்களும்ஈவிரக்கமில்லாமல் மதவெறி பிடித்த கும்பல்களால் கொல்லப்பட்டனர்.

    கோவிந்தபுரா என்கிற கிராமத்திலுள்ள சீக்கிய குடும்பத்தின் 15 குழந்தைகளில் ஒருவர் மில்கா சிங். வன்முறைக் கும்பலுக்குப் பயந்து அந்தக் குடும்பம் கிராமத்தைவிட்டு தப்பியோடியது.

    துரத்தி வந்த கும்பலின் கொலை வெறிக்கு ஆளானார்கள் மில்கா சிங்கின் பெற்றோரும் உடன் பிறந்த பலரும். "ஓடு மில்கா ஓடு' என்று தப்பியோடச் சொல்லி தந்தையின் அவலக் குரலைக் கேட்டு ஓடத் தொடங்கினான் அந்தச் சிறுவன்.

    அப்போது பயத்தில் ஓடத் தொடங்கிய அந்தச் சிறுவனின் ஓட்டம், ஒலிம்பிக் பந்தய மைதானம் வரை அவனை அழைத்துச் செல்லும் என்று அப்போது யார் நினைத்திருக்க முடியும்?

    உயிருக்கு பயந்து தன்னை கொலை செய்ய துரத்தி வந்த கும்பலிலிருந்து தப்பியோடிய அந்தச் சிறுவன், கண்ணில் தென்பட்ட ரயில் நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் ஏறி இருக்கைக்குக் கீழே பதுங்கினான்.

    அது பெண்கள் பெட்டி என்று அவனுக்குத் தெரியாது. அவலக் குரலுடன் தப்பியோடும் பலரும் அந்த ரயிலில் தஞ்சமடைந்தனர். 14 வயது மில்கா சிங்கும் அந்த ரயிலில் பயணித்து தில்லி வந்து சேர்ந்தார்.
    தில்லியில் திருமணம் செய்து கொடுத்திருந்த சகோதரியின் வீட்டைத் தேடி அலைந்து ஒருவேளை உணவுக்காக கையேந்தி நின்றான் பாகிஸ்தானிலிருந்து அகதியாக ஓடிவந்த அந்தச் சிறுவன். அடைக்கலமாய் வந்த சிறுவன் சகோதரியின் குடும்பத்தாரால் பாரமாகக் கருதப்பட்டார். வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்.

    தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஒருவேளை உணவுக்காகவும் அலைந்து திரிந்த அந்தச் சிறுவனை பட்டாளத்தில் போய்ச் சேரும்படி, அவரைப்போல உயிர் பிழைத்து தப்பிவந்த மூத்த சகோதரர் மக்கன் சிங் உபதேசித்தார்.

    ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, செகிந்திராபாதில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் என்ஜினியரிங் சென்டரில் அவர் நியமிக்கப்பட்டதும் வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது. உயிருக்கு பயந்து ஓடத் தொடங்கிய மில்கா, இப்போது ஒரு கோப்பைப் பாலுக்காக ஓட முற்பட்டார்.

    செகிந்திராபாதில் ராணுவத்திற்கான "கிராஸ் கன்ட்ரி' ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. அதில் முதலாவதாக வரும் 10 பேருக்கு நாள்தோறும் ஒரு கோப்பைப் பால் அதிகமாக வழங்கப்படும் என்று கேள்விப்பட்ட மில்கா, அதில் கலந்து கொள்கிறார்.

    ஒரு கோப்பைப் பாலுக்காக ஓடி ஆறாம் இடத்தைப் பிடித்த மில்காவின் அந்த ஓட்டம், இந்தியாவுக்காக ஒலிம்பிக் வரை ஓடுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்குப் பிறகு மில்கா சிங்கின் வாழ்க்கை ஓட்டமயமானது.

    ஒரு மாதம் முன்பு கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபோது மில்கா சிங்கால் அதை நம்ப முடியவில்லை. என்னை எப்படி இந்த நோய் தாக்கியது என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. அவரை மட்டுமல்ல, அவரது மனைவி நிர்மல் கெளரும் பாதிக்கப்பட்டார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நிர்மல் கெளர் காலமானார். அடுத்த ஐந்தாவது நாள், அதாவது ஜூன் 18-ஆம் தேதி இரவில் மில்கா சிங்கும் தனது நீண்ட ஓட்டப்பந்தய வாழ்க்கையில் இருந்து விடை பெற்றிருக்கிறார். இந்திய பெண்கள் கைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக இருந்த நிம்மி என்று அழைக்கப்படும் நிர்மல் கெளரை காதலித்துக் கைப்பிடித்தவர் மில்கா சிங்.

    மில்கா சிங்-நிர்மல் கெளரின் காதல் கதை பஞ்சாபிய இளைஞர்களுக்கு இப்போதும் அமரகாவியமாகத் தொடர்கிறது. நிர்மல் கெளரின் வீட்டாருக்குத் தெரியாமல் இரண்டு பேரும் காதலித்து வந்தனர். 1960-இல் இருவரும் பயணித்த கார், விபத்தில் சிக்கியபோது தான் அந்த விவரம் நிர்மல் கெளரின் வீட்டாருக்குத் தெரிய வந்தது. கடுமையான எதிர்ப்புக்கு இடையே மில்கா சிங்கையும், நிர்மல் கெளரையும் தம்பதியாக்குவதற்காகத் தூது போனவர் அன்றைய பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன்.

    1963-இல் கணவன்-மனைவியாக இணைந்தவர்களின் இல்லற வாழ்க்கை 2021-இல் ஒருவரைத் தொடர்ந்து மற்றவரின் மரணத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது. தனது மரணத்திலும் கூட நிர்மல் கெளரைப் பிரிவதற்கு மில்கா சிங்குக்கு மனம் ஒப்பவில்லை போலும்.

    மில்கா சிங் வெறும் ஓட்டப்பந்தய வீரர் அல்ல. சுதந்திர இந்திய வரலாற்றில் முதலாவது விளையாட்டு சூப்பர் ஸ்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1958-இல் 200 மீட்டர், 400 மீட்டர் பந்தயங்களிலும், 1962-இல் 400 மீட்டர், 400 மீட்டர் ரிலே பந்தயங்களிலும் தங்கப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் மில்கா சிங்.

    1956 மெல்பர்ன் ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கெடுக்க மில்கா தேர்வு பெற முடியவில்லை. 1958-இல் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிதான் அவரது முதல் மிகப் பெரிய வெற்றி.

    1956 மெல்பர்ன் ஒலிம்பிக் பந்தயத்தில் தேர்வு பெற முடியாவிட்டாலும், உலக சாதனை படைத்த அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் சார்ல்ஸ் ஜென்கின்ஸின் 46.7 சாதனை மில்காவுக்கு உந்து சக்தியாக மாறியது.

    தனது அறையிலுள்ள குருநானக் தேவரின் படத்துக்கு அருகில் ஒரு துண்டு சீட்டில் 46.7 என்று எழுதி வைத்திருந்தார் மில்கா. அதன் பிறகு காலை, மாலை என்று நேரமும் காலமும் பார்க்காமல் தடகளப் பயிற்சிதான் அவரது வாழ்க்கை என்றாகியது. அடுத்த இரண்டாவது ஆண்டு 46.6 விநாடிகள் வரை அவரால் ஓட முடிந்ததற்கு அந்த வெறித்தனமான பயிற்சிதான் காரணம்.

    மில்கா சிங்  1958-இல் தங்கப் பதக்கம் வென்ற பிறகு அடுத்த தங்கப் பதக்கத்திற்காக இந்தியா 52 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில்தான் அடுத்த தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா.
     

    1958 கார்டிஃப் காமன்வெல்த் போட்டிகளில் மில்கா சிங் தங்கப் பதக்கம் வென்றபோது அதுதான் இந்தியா சர்வதேசப் போட்டியில் வென்ற முதல் தங்கப் பதக்கம்.

    அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொலைபேசியில் மில்கா சிங்கை அழைத்து "தேசத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கும் உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்' என்றபோது மில்கா விடுத்த வேண்டுகோள் - "இந்தியா இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டு நமது இளம் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் உற்சாகமூட்ட வேண்டும்' என்றார்.

    பாகிஸ்தானில் நடந்த ஓர் "இன்விடேஷன்' பந்தயத்தில் கலந்து கொண்டார் மில்கா சிங். பாகிஸ்தானில் பிரபல விளையாட்டு வீரராக இருந்த அப்துல் காலிக் என்பவரை அந்த பந்தயத்தில் முறியடித்து வெற்றி பெற்றார் அவர். அதைப் பார்க்க வந்திருந்த அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப்கான். மில்கா சிங் ஓடிய வேகத்தைப் பார்த்து அவருக்கு கொடுத்த பட்டம்தான் "பறக்கும் சீக்கியர்' (பிளையிங் சீக்) என்பது.

    மில்கா சிங்கின் வாழ்க்கையில் மிகப் பெரிய சோகமாக அமைந்தது, 1960 ரோம் ஒலிம்பிக் பந்தயம். அனைவரும் அவர்தான் 400 மீட்டரில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

    200 மீட்டர் வரை மில்கா சிங்தான் முன்னிலையில் இருந்தார். கடைசிவரை அதே வேகத்தில் ஓட முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டதோ என்னவோ, சற்று திரும்பிப் பார்த்தார். தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்றையும் தவறவிட்டு நான்காவதாக நொடிப் பொழுது வித்தியாசத்தில் முடிக்க வேண்டிய அவலம் நேர்ந்தது.

    மில்கா சிங் 1958-இல் தங்கப் பதக்கம் வென்ற பிறகு அடுத்த தங்கப் பதக்கத்திற்காக இந்தியா 52 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில்தான் அடுத்த தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா.

    1958-இல் தங்கப் பதக்கம் வென்ற மில்கா சிங்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு 2001-இல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்துவிட்டார் அவர்.

    ""பத்மஸ்ரீ என்கிற முதுகலை பட்டம் பெற்ற பிறகு அர்ஜுனா விருது என்கிற எஸ்எஸ்எல்சி சான்றிதழை எனக்குத் தருகிறார்கள். இப்போதெல்லாம் கோயில்களில் பிரசாத விநியோகம் போல விருதுகள் வழங்கப்படுகின்றன. அதனால் எனக்குத் தேவையில்லை'' என்பது அவரது பதிலாக இருந்தது.

    பேராசைப் படாதவராக இருந்தவர் என்பதுதான் மில்கா சிங்கின் தனித்துவம். "என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது தகுதிக்கு மீறிய பெயரையும் புகழையும் இறைவன் வழங்கியிருக்கிறான். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லா வசதிகளையும் தந்திருக்கிறான். மைதானத்தில் ஓடி எனது தாய்நாட்டுக்கு புகழைத் தேடித் தர வேண்டும் என்று இறைவன் விரும்பினான் என்றுதான் நான் கருதுகிறேன். இந்திய மக்கள் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எனக்குப் பெயரையும் புகழையும் தந்து கெளரவித்து இருக்கிறார்கள்' - தனது கடைசிப் பேட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மில்கா சிங் தெரிவித்த கருத்து இது.

    அவரது குடும்பமே விளையாட்டு மைதானத்துடன் தொடர்புடையது. இந்திய பெண்கள் கைப்பந்து அணியின் கேப்டனாக இருந்த நிர்மல் கெளரை, காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் மில்கா சிங். அவரது மகன்களில் ஒருவர் ஜீவ் மில்கா சிங், நட்சத்திர கோல்ஃப் விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

    மில்கா சிங்கும் கோல்ஃப் விளையாட்டுப் பிரியர். "கோல்ஃப்புக்கும் ஓட்டப்பந்தயத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

    இந்த இரு விளையாட்டுகளிலும் எதிரிகள் யாரும் கிடையாது. நமது திறமைதான் வெற்றிக்கு ஒரே வழி. அதனால்தான் எனக்கு ஓட்டப்பந்தயமும், கோல்ஃப்பும் பிடிக்கும்' என்பது மில்கா சிங் அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

    1960 ரோம் ஒலிம்பிக் பந்தயத்தில் மில்கா சிங் அடைந்த தோல்வியின் ரணம், கடைசி வரை ஆறவே இல்லை. தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர் மால்கம் பென்ஸ் (45.5), மில்கா சிங்கை ( 45.6) அந்தப் பந்தயத்தில் பாயிண்ட்0. 1 நொடி வித்தியாசத்தில் 400 மீட்டர் பந்தயத்தில் தோற்கடித்தார்.

    "எனக்கு வாழ்க்கையில் ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது. இந்திய ஓட்டப்பந்தய வீரரோ, வீராங்கனையோ ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் 1960-இல் தவறவிட்ட அந்த வாய்ப்பின் ரணம் எனக்கு ஆறும்' என்றார்.

    மில்கா சிங்கின் இந்த வார்த்தைகள் ஒவ்வொரு இந்திய தடகள வீரரின் அறையிலும் காணப்பட வேண்டும்.

    இந்தியா தடகளத்துக்காக ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். தனது 91ஆவது வயதில் தீநுண்மித்தொற்றுக்கு பலியாகி இருக்கும் இந்தியாவின் அந்த முதல் விளையாட்டு சூப்பர் ஸ்டார், அது வரை நமது நினைவுகளில் ஓடிக் கொண்டே இருப்பார்.

    மில்கா சிங் 1958-இல் தங்கப் பதக்கம் வென்ற பிறகு அடுத்த தங்கப் பதக்கத்திற்காக இந்தியா 52 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில்தான் அடுத்த தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp