மலேசியத் தமிழர்களின் காவலர்

மலேசியாவில் பல தமிழ் அமைச்சர்கள் வரலாம்; ஆனால் ஒரே தலைவர் டத்தோ சாமிவேல்தான்.
மலேசியத் தமிழர்களின் காவலர்

மலேசியாவில் பல தமிழ் அமைச்சர்கள் வரலாம்; ஆனால் ஒரே தலைவர் டத்தோ சாமிவேல்தான்.

மலேசிய இந்திய காங்கிரஸில் அதிக ஆண்டுகள் தலைவராகவும், அந்த நாட்டில் 29 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தவர் டத்தோ சாமிவேல்.

தஞ்சாவூர் அருகேயுள்ள பூதலூர், ஆவாரம்பட்டி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட சங்கிலிமுத்து நரங்கியர்- அங்கம்மாள் தம்பதியின் மூத்த மகன் சாமிவேல்.  இவர் 1936-ஆம் ஆண்டு மார்ச் 8-இல் பிறந்தார்.  இவரது பெற்றோர் மலேசியாவுக்கு ரப்பர் தோட்டத்தில் பணிக்குச் சென்றனர்.  அங்கேயே பிறந்தார் சாமிவேல்.

ஏழ்மை நிலையில் இருந்த சாமிவேல் இளம்வயதில் சுருட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து விலகினார்.  பின்னர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அவர்,  கோவிந்தசாமி என்பவரின் துணையோடு கட்டடக் கலை நுணுக்கங்களைக் கற்றுகொண்டார்.

1960-இல் மலேசிய இந்திய காங்கிரஸில் சேர்ந்தார்.  அப்போது, மலேசியாவில் இந்தோனேஷிய படைகள் தரை இறங்கியபோது,  கோலாலம்பூரில் இருந்த இந்தோனேஷிய தூதரத்தின் கொடிக்கம்பத்தில் ஏறி இந்தோனேஷிய கொடியை இறக்கினார். இந்த நாட்டுப் பற்றின் வாயிலாக, அவர் மலேசியா முழுவதும் அறியப்பட்டார்.

பின்னர்,  மலேசிய தொலைக்காட்சிகளில் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராக இருந்தார். நாடகக் கலைஞரான அவர், சிறந்த மொழி ஆர்வலர். 

இதைத் தொடர்ந்து, அவர் அரசியலில் ஏற்றம் கண்டார்.  1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மலேசிய நாடாளுமன்றத்தில் நுழைந்தார். பின்னர்,  1978-இல் துணை அமைச்சரானார்.  1979-இல் காபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சராகி, தொழிலாளர் நலத் துறை, கட்டுமானத் தொழில், எரிசக்தித் துறை போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்தார்.
மலேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இறுதிக்காலம் வரை இருந்தார்.
சென்னைக்கு அடிக்கடி பயணித்த இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றில் பங்கேற்று சிறப்பித்தவர். தமிழகத்தின் மீதும், தமிழர்களின் மீதும் அக்கறை கொண்ட அவர்,  செப். 15-இல் இயற்கை எய்தினார். 

இதையடுத்து,  அவர் குறித்து வெளியிட்ட காணொளிப் பதிவில் நடிகர் சிவகுமார் கூறியதாவது:

""மலேசியா தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், பண்பாடு  இவற்றை பாதுகாத்த ஆலமரம் சாய்ந்துவிட்டது.

"டத்தோஸ்ரீ', "தூண்' என்ற பட்டங்களைப் பெற்ற சாமிவேல் இப்போது இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலை ஆர்வம், பேசும் திறன்,  எம்ஜிஆரின் காந்தத் திறன் ஒரு சேர கொண்ட தலைவர் டத்தோ சாமிவேல்.

1995-ஆம் ஆண்டு மே மாதத்தில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் எழுத்தாளர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க புதுச்சேரியில் வசிக்கும் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், நான் சென்றிருந்தோம்.

எம்ஜிஆருடன் நான் நடித்த 2 திரைப்படங்கள், சிவாஜியுடன் நடித்த 14 திரைப்படங்கள்,  கருணாநிதியின் பராசக்தி படம்,  கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், பாரதியாரின் படைப்புகள் குறித்து 2 மணி நேரம் உரை நிகழ்த்தினேன். பின்னர், டத்தோவும் பேசினார். அவர் நாடகக் கலைஞர்.  நல்ல பாடகர்.

"மலேசிய காங்கிரஸ் தலைவராக 31 ஆண்டுகள், மூத்த அமைச்சராகப் பதவி வகித்துள்ளேன். அமைச்சராகப் பதவி வகித்தாலும், எனக்கு நிரந்தரம் கலைஞர் என்ற பட்டம்தான்' என்றார் சாமிவேல்,  பின்னர் விலை உயர்ந்த கடிகாரத்தை எனக்குப் பரிசளித்தார்.

1992-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கலாசார மாநாட்டில் பங்கேற்க நானும், எனது மனைவியும் சென்றிருந்தோம். இதற்காக, விமானத்தில் பயணித்தோம்.  மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 5 மணி நேரம் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையறிந்த டத்தோ சாமிவேல் எங்களை "சிறப்பு விருந்தினர்' என்று அழைத்துச் சென்று,

முக்கிய இடங்களைச் சுற்றி பார்க்க வைத்து  குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தில் சேர்க்க வைத்தார்.

எனது மகள் பிருந்தாவின் திருமணம். திருமணத்துக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை. இருப்பினும், பின்னர் ஒருநாள் வீடு தேடி வந்தார். மணமக்களை வாழ்த்தி, மகளுக்கு கம்மல், நெக்லெஸ்களை பரிசளித்தார். பிருந்தா நன்கு பாடுவார் என்பதை அறிந்த டத்தோ சாமிவேல், இரு பாடல்களைப் பாடுமாறு கூறினார். பின்னர், எனது மருமகனிடம், ""பிருந்தா நன்கு பாடுவார். அவர் எதிர்காலத்தில் திரைப்படங்களில் பாடினால் தடுக்கக் கூடாது'' என்றும் அறிவுறுத்தினார்.

சூர்யா- ஜோதிகா திருமணம் நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வாழ்த்தினார். இந்தத் திருமணத்துக்கும் டத்தோ சாமிவேல் நேரில் வந்து வாழ்த்தினார்.

ஈரோடு புத்தகக் கண்காட்சியானது மக்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க, நுழைவுக் கட்டணம் இல்லாமல் நடக்கும்.  நாங்கள் டத்தோ சாமிவேலை அழைத்தோம். வந்து ஆசிர்வதித்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டோம். -தி.நந்தகுமார்விமானப் பயணக் கட்டணம், வந்து செல்லும் செலவை அளிப்பதாகக் கூறினோம். அவரும் வந்தார்.

விமானத்தில் உயர் வகுப்பில் பயணித்தே வந்தார்.  சென்னை வந்து, டாக்ஸியில் பயணித்து ஈரோடு வந்தார். வந்தவர் எந்தக் கட்டணத்தையும் பெற மறுத்து, சாப்பாட்டு செலவையும் கொடுத்துவிட்டு சென்ற பெருந்தன்மை பாராட்டத்தக்கது.
இவ்வளவு செய்கிறாரே இவர் கோட்டீஸ்வரர் வீட்டு மகனா? என்று நினைக்கலாம். இல்லை.  சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகன்.  பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் இடையில் நின்றவர். 
கட்டடக் கலை நிறுவனத்தில் ஆபிஸ் பையனாக, உதவியாளராகப் பணியில் சேர்ந்தவர். பின்னர், இவரது திறமையைப் பார்த்த நிறுவன உரிமையாளர் லண்டனுக்கு அனுப்பி  கட்டடத் தொழில் நுணுக்கங்களைக் கற்றறிய வைத்தார்.
பின்னர்,  டத்தோ சாமிவேல் கட்டடக் கலையில் பெரிய சாதனைகளைப் புரிந்தார்.  மலேசியாவில்  நெடுஞ்சாலைத் துறை பணிகள்,   13.4 கி.மீ. தூரம் கொண்ட பினாங்கு பாலம்  போன்றவை டத்தோ சாமிவேலின் பெயரை என்றென்றும் சொல்லும்.
மலேசியாவில் தமிழ் அமைச்சர்கள் பலர் இருந்தார்கள். இன்னும் பலர் வரலாம். ஆனால் ஒறே தலைவர் டத்தோ சாமிவேல்தான். 
எம்ஜிஆரை போன்ற, சிவாஜியை போன்ற ஓர் கலைஞர் டத்தோ சாமிவேல்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com