அமெரிக்கா, கனடாவிலும் அம்மா உணவகங்கள்

தமிழர் சமையல் உலகம் கடந்து விரிவுபடுத்தும் அம்மா உணவகம்
அமெரிக்கா, கனடாவிலும் அம்மா உணவகங்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளன. அதனைப் பின்பற்றி இதர மாநிலங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. அமெரிக்காவில் அம்மா உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி, கனடாவிலும் கிளையைத் தொடங்கியிருக்கிறார் நியூஜெர்சி நகரில் வசிக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார்.

அவருடன் ஓர் பேட்டி:

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி?

தஞ்சாவூருக்கு அருகே ஒரு சின்ன கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். அங்கே கஷ்டப்பட்ட குடும்பம் எங்களுடையது. விறகு அடுப்பில், புகையின் மத்தியில் எனது அம்மா சமைப்பதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா மிக்சி, கிரைண்டரை பயன்படுத்தி செளகரியமாக என் அம்மா சமைத்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஹோட்டல்களில் பகுதி நேர வேலை பார்த்தேன். அப்போதுதான் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு, ஒரு ரூபாய்க்கு இட்லி என்று குறைந்த விலையில் உணவு வகைகள் வழங்கப்பட்டு, புரட்சியை ஏற்படுத்தியது. அன்று என் மனதில் ஆழமாக விழுந்தது. பின்னர், அமெரிக்காவுக்கு வேலை நிமித்தம் நான் வந்தபின்னர் இங்கே அம்மா உணவகத்தைத் தொடங்கத் தூண்டுதலாக இருந்தது.

அமெரிக்கா சென்று பணி செய்யும் எண்ணம் எப்படி வந்தது?

இந்தியாவில் இருந்தபடியே பல வேலைக்கான நேர்காணல்களில் பங்கேற்றேன். அமெரிக்காவில் வசித்த ஒரு நண்பர் மூலமாக, நேர்காணலில் பங்கேற்று வேலை கிடைத்தது. விசாவும் பெற்று, அமெரிக்காவுக்கு வந்தேன்.

அமெரிக்காவில்ஆரம்பகால வேலையில் சந்தோஷங்களும், சங்கடங்களும் என்ன?

இந்தியாவில் நட்சத்திர ஹோட்டல்களை வெளியில் நின்று பார்த்த எனக்கு, அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை கிடைத்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கேயே தங்க இடமும், உணவும் அளித்தனர். கனவிலும் எதிர்பார்க்காத வசதியான வாழ்க்கையும் எனக்கு அமைந்தது.

இரண்டு ஆண்டுகள் அங்கேயே வேலை பார்த்தபோது, விருந்துகளுக்குப் பிறகு மீதமான உணவை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கலாமே என்ற எனது யோசனையை ஹோட்டல் நிர்வாகம் ஏற்று, அனுமதியை அளித்தனர். இந்தப் பணியை நானே மேற்கொண்டதால், சாமானியர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டபோது எனக்கு பெரும் திருப்தி ஏற்பட்டது.

அம்மா உணவகம் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

இளம்வயதில் கஷ்டப்பட்டதால், உழைப்பதற்குத் தயங்கியதே இல்லை. நட்சத்திர ஹோட்டல் வேலை வாழ்க்கையை செளகரியமாக நடத்துவதற்கு உதவியாக இருந்தது. ஆனாலும், அந்த வாழ்க்கை எனக்கு இரண்டு ஆண்டில் அலுப்பு தட்டியது.

கடும் உழைப்பாளியான நான் இப்படி ஒரு சுகமான வாழ்க்கையில் தேக்கம் அடைந்துவிடக் கூடாது என்று என் மனசாட்சி அறிவுறுத்தியது. சொந்தமாக உணவகத்தைத் தொடங்கும் எண்ணமும் அதிகரித்தது. நண்பர்கள் எதிர்மறையாகவே ஆலோசனை சொன்னபோதும், சொந்த உணவகத்தைத் தொடக்க முடிவு செய்தேன்.

நான் வசித்த பகுதியில் இந்திய மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அமெரிக்காவில் உணவகங்களில் பீட்ஸா, பர்கர் போன்றவை விலை குறைவாகக் கிடைக்கும். ஆனால், இட்லி போன்ற இந்திய உணவு வகைகளின் விலை ரொம்பவும் அதிகம்.

இரண்டு இட்லி சாப்பிட வேண்டும் என்றால் ஏழு டாலர் வரை ஆகும். எனவே, தமிழ்நாட்டு அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குக் கொடுப்பதைப் போல அமெரிக்காவில் நான் ஆரம்பிக்கும் உணவகத்தில் ஒரு இட்லி ஒரு டாலருக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

உங்கள் எண்ணத்துக்கு எப்படி செயல் வடிவம் கொடுத்தீர்கள்?

இந்திய மாணவர்கள் சிலர் தங்கி இருந்த வீட்டில் நானும் சேர்ந்து தங்கிக் கொண்டேன். பெரிய உணவுக் கடையின் உள்ளேயே ஒரு சிறு பகுதியை மட்டும் வாடகைக்குப் பிடித்து, என் சொந்த சேமிப்பில் இருந்து பத்தாயிரம் டாலர் முன்பணமாகக் கொடுத்தேன். அவர், எனக்கு இடத்தைக் கொடுக்காமல் அலையவிட்டார்.

பின்னர், என் சொந்தக் கதை, சுய தொழில் ஆர்வம், அம்மா உணவகக் கனவு ... என எல்லாவற்றையும் விரிவான கடிதமாகவே எழுதி அவரிடம் கொண்டு போய்க் கொடுத்தேன். அவர் என் நிலைமையைப் புரிந்துகொண்டு, உடனடியாக கடைக்கு இடத்தை அளித்தார்.

ஆரம்பத்தில் வரவேற்பு எப்படி இருந்தது?

முதலில் மிகச் சிறிய அளவில்தான் உணவகத்தைத் துவக்கினேன். இரவெல்லாம் வேலை செய்து மாவு போன்றவற்றைத் தயார் செய்து, காலையில் இட்லி, வடை, தோசை என ஒரு சில வகைகளை மட்டுமே செய்து விற்றேன். குறைவான விலையில், தரமான உணவுகளை வழங்கியதால், ஒரே வாரத்தில் நல்ல கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. வாடிக்கையாளர்கள் அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாப்பிடும் அளவுக்கு வெற்றியும் கிடைத்தது.

முதல் நாள் 175 டாலர் விற்பனையானது. இன்று மாத விற்பனை இரண்டு லட்சம் டாலரைத் தாண்டி உள்ளது.

இந்தியச் சமையலுக்கு ஆள்கள் கிடைப்பதில் பிரச்னை இருந்ததா?

ஆரம்பத்தில் நான் மட்டுமே எல்லா வேலைகளையும் பார்த்தேன். அதன்பிறகு, இந்திய மாணவர்களை பகுதி நேர ஊழியர்களாக நியமித்தேன். குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் மெக்சிகோவைச் சேர்ந்த சிலருக்குப் பயிற்சி கொடுத்து, பணியில் அமர்த்தினேன் இன்று பூரி, பரோட்டா, பிரியாணி, பொங்கல் வகை எல்லாம் போடுகிறோம்.

உங்கள் உணவகத்துக்கு அதிகமாக வருகிறவர்கள் இந்தியர்களா? அமெரிக்கர்களா?

வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சுமார் 10 சதவீதம் பேர்தான் அமெரிக்கர்கள். பூக்கள் விற்பனை செய்யும் ஒரு நண்பரின் இல்ல நிகழ்ச்சிக்கு, வாழை இலை விருந்தை சமைத்து வழங்கினோம். இது பாராட்டுகளைப் பெற்றதால், எங்கள் உணவகத்தில் வார இறுதி நாள்களில் வாழை இலை சாப்பாட்டை அறிமுகப்படுத்தினோம்.

அமெரிக்காவில் இருந்து கனடாவில் கால் பதித்தது எப்படி?

கனடாவில் டொராண்டோவில் இந்திய மாணவர்களும், இந்தியக் குடும்பங்களும் உள்ளதை அறிந்து, அங்கேயும் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் உணவகத்துக்கு வந்த தமிழ்நாட்டுப் பிரபலங்கள் யார், யார்?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி. உதயகுமார், இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்டோர் வந்துள்ளனர். முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அவருக்கும், அவருடன் வந்திருந்த சில அமைச்சர்களுக்கும் எங்கள் உணவகத்தில் இருந்து உணவை எடுத்துகொண்டுபோய் நியூயார்க்கில் கொடுத்தோம். அவர் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு மனம் நிறந்து பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com