வாங்க... இங்கிலீஷ் பேசலாம் - 13
புரொபஸர், அவரது நாய் ஜூலி மற்றும் கணேஷ் வெள்ளத்தில் மிதக்கும் புறநகர்ப் பகுதி ஒன்றில் படகில் செல்கிறார்கள்.


புரொபஸர், அவரது நாய் ஜூலி மற்றும் கணேஷ் வெள்ளத்தில் மிதக்கும் புறநகர்ப் பகுதி ஒன்றில் படகில் செல்கிறார்கள். அவர்களைச் சுற்றி நிறைய அடுக்கு மாடிக் கட்டிடங்கள் பாதி மூழ்கிய நிலையில் நிற்கின்றன. அதன் மொட்டை மாடிகளில் மக்கள் கூட்டமாய் பரிதவிப்புடன் உதவி கோரி நிற்கிறார்கள். ஒரு கட்டிடத்தை புரொபஸரிடம் கணேஷ் சுட்டிக் காட்டுகிறான்.
கணேஷ்: சார் அந்த குடியிருப்பைப் பார்த்தீங்களா? மூணாவது மாடியே மூழ்கிருச்சு. பார்க்க டைட்டானிக் மாதிரி இருக்கு.
புரொபஸர்: இதை submergingன்னு சொல்லலாம். The multi-storied building was submerged in flood.
கணேஷ்: அதென்ன சார் multi-storied? ஸ்டோரின்னா கதை தானே?
புரொபஸர்: ஸ்டோரின்னா கதை தான். அதுக்கு மாடின்னும் ஓர் அர்த்தம் உண்டு. மல்டிஸ்டோரீட்னா அடுக்குமாடின்னு பொருள். Submergeன்னா மூழ்கிறது. Submarine கேள்விப்பட்டிருப்பியே?
கணேஷ்: ஆமா சார். நீர்மூழ்கிக் கப்பல்.
புரொபஸர்: subன்னா கீழேன்னு பொருள். subordinateன்னா கீழ்நிலை ஊழியர். தண்ணிக்கு கீழே போறது submerge. அதில இருந்து submarineன்னும் வருது.
கணேஷ்: சார் நாம இப்போ மூழ்கினா என்ன சொல்றது?
புரொபஸர்: அபசகுனமா கேட்காதே.
கணேஷ்: சாரி சார்.
ஜூலி: நான் சொல்றேன். Sink. The boat capsizedன்னு சொல்லலாம். படகு கவிழ்ந்திருச்சுன்னு பொருள். டைட்டானிக் படத்தில கப்பல்ல ஓட்டை விழுமே நினைவிருக்கா?
கணேஷ்: ஆமாம்.
ஜூலி: அப்படி ஓட்டையாகி அதன் வழியா தண்ணீர் நிரம்பிட்டா அதுவும் flood தான். The ship was flooded and it sank.
கணேஷ் நீரில் மூழ்கின வீடுகளைக் கண்டு பெருமூச்சு விடுகிறான்.
கணேஷ்: இந்த மாதிரி வெளியே போக முடியாம மாட்டிக்கிட்டா ரொம்ப பாவம் இல்ல சார்... சாப்பாடு, தண்ணி எதுவும் கிடைக்காம, உடம்புக்கு முடியாம ஆனா மருந்து இல்லாம பரிதாபம் சார்.
புரொபஸர்: ஆமா. ரொம்ப கஷ்டம். சரி இப்பிடி நாலு பக்கமும் வெள்ளம் சூழ மாட்டிக்கிறதை தான் maroonedன்னு சொல்வோம். இப்பிடி மாட்டிக்கிறவங்களை maroonsன்னு சொல்லலாம்.
கணேஷ்: எப்பிடி சார் இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறீங்க?
புரொபஸர்: ராபின்சன் குரூசோ கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: ஆமா சார். கப்பல் மூழ்கி தனியா ஒரு தீவில மாட்டிகிற ஒருத்தரோட கதை தானே? படம் பார்த்திருக்கேன்.
புரொபஸர்: ஆமா. அது ஒரு நாவலில் இருந்து பின்னர் சினிமாவா எடுக்கப்பட்டுது. அதை எழுதினவர் பேரு டானியல் டீபோ. 1719 இல் வெளியான நாவல். அந்த நாவலை நான் சின்ன வயசில படிச்சப்போ தான் marooned என்கிற வார்த்தை எனக்கு அறிமுகம் ஆச்சு. பொதுவா தீவில தனியா மாட்டிக்கிறதை தான் maroonedன்னு சொல்லுவோம். பிற்பாடு மழையினாலயும் வேறு காரணங்களாலயும் ஓர் இடத்தில இருந்து வெளிவர முடியாம மாட்டிக்கிறதை marooningன்னு சொல்ல ஆரம்பிச்சோம்.
கணேஷ்: சார் இந்த மாதிரி இல்லாம தெரியாத ஊர்ல எங்க போறதுன்னு தெரியாம ஓர் இடத்தில நின்னு தவிக்கிறதை எப்பிடிச் சொல்றது?
புரொபஸர்: stranded. Due to general strike I was stranded at the busன்னு சொல்லலாம். பெற்றோர்களைத் தவற விட்டு தனியா நின்னு அழற குழந்தையும் stranded தான்.
கணேஷ்: சார் இப்போ நினைவு வருது. கிரிக்கெட்டில் ஒரு டீம் ஆல் அவுட் ஆகும் போது ஒரு பேட்ஸ்மேன் மட்டும் நல்லா ஆடிக்கிட்டு ஆனா துணை இல்லாம நாட் அவுட்டா இருந்தா அவரை he was left strandedன்னு சொல்வாங்க.
புரொபஸர்: ஆமா எந்த வேலையிலும் ஆதரவு இல்லாம தனியா விடப் படுறது stranded தான்.
அப்போது எதிரில் ஒரு மோட்டார் படகு வருகிறது. அதில் சிலர் உட்கார்ந்திருக்க முன்னால் ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றுகிறார். அவர் புரொபரைக் கண்டு வணங்குகிறார்.
புரொபஸர்: முருகா. எப்பிடி இருக்கே, இங்க என்ன பண்றே?
முருகன்: நல்லா இருக்கேன் சார். வெள்ளத்தில மாட்டிக்கிட்ட மக்களுக்கு சேவை செய்யலாமுன்னு படகோட வந்திருக்கேன்.
புரொபஸர்: ஓ! அப்பிடியா? இது என் மாணவன் பேரு கணேஷ். (கணேஷிடம்) இது தான் முருகன். இவனும் என் மாணவன் தான். இப்போ வட்டச்செயலாளர்.
முருகன் சிரித்தபடி கைகூப்பி அனைவரையும் வணங்குகிறான். முருகனின் உதவியாளர் படகில் உள்ளவர்களிடம் தலா நூறு ரூபாய் வசூலிப்பதை அவர்கள் கவனிக்கிறார்கள்.
புரொபஸர்: ஏன் காசு வாங்குறே?
முருகன்: பொதுசேவைன்னாலும் எனக்கு லாபம் இல்லாம முடியாதே சார்?
புரொபஸர்: நீ வேற வழியில்லாத அப்பாவிகளை சுரண்டுறே. You are fleecing the flood victims. They pay through the nose, you know.
கணேஷ்: fleecingன்னா என்ன சார்?
புரொபஸர்: fleecingன்னா அநியாயமா பணம் வசூலிக்கிறது. செம்மறி ஆட்டோட முடியை கத்தரிக்கிறதை தான் fleecingன்னு ஆரம்பத்தில சொன்னாங்க. இப்போ இச்சொல் மிகையான எல்லா பண வசூலுக்கும் பயன்படுது. pay through the noseன்னா அப்பிடி பணத்தை கொடுக்கிறது.
புரொபஸர்: I am ashamed of you முருகன்.
முருகன்: சாரி... சார். இனிமே இப்பிடி பணம் வாங்க மாட்டேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...