வனத்திலே வேலை இருக்கிறது!

சேலத்திலிருந்து 63 கி.மீ., தருமபுரியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ளது ஒரு கூட்டுறவு வனம்.
வனத்திலே வேலை இருக்கிறது!
Updated on
2 min read

சேலத்திலிருந்து 63 கி.மீ., தருமபுரியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ளது ஒரு கூட்டுறவு வனம். முன்பு சின்னச்சின்ன மலைகளுடன் கூடிய 150 ஏக்கர் நிலப்பகுதி. அது இப்போது கூட்டுறவு வனம்.

2007-இல் இருந்து இதுவரை இந்தப் பகுதியில் சுமார் 150 ஏக்கர் நிலம் பலரால் வாங்கப்பட்டுள்ளது. அவரவர் பெயரில் பத்திரப் பதிவும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நிலம் பியூஷ் என்பவரின் முன்முயற்சியினால் கூட்டுறவு வனமாக உருவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதியில் தீவிரக் களப் பணி மேற்கொள்ளப்பட்டது. 8 குளங்கள் வெட்டப்பட்டன. 17 தடுப்பணைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 800-க்கும் மேற்பட்ட அகழிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. மலைப் பகுதியின் ஓடைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டில் அரிதாகக் கிடைத்த நல்ல மழை, இந்தக் கூட்டுறவு வனத்தைப் பொலிவாக்கியிருக்கிறது. குளங்கள், அகழிகள், ஓடைகளில் நிறையத் தண்ணீர்.

இப்போது இங்கே மூங்கில் காடு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. பலா, மாதுளை, கொடுக்காப்புளி, சீத்தாப் பழ மரக்கன்றுகள் நம்பிக்கையுடன் துளிர்த்திருக்கின்றன.

அரச மரம், ஆலமரம், சிவப்புச் சந்தன மரங்கள் மெல்ல உயர்ந்திருக்கின்றன. கூடவே, வீட்டுப் பயன்பாட்டுக்கு அன்றாடம் தேவையான காய்கறித் தோட்டங்கள் தயாராகி வருகின்றன. அதற்கான நாற்றங்கால் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமவெளிப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் வனமாக இருந்த அது இப்போது பலருக்கு வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் அளிக்கும் கூட்டுறவு வனமாக ஆகியிருக்கிறது.

அதோடு மட்டுமல்ல. இதுவரை 3 ஆயிரம் மாணவர்களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

"உண்மையான மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?' இங்கு நிலவும் "தண்ணீர் அரசியல்', "மண்ணுக்கான அரசியல்' எல்லாவற்றுக்குமான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டுறவு வனத்தை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பியூஷ் நம்மிடம் பேசியதிலிருந்து...

""பல கோடி ரூபாய் முதலீடு போட்டு தொடங்கப்படும் பெரு நிறுவனங்களில் உண்மையாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்த சில பத்துப் பேருக்குத்தான் வேலை தருகிறார்கள். அவர்களுக்கும் எத்தனை நாள் அங்கே வேலை கிடைக்கும் என்பதில் உத்தரவாதம் இல்லை. ஆனால், இங்கே சில லட்சங்கள் முதலீடு செய்து நிலம் வாங்கி, வேலை செய்ய ஆரம்பித்தால், 10 பேருக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும்.

இங்கே மூங்கிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறது. காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன. மூலிகைச் செடிகளில் இருந்து மருந்துகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் இங்கே தாராளமாக வரலாம். இங்குள்ள காட்டில் அவர்களாகவே விவசாயப் பணிகளைச் செய்யலாம். உற்பத்தி தொடங்கி வருமானம் வரும்போது பணம் கொடுத்தால் போதும்.

உண்மையான வருமானம் - நிரந்தர வருமானம் - காட்டில்தான் இருக்கிறது. காடு வளர்ப்பையும் லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். அத்துடன் காடுகள் பாதுகாக்கப்பட்டால்தான், நாட்டின் நீர்வளம் பாதுகாக்கப்படும்.

காட்டிலிருந்து கிடைக்கும் மரத்துண்டுகளை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வாயுவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியும் இங்கு நடைபெறுகிறது. இந்த முயற்சியில் வெற்றி கிடைக்குமெனில், நாடு முழுவதும் இந்த முறையைக் கொண்டு சென்றால், பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி - பூமியைச் சூடாக்கும் அனல், அணு மின் நிலையங்கள் தேவையில்லாமல் போய்விடும். சிறிய முதலீட்டில் சின்னச் சின்னதாய் ஆயிரக்கணக்கான மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கிக் கொள்ளலாம். மரத் துண்டுகளில் இருந்து எஞ்சும் கரித்துண்டுகள் கூடுதல் லாபம்'' என்கிறார் பியூஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com