"எனர்ஜி ' மிகவும் முக்கியம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள், இளைஞர்கள் யாரிடமாவது சென்னை, மும்பை, ஹைதராபாத்... என்னவென்று கேட்டால், மாநிலத்தின் தலைநகர்கள்தானே? என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள், இளைஞர்கள் யாரிடமாவது சென்னை, மும்பை, ஹைதராபாத்... என்னவென்று கேட்டால், மாநிலத்தின் தலைநகர்கள்தானே? என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார்கள். ஆனால், இன்றைக்கு அதே பெயர்களை உச்சரித்தால் பலரும் சட்டெனக் கூறுவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இளைய தலைமுறையினரின் மனம் கவர்ந்த, வசியப்படுத்தும் விளையாட்டாக உருவெடுத்து வருகிறது கிரிக்கெட்!
இந்த விளையாட்டைப் பார்ப்பது மட்டுமன்றி, இந்தியக் கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடுவது கூட எண்ணற்ற இளைஞர்களின் லட்சியக் கனவாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட கனவோடு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முயன்று வருகிறார் தமிழக இளைஞர் ஒருவர். அவர்தான் கோயம்புத்தூரை சேர்ந்த 25 வயதுள்ள இ.ஏ. அபினவ்.
இவர். தற்போது தில்லி மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். அடிப்படையில் வேகப்பந்து வீச்சாளரான இவர், மட்டைப்பந்து வீரரும் கூட. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் தனக்கு இருப்பதாகக் கூறுகிறார் இவர்.
தில்லியில் தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அபினவ்விடம் அவரது லட்சியக் கனவுக்கான முயற்சிகள் குறித்து கேட்டோம்:
""எட்டு வயது இருக்கும்போதே கிரிக்கெட் மீது எனக்குக் காதல் வந்துவிட்டது. பெற்றோரும் என்னை ஊக்குவித்தனர். இதனால், தொடர்ந்து விளையாடினேன். முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுச் சிறப்பிடம் பெற்றேன். அதன் பிறகு மாநில அளவிலான "கிரிக்கெட் கேம்பில்' பங்கேற்றேன். எனினும், தமிழக ரஞ்சித் டிராபி கிரிக்கெட் அணியில் பங்கேற்க சில ஆண்டுகளாக முயன்றும் வாய்ப்புக் கிட்டவில்லை.
இதனிடையே, எனது பள்ளிப் படிப்பு முடிந்ததால் ஜவுளி மற்றும் ஃபேஷன் பிரிவில் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லத் திட்டமிட்டேன். அப்போது, அங்குள்ள "லாங்ஷையர் அகாதெமி' கிரிக்கெட் அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்கிறது என்பதை அறிந்தேன். அந்த அகாதெமியை அணுகினேன். எனக்கு அந்த அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.
இங்கிலாந்தில் "யுனிவர்சிட்டி ஆஃப் மான்செஸ்டர்' கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தேன். லாங்ஷையர் அணிக்காகவும் விளையாடினேன். தொடர்ந்து இரு ஆண்டுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். இதற்கிடையில் இங்கிலாந்தில் சீசன் இல்லாத நான்கு மாத கால இடைவெளியில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டைட்டன் அணிக்காக விளையாடினேன்.
பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாட நினைத்தேன். அது தொடர்பாக விசாரித்தபோது, அந்த நாட்டில் ஐந்து ஆண்டு வேலைவாய்ப்பு விசாவில் இருக்க வேண்டும் என்பதும், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்பதும் தெரியவந்தது. நான் மாணவர் விசாவில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்ததால் கூடுதலாக 5, 6 ஆண்டுகள் அங்கு காலத்தைச் செலவிட வேண்டியிருந்தது. அதற்குள் எனது வயது 27 ஆகிவிடும் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு, 2012-இல் இந்தியா திரும்பினேன்.
தில்லியில் உள்ள ஆர்.கே. கிரிக்கெட் அகாதெமிக்காக விளையாடி வருகிறேன். ஆண்டுக்கு சுமார் 40 போட்டிகளில் பங்கேற்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் விளையாடினால் இந்திய அணியில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என்பதால், கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். போட்டியில் சேர முயற்சித்து வருகிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.
இந்தியாவில் மாணவர்கள், இளைஞர்கள் பலரும் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டைப் பொருத்தவரை "எனர்ஜி' மிகவும் முக்கியமாகும். விளையாட்டு நுணுக்கம், திறமை ஒருபுறம் இருந்தாலும் உடலுக்குச் சக்தி மிகவும் அவசியம். குறிப்பாக, என்னைப் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் அதிக சக்தி செலாவாகும். இதனால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
இங்கிலாந்தில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகத்தான் பார்க்கின்றனர். வெற்றி, தோல்வி எது வந்தாலும் அதை "ஸ்போர்டிவ்' ஆக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் ஜெயித்தால் அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் வீரர்களின் வீட்டில் கல்லெறியும் நிலையும் உள்ளது. இந்த மனோபாவம் மாற வேண்டும். எனது லட்சியமெல்லாம் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்று, அதன் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று நாட்டுக்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்பதுதான்'' என்கிறார் நம்பிக்கையுடன் அபினவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...