நாளை நான் ஐஏஎஸ்! இலக்கினை அடைவதே நதியின் நோக்கம்!
முதன்மைத் தேர்வுக்கான மதிப்பெண்கள்: தகுதித் தாளான ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு தேசிய மொழித்தாள் ஆகியவற்றிற்கு தலா 300 வீதம் 600 மதிப்பெண்கள் தரப்படுகின்றன.


முதன்மைத் தேர்வுக்கான மதிப்பெண்கள்: தகுதித் தாளான ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு தேசிய மொழித்தாள் ஆகியவற்றிற்கு தலா 300 வீதம் 600 மதிப்பெண்கள் தரப்படுகின்றன. இந்த இரண்டு தாள்களின் மதிப்பெண்களும் தகுதி பெறுவதற்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தரநிலையைக் கணக்கிடுவதற்கும், ஆளுமைத்தேர்வுக்குத் தகுதி பெறுவதற்கும் மாணவர்களுக்கு பிற 7 தாள்கள் பயன்படுகின்றன.
250 மதிப்பெண்களைக் கொண்ட ஒரு கட்டுரைத்தாள், தலா 250 மதிப்பெண்களைக் கொண்ட 4 பொது அறிவுத் தாள்கள், தலா 250 மதிப்பெண்களையும் இரண்டு தாள்களையும் கொண்ட ஒரு விருப்பப்பாடம் ஆகியவற்றின் மதிப்பெண்களே தர நிலைக்கும், ஆளுமைத் தேர்வுக்கு தேர்வு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக, முதன்மைத்தேர்வில் தகுதி பெறுவதற்கான 600 மதிப்பெண்கள் நீங்கலாக பிற 7 தாள்களின் மதிப்பெண்கள் 1750 ஆகும்.
விருப்பப்பாடம்: ஏதேனும் ஒரு விருப்பப் பாடத்தினைத் தேர்வு செய்து கொள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். மொழி இலக்கியப் பாடங்களான ஆங்கிலம் உள்ளிட்ட தமிழ் போன்ற 23 மொழி விருப்பப் பாடங்களில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மேலும் வரலாறு, புவியியல், தாவரவியல் போன்ற கலை, அறிவியல், பொறியியல் சம்பந்தமான 25 விருப்பப் பாடங்களில் ஒன்றினைத் தேர்வு செய்யலாம். ஆக விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரையில் 48 விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றினை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
அதே போல முதன்மைத் தேர்வினை கட்டுரை, விருப்பப்பாடம் மற்றும் பொது அறிவுப் பாடங்கள் உள்ளிட்ட 7 தாள்களையும் தாய்மொழியிலேயே எழுத விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் ஒன்றான ஏதேனும் ஒரு மொழியிலோ அல்லது அவர்களது தாய்மொழியிலோ எடுத்துக்காட்டாக தமிழிலேயே எழுதலாம்.
முதன்மைத்தேர்வில் தமிழ் போன்ற மொழி இலக்கியப் பாடங்கள் மற்றும் மொழித்தாள்கள் தவிர்த்து மற்ற பொது அறிவு, கட்டுரை, பிற விருப்பப்பாடங்கள் அனைத்திற்குமான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்கும்.
தேர்வுக்கான மையங்கள்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்நிலைத் தேர்வுக்கு சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் என மூன்று மையங்கள் உள்ளன. முதன்மைத் தேர்வினைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே எழுத முடியும்.
ஆளுமைத் தேர்வு: நேர்முகத் தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் ஷ் 2.5 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வெழுதிய மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக காலிப்பணியிடங்கள் 1500 என்றால் 1500 x 2.5 = 3750 மாணவர்கள் அழைக்கப்படுவர். இந்த விகிதம் கட் ஆப் மதிப்பெண்ணில் இறுதிநிலையில் இருக்கும் மாணவர்களைப் பொறுத்து அழைக்கப்படும் சதவிகிதம் சற்று கூடலாம். குறைவதில்லை.
நேர்முகத் தேர்வினை ஆங்கிலத்தில் எதிர்கொள்ளலாம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட மொழிகளில் ஒன்றைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அவர்களின் தாய் மொழியிலேயே எதிர் கொள்ளலாம். அதற்கென்று நேர்முகத் தேர்வுக்கான தலைவர் உள்ளிட்ட வல்லுநர் குழு தவிர, ஆங்கிலம் மற்றும் மாணவர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்த மொழியில் புலமை வாய்ந்த ஒரு மொழிபெயர்ப்பாளரும் இருப்பார். எனவே, தமிழில் நேர்முகத்தேர்வை ஒரு மாணவர் எதிர்கொள்ள விரும்பினால் தாராளமாக அவர் அந்த வாய்ப்பினைப் பெற முடியும்.
ஆளுமைத் தேர்வு டெல்லி, ஷாஜகான் ரோடு, தோல்பூர் ஹவுஸில் உள்ள குடிமைப்பணிகள் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்ற மாணவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தில் இருந்து டெல்லி சென்று மீண்டும் வந்து சேர்வதற்கான ரயில்வே போக்குவரத்துக் கட்டணம் மற்றும் செலவுத் தொகையை குடிமைப்பணிகள் தேர்வாணையம் வழங்குகின்றது.
தேர்வுக்கான கால இடைவெளி: முதல்நிலைத் தேர்வுக்கு அறிவிப்பு வந்த நாளில் இருந்து ஏறத்தாழ 60 முதல் 80 நாட்கள் கால அவகாசம் இருக்கும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறுகின்ற நாளுக்கும் முதன்மைத் தேர்வு தொடங்கும் நாளுக்கும் ஏறத்தாழ 90 முதல் 120 நாட்கள் வரை இடைவெளி இருக்கும்.
முதன்மைத் தேர்வு முடிவுற்ற நாளிலிருந்து ஆளுமைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதற்கு சுமார் 90 முதல் 120 நாட்கள் வரை ஆகலாம்.
குடிமைப்பணிகள்: இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 23 பணிகள் அடங்கியுள்ளன. ஒரே தேர்வில் இப்பணிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மதிப்பெண்களின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் பணி ஒதுக்கீடும், மாநில ஒதுக்கீடும் நடைபெறுகின்றது.
ஆகவே, ஆங்கிலப் புலமையின்மை, அரசுப் பள்ளிகளில் படித்தது, தமிழ்வழியில் படித்தது, கிராமப் பின்புலம் போன்ற சிந்தனைகளைப் புறந்தள்ளுங்கள். இலக்கினை உருவாக்குங்கள். அதனை நோக்கிப் புறப்படுங்கள்.
ஏனெனில், நதியின் பாதை மேடுகளும், பள்ளங்களும் நிறைந்தவை. ஆனால் சமதளத்தில் பயணிப்பது போன்ற காட்சியையே நாம் காண்கிறோம். ஏனென்றால் மேடு, பள்ளங்களை நிரப்புவது நதியின் நோக்கமல்ல. இலக்கினை அடைவதே அதன் நோக்கம். அதுபோல இலக்கினைத் தீர்மானித்து அதை நோக்கிப் பயணத்தைத் தொடங்குங்கள். உங்களிடம் உள்ள நிறைகுறைகள் எங்கும் தெரிவதில்லை. அவை கால ஓட்டத்தில் மறைந்துவிடும்.
இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை நடப்பு நிகழ்வுகளை மையப்படுத்தி, அதன் பின்னணியில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. இனி வருகின்ற ஒவ்வொரு வாரமும் நடப்பு நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எவ்வாறு ஐ.ஏ.எஸ் தேர்வுகளை அணுகவேண்டும் என்பது தொடர்ந்து விளக்கப்படும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...