நடக்கத் தொடங்கும் குழந்தை அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து அழும். ஆனால் சில நிமிடங்களிலேயே மீண்டும் எழுந்து நடக்க முயற்சிக்கும். பேசிப் பழகும் போதும், தப்பும் தவறுமாகப் பேசும். ஆனால் நாளடைவில் நன்றாகப் பேசி விடும்.
இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரை வீழ்வதும், எழுவதும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. ஆனால், குழந்தையாக இருக்கும்போது இருந்த தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வளர வளரக் குறைந்து வருவதுதான் நமது வீழ்ச்சிகளுக்கெல்லாம் காரணம். ஒரு குழந்தையிடம் இருக்கும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கடைசி வரை விடாப்பிடியாக வைத்திருக்கும் ஒரு சிலரே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர்.
ஆனால், நான் படித்த படிப்புக்கு வேலையில்லை, என் திறமைக்கு உகந்த பணியில்லை. ஊதியம் போதவில்லை எனத் தொடர்ந்து சமூகத்தைக் குறைகூறி, தன்னிடம் உள்ள குறைகளை மறந்து, மறைத்து வாழும் தன்னம்பிக்கையற்றவர்களின் வாழ்க்கையே தோல்வியின் முகவரியாகிறது.
இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை என்பதே போராட்டக் களமாகத்தான் இருக்கிறது. 200 பேர் படிக்கும் வகுப்பில் அனைவரும் முதலிடத்துக்குத்தான் முயற்சிக்கின்றனர். 10 பணியிடத்துக்கு 1000 பேர் விண்ணப்பிக்கின்றனர். போட்டி, போட்டி என எங்கு சென்றாலும் கடும் போட்டிதான் நிலவுகிறது. இந்தப் போட்டி வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது.
வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் வெற்றி பெறுகிறார். ஒரு சிலர் முழுத் தொலைவையும் ஓடி நிறைவு செய்கின்றனர். பல பேர் பாதி வழியில் தடுமாறி நின்று விடுகின்றனர். இவர்களைத்தான் இந்தச் சமூகம் தோல்வியாளர்கள் என்கிறது.
தோல்வி என்பதற்கு இந்தச் சமூகம் கொண்டிருக்கும் வரையறையே மிகத் தவறானது. முயலாமை தான் தோல்விக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி சாத்தியமே. ஆனால் தோல்வி என்ற வார்த்தை ஒருவரை இனி அவர் வெற்றியே பெறவே தகுதியற்றவர் என்ற கோணத்தில் கூறப்படுகிறது. ஒருவர் தோல்வியுற்றுவிட்டார் என்பதைக்கூட, அவர் வெற்றி பெற முயற்சி செய்கிறார் எனக் கூறலாம் அல்லவா?
ஓட்டப் பந்தயத்தில் அனைவரும் முதலிடம் வர முடியாது. ஆனால் அனைவரும் ஓட்டத்தை நிறைவு செய்து வெற்றியாளர் ஆகலாம் தானே? இதுதான் வெற்றிக்கான தாரக மந்திரம்.
தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்நோக்கி வெற்றி பெறுபவர்களிடம் காணப்படும் சில சிறப்பு குணாதியங்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களின் வெற்றியின் ரகசியம் விளங்கும்.
தயக்கத்தை தகர்த்தெறிவோம்: பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, சந்தேகம் எழுந்தால், அதை ஆசிரியரிடம் கேட்கத் தயக்கம். எங்கே ஆசிரியர் நம்மை முட்டாள் என எண்ணி விடுவாரோ, மற்றவர்கள் நம்மை பார்த்துச் சிரிப்பார்களோ என்று பல்வேறுவிதமாகத் தோன்றும் இந்த தயக்கம் வாழக்கையையே முடக்கி விடுகிறது. இந்த தயக்கம் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கும் சென்று, யாரிடமும் எந்தவொரு விவரமும் கேட்க தயக்கம். சில நேரங்களில் தங்களின் உரிமையைக்கூட இந்த தயக்கத்தினால் கேட்காமல் விட்டுவிடுபவர்களும் இருக்கிறார்கள். இதுதான் வெற்றிக்கான முதல் தடைக்கல்.
இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை.
எல்லாருமே ஏதோ ஒரு காலகட்டத்தில்தான் ஒவ்வொரு விசயத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். நமக்குத் தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கத் தயங்கக்கூடாது. தயக்கமின்றி அனைவரிடமும் பேசிப் பழகினாலே நம் வெற்றிக்கான பாதை திறந்துவிடும்.
வெகுமானமாகும் அவமானம்: நாம் தயக்கமின்றி ஏதேனும் கேட்கப் போய், அதனால் அவமானப்பட்டாலும், அதனையும் நம் நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கப் பழகவேண்டும். இன்று வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும், ஒரு காலகட்டத்தில் அவமானத்தையும் சகித்துத்தான் வந்திருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவமானங்களை மைல் கல்லாக்கித் தாண்டினால்தான், வெற்றியின் அருகில் செல்ல இயலும்.
திட்டமிடல்: ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு சிறந்த திட்டம் தூண்டுகோலாக இருக்கும். நாம் வெற்றி பெற சிந்திக்கும் செயலை சிறு சிறு கூறுகளாக்கி, ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கின்ற நேர மேலாண்மை போன்றவை மிக அவசியம். முக்கியமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தந்த குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடித்துப் பழகவேண்டும். ஒவ்வொரு பகுதியாக நமது செயல் முடிய முடிய நாம் வெற்றியை மெதுமெதுவாக நெருங்கிக் கொண்டிருப்பது விளங்கும்.
கடின உழைப்பும், தொடர் முயற்சியும்: முதல் முயற்சியிலேயே யாரும் வெற்றி பெற்று விடுவதில்லை. பல்வேறு தோல்விகளுக்குப் பின்பு கிடைக்கும் வெற்றிதான் இனிக்கும். அப்போதுதான் வெற்றியின் அருமை தெரியும். வெற்றி பெற கடினமான இலக்கு நோக்கிய உழைப்பும், சோர்ந்து விடாத தொடர் முயற்சியும் அவசியம். இவையிரண்டும் இருகண்களைப் போல போற்றுபவர்களை வெற்றியே நோக்கி தேடி வந்து ஆரத் தழுவிக் கொள்ளும்.
வெற்றி எனும் தொடர் நிகழ்வு: வெற்றி என்பது இறுதியல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. கிடைத்த வெற்றியைத் தக்க வைக்க தொடர்ந்து பாடுபடவேண்டும். ஒரு மாணவன் ஒரு தேர்வில் மட்டும் வெற்றி பெறுவது வெற்றியாகாது. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு நடிகரின் ஒரு படம் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. தொடர்ந்து வரும் படங்களும் வெற்றி பெறவேண்டும். இவ்வாறு எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் வெற்றி என்பது ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கிறது. அந்த வெற்றியைத் தொடர நாம் வெற்றி பெற மேற்கொண்ட அதே தொடர் முயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற அனைத்துத் திறன்களையும் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை எனும் போராட்டக் களத்தில் முழுத் தொலைவையும் கடந்து, வாழ்க்கையில் வெற்றி பெற்ற முழுமனிதன் ஆக முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!







