சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

உயர்வுக்கு முதல்படி ஒழுங்கு தவறாமை

ஒழுங்கு என்பது நடைமுறையையும் செய்முறையையும் பற்றியது. இது அடிப்படையிலே புறம் சார்ந்தது.

Updated On :

ஒழுங்காக வைத்துக் கொள்- உன்னையும் உன் செயல்களையும்

(stay organized with discipline)

ஒழுங்கு என்பது நடைமுறையையும் செய்முறையையும் பற்றியது. இது அடிப்படையிலே புறம் சார்ந்தது. மன அளவிலே உள்ளத்திலே இது வளர்ந்து ஒழுக்கமாக மாறும். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என வள்ளுவர் பாராட்டும் ஒழுக்கம் வளரப் போடப்படும் முதல் விதை ஒழுங்கு. முதலில் ஒழுங்கு முறை (ஞழ்க்ங்ழ்ப்ண்ய்ங்ள்ள்) பற்றி இந்தக் கட்டுரையிலே காணலாம்.

இதோ ஓர் இனிய காட்சி.

இன்னும் புலராத இளம் விடியற்காலை. நானிருக்கும் சென்னை அசோக் நகரின் மரங்கள் அடர்ந்த அகலமான நிழற்சாலையில் பல பேர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். விவரமாகச் சொல்வதென்றால் முதியவர்கள் நடைப்பயிற்சியிலும், இளையவர்கள் ஓடுகின்ற பயிற்சியிலும், சில இளைய, முதியவர்கள் ஓட்ட நடைப் பயிற்சியிலும் ஈடுபட்டிருப்பதைத் தினம் நான் காண்பது வழக்கம். இதைப் பயிற்சியாக மேற்கொண்டிருக்கும் அனைவருடைய கால்களிலும் பாப்புலர் பிராண்ட் ஷூக்கள்...  கீழே ட்ராக் சூட்...  மேலே பிராண்டட் பின்னலாடை. சிலர் கைகளில் ரிஸ்ட் பாண்ட்.  சிலர் கால்களில் கால் முட்டியின் இயலாமையைப் போக்க பிடிப்பான்கள். இன்னும் சிலர் தலைகளில் ஹெட் பாண்ட்.

"இதெல்லாம் போட்டுக் கொண்டுதான் வாக்கிங் போகணுமா? சாதாரணமா போனா என்ன கொறச்சல்?... எப்படியும் இந்த நடைக்கான பயன் ஒடம்புல சேரும்தானே? வர வர இதெல்லாம் ஒரு பேஷனாப் போச்சு..'

 இந்த எண்ணத்தோடு போன வாரம் முழுவதும் காலையில வாக்கிங்கில் சந்திக்கிற பல பேரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். சிலபேர் பதில் சொன்னார்கள்.  சில பேர் இது என்ன தொந்தரவு? என்பது போல் பார்த்தார்கள்.  சில பேர் நான் பேசிக் கொண்டிருக்கும் போதே "டபக்'கென்று சாலையைக் கிராஸ் பண்ணி எதிர்ப்பக்கத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.

""இதுதான் செüகரியமா இருக்கு அங்கிள்'' - ஒரு மாணவன்.

""டாக்டர் இப்படித்தான் போகணும்னு சொல்லியிருக்கார்''- 50-ஐத் தாண்டிய சல்வார் கம்மீஸ் லேடி.

""போட்டுண்டுதான் போகணும்னு என் பையன் சொல்றான் சார்'' - அமெரிக்காவில் பணிபுரியும் பையனின் தந்தை.

""என்ன சார் பேட்டியா?... எங்க  காமிராவைக் காணோம்?'' - தலையில் டை அடித்துக் கொண்டுள்ள ஒரு மூத்த இளைஞர்.

இப்படிப் பல ரெஸ்பான்ஸ்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி ஓர் இளைஞர் சொன்ன பதில்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதில் நிறைய உண்மையும் இருந்தது. அதுவே இந்தக் கட்டுரையின் பொருளுக்கும் பொருந்தியது.

அவர் சொன்னார்:  ""இந்த ஷூ பனியன் ஷார்ட்ஸ் எல்லாம் போட்டால்தான் எக்ஸர்சைஸ் பண்ணின மாதிரி இருக்கு அங்கிள். இல்லைன்னா பயிற்சியை ஒழுங்காப் பண்ணின திருப்தி வரல'' என்றார்.

வேறு யாரும் சொல்ல வேண்டாம். ஒரு செயலை ஒழுங்காகச் செய்தால்தான் நமக்கே அதில் மனநிறைவு வரும் என்ற ஓர் உண்மையை அந்த இளைஞரின் பதிலில் நான் கண்டு கொண்டேன்.

ஒழுங்கும் மனநிறைவும்:

அந்தப் பதிலில் அவர் பயன்படுத்தியுள்ள முக்கியமான வார்த்தை ஒழுங்கு என்பதாகும். ஆம். எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை ஒழுங்காகச் செய்ய வேண்டும். இதே போன்று இன்னோர் உதாரணம். நீங்கள் டென்னிஸ் விளையாடுகிறீர்கள். ஷூ போட்டுக் கொண்டுதான் விளையாட வேண்டும் என்று ஆபீஸ் ஷூவைப் போட்டுக் கொண்டு விளையாட முடியுமா? ஆட்டம் கெட்டுப் போவதன்றி டென்னிஸ் கோர்ட்டும் கெட்டுவிடும் இல்லையா? அதற்கு வெறும் காலே மேல்.

ஒழுங்கு முறை தவறிச் செய்யும் போது, அச்செயல் சரியான பயன் கொடுப்பதில்லை.  ஏதோ ஒருமாதிரி செய்து முடித்தாலும் அது நமக்கு மனநிறைவைத் தராது. மார்கழி மாத விடியலில் வீட்டு வாசலில் அழகாகக் கோலம் போட்டுவிட்டு, கொஞ்சம் தள்ளி நின்று தலையை லேசாகச் சாய்த்து, தான் போட்ட கோலத்தை இரசிக்கும் பெண்ணின் முகத்தில் தெரியும் பெருமையையும் நிறைவையும் பார்த்திருக்கிறீர்களா? கோடி கொடுத்தாலும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது. புள்ளிகளும் கோடுகளும் ஓர் ஒழுங்கில் இணையாவிட்டால் கோலம் அலங்கோலமாகிவிடும். கோலம் மட்டுமென்ன? வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான்.

அந்த இளைஞர் சொன்ன இன்னொரு வார்த்தை "திருப்தி'.

""ஒழுங்காப் பண்ணலைன்னா திருப்தி  கிடைக்காது'' என்றார். அதை ஒரு மிகச் சிறந்த பார்வையாக நான் கருதுகிறேன்.

""என்ன சார் சொந்த திருப்திக்காகச் செய்கிறேன் என்பது சரியா?'' என்று ஒரு மாணவர் கேட்டார்.  அதிலென்ன தவறு? தான் திருப்தி அடையுமாறு ஒருவன் பணியாற்றத் தொடங்கினால் பிறகு நாளடைவில் அது வளர்ந்து அடுத்தவர் திருப்திக்காகவும் அவன் பணி புரியத் தொடங்குவான். குளத்தில் சிறு கல் விழுந்து ஏற்படுத்திய வட்டம் விரிந்து விரிந்து பல வட்டங்களாகப் பிரிந்து குளத்தையே நிறைப்பது போல, சீராகவும் ஒழுங்காகவும் செய்யும் பணியிலே தன் உள்ளத்தில் நிறைவைக் காண்பவன், ஒரு காலத்தில் அனைவரும் நிறைவு கொள்ளும்படி பணி செய்யக் கற்றுக் கொள்வான். இன்னொரு விதமாகப் பார்த்தால், தானே தன் செயலில் திருப்தி அடையாதவன், பிறரை எப்படித் திருப்தி செய்வான்?  வாழ்க்கையில் எவ்விதம் முன்னேறுவான்?

தன்னையும் தன்னைச் சார்ந்த பொருட்களையும் ஒழுங்காக வைத்திருப்பவர்கள்தான் வெற்றிக்கான பாதையில் நடக்கத் தயாராகிறார்கள்.

செய்வனத் திருந்தச் செய்;  செய்வதைத் தொடர்ந்து செய்.

ஒழுங்காகத் தன் செயல்களை நிர்வகித்துக் கொள்வதென்பது அவ்வளவு கடினமான காரியமில்லை. அப்படியா? ஆம். ஒருமுறை செய்வதென்பது கடினமே இல்லை.  ஆனால் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு செயலை இடைவெளியின்றித் தொடர்ந்து ஒழுங்காகச் செய்வது  ஒன்றே அச்செயலுக்கான முழுப் பயனையும், கிடைத்தற்கரிய மனநிறைவையும் தருகின்ற சக்தியாக விளங்குகின்றது.

ஓர் ஆசிரியர் தனது மாணவனிடம் அவனது வலது கையை நீட்டச் சொன்னார். பிறகு அவனது உள்ளங்கையின் மேல் கொஞ்சம் நீர் நிரம்பிய ஒரு சிறிய டம்ப்ளரை வைத்தார்.  ""இதன் எடை 15 கிராம். இது சுமையாக இருக்கிறதா, இப்படியே வைத்துக் கொள்ள முடியுமா?''

என்று கேட்டார். மாணவன், ""சுமையில்லை'' என்று சொல்லி டம்ப்ளரை ஏந்திக் கொண்டு நின்றான். வகுப்பிலுள்ள பிற மாணவர்களும், ""இது ரொம்ப எளிது.  எங்களாலும் செய்ய முடியும்'' என்று கோரஸôகக் குரல் கொடுத்தனர். ஆசிரியர் வேறு ஒன்றும் பேசவில்லை. பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார். டம்ப்ளரைச் சுமந்து நின்ற பையனும் குறும்பாக ஆசிரியரையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். ஒரு நிமிடம் ஆனது பையனுக்கு கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பது இடைஞ்சலாக இருப்பதுபோல் தோன்றியது.  இன்னும் இரண்டு நிமிடங்கள்.  மாணவனுக்குக் கை வலிப்பதுபோல் தோன்றியது. பத்தாவது நிமிடத்திலிருந்து கை வலிக்கவே தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல, 15 கிராம் எடையுள்ள டம்ப்ளர் இன்னும் பத்து மடங்கு எடை அதிகமாக ஆனது போல் தோன்றியது. 15 வது நிமிடத்தில், ""சார் முடியலை'' என்று மாணவன் டம்ப்ளரைக் கீழே வைத்துவிட்டான். ஆசிரியர் இந்த நிகழ்விலிருந்து பெற வேண்டிய அறிவுரையைச் சொன்னார்:  ""எத்தனை எளிதான காரியமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்வது மிகக் கடினம்.  ஏன் கையில் டம்ப்ளரே இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கைகளை நீட்டியபடியே வைத்திருப்பது கடினம்தானே?''

ஆம். உங்களை நீங்களே சீர் செய்து கொள்ள நாம் காணப் போகிற பாதைகளும் பயிற்சிகளும் எளியவைதான்.  ஆனால் அவற்றைத் தொடர்ந்து எப்போதும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது எளிய வேலை அல்ல. அது யாருக்கு முடிகிறதோ, அவர்களே வெற்றிப் பாதையில் பயணம் செய்யத் தயாராக இருக்கிறவர்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.