தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷ்ணு பிரசாத்

இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் விரும்பும் விளையாட்டுகளில் கார் பந்தயமும் ஒன்று. இந்தியாவில் பல்வேறு இடங்களில் மட்டும் நடக்கும் கார் பந்தயங்களில்
தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷ்ணு பிரசாத்
Updated on
2 min read

இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் விரும்பும் விளையாட்டுகளில் கார் பந்தயமும் ஒன்று. இந்தியாவில் பல்வேறு இடங்களில் மட்டும் நடக்கும் கார் பந்தயங்களில் வெற்றி பெற்று உலக அளவில் நடக்கும் பிரபலமான ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பது இப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான இளைஞர்களின் கனவு.

அந்த வகையில் நாடு முழுவதும் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெற்றுத் தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத்.

சென்னையில் வசிக்கும் தந்தை வி.எஸ்.ஆர். பிரசாத், முன்னாள் கார் பந்தய வீரர். தந்தை பிரசாத் கார் பந்தயத்தில் பங்கேற்பவர் என்பதால் மகன் விஷ்ணு பிரசாத்துக்கு 6 வயதாக இருக்கும்போதே தொடர்ந்து அவரைப் பந்தயங்களுக்கு அழைத்துச் செல்வார். அதனால் சிறு வயதாக இருக்கும்போதே கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை விஷ்ணு பிரசாத்துக்கு வந்துவிட்டது.

இதனால் சிறு வயதிலிருந்து தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு விஷ்ணுபிரசாத்துக்கு தந்தை பிரசாத் ஆதரவளித்தார். மகன் விஷ்ணு பிரசாத்தும் தந்தையின் ஆசையை மதித்து கார் பந்தயங்களில் பங்கேற்கத் துவங்கினார்.

6 வயது முதல் கோ கார்ட்டிங் எனப்படும் கார் பந்தயத்தில் பங்கேற்கத் துவங்கினார் விஷ்ணு பிரசாத். 7 வயது முதல் 13 வயது வரையுள்ள சிறுவர்களுக்கான தேசியப் போட்டியில் 5 முறையும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று தனது திறமையை நிரூபித்தார்.

இப்போது ஃபார்முலா 4 எனப்படும் கார் பந்தயத்திலும் தனது திறமையைப் பறைசாற்றி வெற்றி வாகை சூடி வருகிறார் விஷ்ணு பிரசாத்.

கோவை கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடந்த கார் பந்தயத்தில் 3 பந்தயங்களில் முதலிடமும் ஒரு பந்தயத்தில் மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்ற விஷ்ணு பிரசாத் நம்மிடம் பேசியதிலிருந்து...

""அப்பா வி.எஸ்.ஆர். பிரசாத்தின் ஊக்கத்தினால்தான் கார் பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாவும் பி.இ. படித்து முடித்து வேலைக்குச் செல்லும் மூத்த சகோதரியும் எனக்கு மிகவும் ஊக்கமளித்து வருகின்றனர்.

இப்போது சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.இ. தகவல் தொழில்நுட்பப் பாடப்பிரிவில்  படித்து வருகிறேன். 6 வயது முதல் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன்.

இப்போது ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டியிலும் பங்கேற்று வருகிறேன். மைக்கேல் ஷூமேக்கரைப் போல வர வேண்டும் என்பது என்னுடைய கனவு. அவரைத்தான் ரோல் மாடலாக நினைத்துள்ளேன். பார்முலா 1 போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூட வேண்டும்.

கார் பந்தயத்தில் ஈடுபட விரும்புபவர்கள், சிறிய வயதில் இருந்து அதிகப் போட்டிகளில் பங்கேற்று உடலைத் தகுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகக் கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெறுவதற்குக் கடின உழைப்புத் தேவை. தனி மனிதனாகக் கார் பந்தயங்களில் பங்கேற்க அதிகம் பொருள் செலவாகும். இதனால் திறமையை நிரூபித்துவிட்டால் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். இவ்வாறு கிடைத்தால் கண்டிப்பாகத் திறமையுள்ளவர்கள் பெரிய அளவில் போட்டிகளில் பங்கேற்றுச் சாதிக்க முடியும்.

வெளிநாடுகளில் ஆண்டுக்கு 50 பந்தயங்கள் வரை நடக்கும். ஆனால் இந்தியாவில் அதிகபட்சமாக 6 அல்லது 7 பந்தயங்கள் மட்டும் நடக்கின்றன. வெளிநாடுகளில் நடந்த பந்தயங்களிலும் பங்கேற்றுள்ளேன். எனக்கு ஜேகே டயர் நிறுவனம் ஆதரவு தந்துள்ளது'' என்றார்  விஷ்ணு பிரசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com