நாளை நான் ஐஏஎஸ்! கேரளத்தைச் சேர்ந்தவர் தமிழில் எழுதலாம்!
தேர்வு முறை: மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறுகின்றது.


தேர்வு முறை: மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறுகின்றது.
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. ஆளுமைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் பொது அறிவு வினாக்கள் இடம்பெறும். மொத்த வினாக்கள் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி 100 வினாக்கள். 1 வினாவுக்கான மதிப்பெண் 2 ஆகும். ஆக மொத்த மதிப்பெண்கள் 200. எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு: 120 நிமிடங்கள். நேரம் காலை 9.30 முதல் 11.30 வரை.
இரண்டாவது தாள் திறனறிவு எனப்படும் சிசாட் தேர்வு ஆகும். மொத்த வினாக்கள் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி 80 வினாக்கள். 1 வினாவுக்கான மதிப்பெண் 2.5 ஆகும். ஆக மொத்த மதிப்பெண்கள் 200. எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு 120 நிமிடங்கள். நேரம் மாலை 2.30 முதல் 4.30 வரை. இத்தேர்வு ஒரே நாளில் காலை மற்றும் மாலை நடைபெறும்.
தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண்: முதல்நிலைத் தேர்வில் தவறாக ஒரு வினாவுக்கு விடையளித்திருந்தால் 0.33% அதாவது 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் பொது அறிவில் 50 வினாக்களுக்கு விடையளித்திருக்கிறார். அதில் 35 வினாக்கள் சரியாக விடையளிக்கப்பட்டிருக்கின்றன. 15 வினாக்கள் தவறாக விடையளிக்கப்பட்டிருக்கின்றன. எனில் அவர் பெறும் மதிப்பெண் (35X2) - (15 X 0.33) 70-4.95 = 65.05 ஆகும்.
2015 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வில் இரண்டாவது தாளான சிசாட் தேர்வு பொது அறிவு பாடத்தினை மதிப்பிடுவதற்கு தகுதித் தாளாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் தாளான பொதுஅறிவுப் பாடத்தின் மதிப்பெண் அடிப்படையிலே மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அந்தப் பொதுஅறிவுப் பாடத்தினை மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றால் இரண்டாம் தாளில் அம்மாணவர் 13 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அம்மாணவர் இரண்டாவது தாளில் பெறவில்லையென்றால் அவரது முதல் தாளான பொது அறிவுத்தாள் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அவர் தேர்ச்சி பெறாதவராகிவிடுவார்.
முதல்நிலைத் தேர்வில் இருந்து முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யும் விதம்: மொத்த காலிப்பணியிடங்கள் ஷ் 13 என்ற விகிதத்தில் முதல்நிலைத் தேர்வில் இருந்து மாணவர்கள் முதன்மைத் தேர்வு எழுதிட அழைக்கப்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக காலிப்பணியிடங்கள் 1500 என்றால் 1500 x 13 = 19,500. இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகின்றது.
முதல்நிலைத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாள்களின் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்கும்.
முதன்மைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான விண்ணப்பங்கள், வழிகாட்டுதல் குறிப்புகள் போன்றவை இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையத்தால் முறையாக தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மூன்று கட்டத் தேர்வுகளில் முதன்மைத் தேர்வு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே ஆளுமைத் தேர்வுக்குத் தகுதி பெற வைப்பதற்கும், தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெறுவதற்கும், தர வரிசையில் முன்னிலை பெறுவதற்கும் உதவுகின்றன.
முதன்மைத்தேர்வு மொத்தம் 9 தாள்கள் அடங்கியதாக இருக்கின்றது. இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பப்பாடம், 4 தாள்களாகப் பிரிக்கப்பட்ட நீதி நெறி உள்ளிட்ட பொது அறிவுப் பாடங்கள், ஒரு கட்டுரைத்தாள், ஒரு ஆங்கில மொழித்தாள் (கட்டாயம்) மற்றும் இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசியமயமாக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழித்தாள் (கட்டாயம்) என ஒன்பது தாள்கள் உள்ளன. இவை அனைத்தும் எழுத்துத் தேர்வாக நடைபெறும். இவற்றில் கட்டாயம் எனப்படுகின்ற ஆங்கிலமொழித்தாள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழித்தாள் ஆகிய இரண்டு தாள் தகுதிபெறும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. இத்தாள்கள் மெட்ரிக் (10ஆம் வகுப்பு) தரத்தில் இருக்கும். இந்த இரண்டு தாள்களிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்று தகுதி பெற்றால் மட்டுமே மற்ற 7 தாள்களும் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தகுதிப் பெறுவதற்கான ஆங்கிலமொழித்தாளில் குறைந்தபட்சம் 25 சதவிகிதமான 300 க்கு 75 மதிப்பெண்களும், தேசிய மொழித்தாளில் குறைந்தபட்சம் 30 சதவிகிதமான 300 க்கு 90 மதிப்பெண்களும் பெறவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கட்டாய ஆங்கில மொழித்தாள் தவிர்த்து, மாணவர்கள் தேசிய மொழித்தாள்களில் ஏதேனும் ஒரு மொழித்தாளினை தங்களின் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கேரளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மலையாள மொழித்தாளினைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் தமிழ் போன்ற பிற மொழிகளையும் தேர்வு செய்யலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...