நாளை நான் ஐஏஎஸ்!: வழிகாட்டுபவரே துணை!
குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை இதற்குத் தயாராகும் தேர்வர்கள் பல்வேறு பின்புலங்களைக் கொண்டவர்களாகவும், வெவ்வேறு வகையான உந்துதல்களினால் இத்தேர்வை தேர்ந்தெடுத்தவர்களாகவும் இருப்பர்.


குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை இதற்குத் தயாராகும் தேர்வர்கள் பல்வேறு பின்புலங்களைக் கொண்டவர்களாகவும், வெவ்வேறு வகையான உந்துதல்களினால் இத்தேர்வை தேர்ந்தெடுத்தவர்களாகவும் இருப்பர்.
சிலர் முழுவதும் ஆங்கில வழியிலேயே படித்துவிட்டு பெற்றோரின் வழிகாட்டுதலில் தேர்வுக்குத் தயாராகி வருவர். வேறு சிலரோ பெற்றோரின் நிர்ப்பந்தத்தில் தேர்வு எழுதுபவர்களாக இருப்பதுண்டு.
மற்ற சில தேர்வர்களோ கிராமப்புறத்தில் இருந்து முழுக்க முழுக்க தமிழ்வழியிலேயே படித்துவிட்டு தன்னூக்கத்தினால் இத்தேர்வுகளை எழுதி வருவர்.
இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், நம்பிக்கையோடு தயாராகும் இத்தேர்வர்களுக்கு சில நேரங்களில் நல்ல வழிகாட்டுதல்கள் அமையாமல் போய்விடுகின்றன.
அதிலும் குறிப்பாக, கிராமப்புறத்திலிருந்து வரும் தேர்வர்களுக்கு ஆர்வமும், ஊக்கமும் இருக்கிறது. இவர்களுக்கு பல நேரங்களில் முறையான வழிகாட்டுதல்கள் இன்மையினால் தகுதியிருந்தும் வெற்றிவாய்ப்பு நழுவிச் சென்றுவிடுகிறது.
இந்த இடத்தில் பெற்றோர்களின் கவனத்திற்கு சில விசயங்களை முன் வைத்திட விரும்புகின்றேன்.
குடிமைப்பணித்தேர்வு குறைவான பணியிடங்களுக்கான நாடு தழுவிய போட்டித்தேர்வு ஆகும். இதில் பின்னடைவுகள் தவிர்க்க இயலாதது என்பது உண்மை. அதனால் பெற்றோர்கள் தேர்வர்களை இறுதி முயற்சிவரை உற்சாகப்படுத்துவதும், உறுதுணையாக இருப்பதும் அவசியமெனக் கருதுகிறேன்.
ஒரு தேர்வர் நேர்முகத் தேர்வு வரை சென்று வெற்றி வாய்ப்பினை இழக்கும்போது மனதில் அவரின் நம்பிக்கையின் அளவு குறைந்திருக்கும்.
இத்தகைய சிறு பின்னடைவில் இருந்து அவர் தானாகவே மீண்டெழுவார். அதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும். பெற்றோர் அவரது சூழலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது ஆகும்.
அதேபோல சில நேரங்களில் அதிகமானோர் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றதாகச் செய்திகள் வரலாம். அவை மிகைப்படுத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம். இத்தகைய செய்திகளில் எதார்த்தமின்மை இருப்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
ஏனெனில், குடிமைப்பணிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் மூன்றுமுறை பாடத்திட்டமும், தேர்வுத் திட்டமும் மாறியுள்ளன. இந்த மாற்றம் பிராந்தியமொழி வழியில் படித்த தேர்வர்களை மட்டுமல்லாது, ஆங்கில வழியிலேயே படித்த தேர்வர்களைக் கூட பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது என்பது பெற்றோர் உணர வேண்டிய தகவலாகும்.
மேலும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பயிற்சி மையத்தின் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்க வேண்டியதில்லை. தேர்வரின் முயற்சியை ஊக்கப்படுத்தினாலே போதுமானது.
ஒரு வெற்றியாளரைப் பற்றிக் குறிப்பிடுவதன் மூலம் இதனை எளிதாக விளக்க முடியும் என்று கருதுகின்றேன்.
மு.பொன்னியின் செல்வன், பொறியியலில் பட்டம் பெற்றவர். குடிமைப்பணித் தேர்வுகளில் வெல்வதே தனது இலட்சியமாகக் கொண்டவர். தமிழையும், வரலாற்றையும் விருப்பப்பாடமாக எடுத்துக் கொண்டவர்.
தனது ஒவ்வொரு முயற்சியிலும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் தவறாது வெற்றி பெற்றுவிடுகின்றவர். ஆனாலும் இறுதிப்பட்டியலில் இடம் பிடிக்க முடியாது பின்னடைவுகளைச் சந்தித்தவர்.
இவரின் முயற்சிக்கு பெற்றோரின் ஊக்கம் கிடைத்ததாலும், நல்ல வழிகாட்டுதல் கிடைத்ததாலும் சிறந்ததோர் வெற்றியைப் பெற்று பெருமை சேர்த்தார்.
குடிமைப்பணிகளுக்கான ஒவ்வொரு புத்தகத்தினையும் ஓர் ஆய்வு மாணவரைப்போல ஆழ்ந்து படிக்கின்ற பொன்னியின் செல்வன் தொடர்ந்து தேர்வுகளை எழுதுகின்றார். முதல்நிலைத்தேர்வில் வெல்கிறார். முதன்மைத் தேர்விலும் வென்று நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறார். ஆனால் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் இடம் பெறாமல் வாய்ப்பு அவருக்கு நழுவி விடுகிறது.
மதிப்பெண்களை தேர்வாணையம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் நேர்முகத்தேர்வில் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களே அவருக்குக் கிடைத்திருந்தன. ஆனாலும் தோல்விகளால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. மீண்டும் உற்சாகமாக தேர்வுக்குப் படிக்கத் தொடங்கிவிடுகின்றார்.
ஒரு நேரத்தில், ""பலரும் ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டார்கள். உனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது?'' இதுபோல பல வினாக்கள் எழும்புகின்றன. இத்தகைய எதிர்மறையான புறச்சூழல்களினால் தேர்வு எழுதுவதைத் தொடர்வதா? விடுவதா? என்ற குழப்பத்திற்கு உள்ளாகிவிடுகிறார்.
அவரது நிலையைப் புரிந்து கொண்டு ஒரு மாறுதலுக்காக அவரை பிற போட்டித் தேர்வுகளிலும் கவனம் செலுத்திட ஒரு சிறிய ஆலோசனையை அவரிடம் முன்வைத்தோம். அவரும் ஏற்றுக் கொண்டு முயற்சியினை மேற்கொண்டார்.
இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. எழுதிய அந்த ஆண்டிலேயே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றார். வெற்றிக்கான மகிழ்ச்சி மறைவதற்குள் மத்திய பணியாளர் தேர்வாணையத் (எஸ்.எஸ்.சி) தேர்விலும் வெற்றிபெற்றார்.
இதனால் அவரது நம்பிக்கை மேலும் வளர்ந்தது. மீண்டும் குடிமைப்பணித்தேர்வில் வெற்றி பெறும் இலட்சிய இலக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார்.
முதன்மைத்தேர்வுக்கு அவரையும் உறுப்பினராகக் கொண்ட ஒரு குழு அமைத்தோம். இம்முறை அவரது எழுத்துத்தேர்வில் பதில் கட்டமைப்பில் முதற்கவனத்தை வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை மிகவும் சரியாக அவர் பயன்படுத்திக்கொண்டார்.
எழுத்துத் தேர்வினை எழுதி முடித்ததும் அவரை நேர்முகத்தேர்வுக்கு தயார்ப்படுத்திட ஓர் அனுபவமிக்க குடிமைப்பணி அதிகாரி ஒருவரின் உதவியை நாடினோம்.
குடிமைப்பணி அதிகாரி, இதுவரை நடந்த நேர்முகத் தேர்வுகளில் தேர்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு தேர்வர் கூறிய பதில்களையும் முழுமையாக எழுதி வருமாறு கூறினார். அதன்படியே தேர்வரும் கடந்த மூன்று நேர்முகத் தேர்வுகளில் தேர்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும் எழுதி குடிமைப்பணி அதிகாரியிடம் கொடுத்தார்.
தேர்வரிடம் கேட்கப்பட்ட முந்தைய கேள்விகளையும், அவரது பதில்களையும் அடிப்படையாகக் கொண்டு சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். சில கேள்விகளைக் குறிப்பிட்டு இவை மீண்டும் இந்தமுறை உங்களிடம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இக்கேள்விகள் கேட்கப்பட்டால் பதிலை எவ்வாறு கூறலாம் என்ற வழிகாட்டுதலையும் தேர்வருக்குச் சொல்லிக் கொடுத்தார். மேலும் உடல் மொழியில் சில மாற்றங்களையும் செய்ய தேர்வரிடம் கூறினார்.
நேர்முகத்தேர்வில் ஏறத்தாழ 80 வினாக்கள் அவர் கூறியபடியே அமைந்தன. தேர்வின் முடிவுகளும் வந்தன. மும்பையில் பன்னாட்டு விமான நிலையத்தில் எஸ்.எஸ்.சி பணியிடத்தில் இருந்த தேர்வர் மகிழ்ச்சி பெருக்கோடும், உற்சாகத்தோடும் வழிகாட்டியவரை அலைபேசியில் அழைக்கிறார். "தான் தேர்வில் வென்றுவிட்டதாக' ஆனந்தம் பொங்கிடக் கூறுகிறார். அவரது வழிகாட்டுதலுக்கும் நன்றிகளைச் சொல்கிறார்.
மு.பொன்னியின் செல்வன், திருச்சிராப்பள்ளி அருகே ஒரு சிறிய கிராமப் பின்புலத்தில் இருந்து தனது பள்ளி வாழ்க்கையைத் தொடங்கியவர்.
தற்போது அவருக்கு விருப்பமான இந்திய தகவல் பணி (ஐஐந) வாய்ப்புப் பெற்று புதுதில்லியில் மத்திய அரசின் பப்ளிகேஷன்ஸ் டிவிசனில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார்.
OJANA, KURUKSHETRA, INDIA YEAR BOOK, EMPLOYMENT NEWS போன்ற மத்திய அரசின் முக்கிய பதிப்புகள் இவரது மேற்பார்வையிலும், பங்களிப்போடும் வெளிவருகின்றன.
பெற்றோர் தந்த ஊக்கமும், சரியான வழிகாட்டுதலும்தான் ஒரு நல்ல முயற்சியாளர் வெற்றியாளராகத் துணைபுரிந்தன. முதல்நிலைத்தேர்வு நோக்கில் தொடர்ந்து காண்போம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...