""அணுகுண்டு சோதனையும், ராக்கெட் ஏவுதலும் செயற்கைக்கோள்களும் தான் அறிவியல் வளர்ச்சியாக நம் நாட்டில் மதிக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை தொடர்புடைய பணிகளை மட்டுமே அரசுகள் அறிவியல் பணிகளாகப் பார்க்கின்றன. இவை உண்மையில் அறிவியல் வளர்ச்சி அல்ல; தொழில்நுட்ப சாதனைகள் மட்டுமே. இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அடிப்படை அறிவியல் துறைகளில் நாம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளோமோ, அதுதான் நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சி...''
-இவை பாரதரத்னா விருது பெற்ற வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவின் உள்ளத்திலிருந்து வெளியான வார்த்தைகள். பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக இருந்துள்ள ராவ், அதற்காக அரசை விமர்சிக்கத் தயங்குவதில்லை. அதனால் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவர் கவலைப்படுவதும் இல்லை.
மைசூரு மாகாணத்தின் பெங்களூரில் 1934, ஜூன் 30-இல் பிறந்தவர் சிந்தாமணி நாகேச ராமசந்திர ராவ். சுருக்கமாக சி.என்.ஆர்.ராவ்.
இவரது தந்தை ஹனுமந்த நாகேச ராவ், தாய் நாகம்மா. இருவரும் கல்வியாளர்கள். ராவுக்கு, சிறு வயதில் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்பிக்கப்பட்டது. பசவன்குடியிலுள்ள ஆச்சார்ய பாடசாலாவில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை 1947-இல் முடித்த ராவ், பெங்களூரு மத்திய கல்லூரியில் சேர்ந்து, தனது 17-வது வயதில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்!
மேற்படிப்புக்காக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், வேதியியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார் (1953). அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ராவ், 1958-இல் தனது 24-வது வயதில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்!
அங்கு பயின்றபோது, வேதியியல் துறையில் நிறமாலை, எக்ஸ் கதிர்கள், எலக்ட்ரான் விளிம்பு வளைவு சோதனைகள் மூலமாக ரசாயன மூலக்கூறுகளை ஆராய்ந்தார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ராவ், 1959-இல் இந்தியா திரும்பினார். பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
1963-இல் கான்பூரில் புதிதாகத் துவங்கப்பட்ட ஐஐடியின் வேதியியல் துறையில் இணைந்தார். அங்கு சென்ற ஓராண்டிலேயே துறைத் தலைவராக உயர்ந்தார். 1976 வரை அங்கு பல்வேறு வேதியியல் ஆராய்ச்சிகளில் ராவ் ஈடுபட்டார். இதனிடையே 1964-இல் இந்திய அறிவியல் அகாதெமியின் ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரபல விஞ்ஞானி சதீஷ் தவானின் அழைப்பை ஏற்று 1976-இல் மீண்டும் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்த ராவ், அங்கு திடநிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல் (solid state and structural chemistry) துறையை உருவாக்கினார். 1984-இல் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநரான ராவ், 1994 வரை அங்கு பணியாற்றினார்.
இத்தனை பணிகளுக்கு இடையிலும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், பர்டியூ, கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் வருகைப் பேராசிரியராகவும் ராவ் பணிபுரிந்தார். 1989-இல் பெங்களூரில் தான் நிறுவிய ஜவாஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வு மையத்தின் (JNCASR) கெளரவத் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார்.
ராவின் சாதனைகள்: அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் உமிழும் அல்லது உட்கவரும் ஒளியைக் கொண்டு அவற்றின் தன்மையை உணர முடியும். இதற்கான சோதனையே வேதியியல் நிறமாலை (Spectroscopy). ராவ் இத்துறையில் பல வெற்றிகரமான ஆராய்ச்சிகளை நிகழ்த்தி பல புதிய முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
உலோக ஆக்ûஸடுகளின் வெப்பநிலையை உயர்த்தியும், குறைத்தும் அவற்றின் மின்கடத்தித் திறனைக் கண்டறிந்தார் ராவ். அந்தக் கண்டுபிடிப்புகள், மின்னியலிலும் மின்னணுவியலிலும் வெகுவாகப் பயன்படுகின்றன.
மின்சாரத்தைத் தடையின்றிக் கடத்தும் மீகடத்திகள் (Super conductors) குறித்தும், மிக நுண்ணிய நானோ பொருள்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் (Nano Technology) வேதியியலின் பயன்பாடு குறித்தும் ராவ் பிரதானமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் திடநிலை வேதியியலின் பங்களிப்பைப் பயன்படுத்த ராவின் ஆராய்ச்சிகள் வித்திட்டன. அண்மையில் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட மங்கள்யாண் செயற்கைக்கோள் திட்டத்திலும் ராவ் துணை நின்றார்.
சி.என்.ஆர்.ராவ் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். தவிர, 45 நூல்களையும் எழுதியுள்ளார். 1985 முதல் 1989 வரையும், 2005 முதல் 2014 வரையும் 5 பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக ராவ் இருந்துள்ளார்.
உலகம் முழுவதிலுமுள்ள 60-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் கெüரவ முனைவர் பட்டங்களை அவர் பெற்றுள்ளார். அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள அறிவியல் கழகங்களின் கெüரவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி, ராவ் ஒருவரே.
மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதெமி (Third World Academy of Sciences) அமைப்பில் உறுப்பினராகவும், தலைவராகவும் ராவ் செயல்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பாரடே கழகத்தின் மார்லே விருது (1967), ராயல் சொûஸட்டியின் பதக்கம் (1981) ஹக்ஸ் பதக்கம் (2000), யுனெஸ்கோவின் ஐன்ஸ்டீன் விருது (1996), லண்டனின் எஃப்.ஆர்.எஸ் (1984), பிரான்ஸின் செவாலியே (2005), ருஷ்யாவின் நட்புறவு விருது (2009), ஜப்பானின் ஆர்டர் ஆப் ரைசிங் சன் (2015) உள்ளிட்ட உலக அளவிலான பல கெüரவங்களை ராவ்பெற்றுள்ளார்.
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1968), யுஜிசியின் சர் சி.வி.ராமன் விருது (1975), இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் சத்யேந்திரநாத் போஸ் பதக்கம் (1980), மேகநாத் சஹா விருது (1990), பத்மஸ்ரீ (1974), பத்ம விபூஷண் (1985), பாரத ரத்னா (2014) ஆகிய கெüரவங்களை உள்நாட்டிலும் ராவ் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


