புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாளை நான் ஐஏஎஸ்! பாதைகள் அமைவதற்காக நதிகள் காத்திருப்பதில்லை!

வெல்ல முடியாத தேர்வும் இல்லை. அதில் தொடமுடியாத இலக்கும் இல்லை. குடிமைப்பணித் தேர்வுகளில் வெல்வதே குறிக்கோள் என நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்தக் குறிக்கோளினை அடைவதற்கு ஏதுவான தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :16 மே 2016, 3:30 pm

மு.சிபிகுமரன்

போட்டித் தேர்வர்களே,

வெல்ல முடியாத தேர்வும் இல்லை. அதில் தொடமுடியாத இலக்கும் இல்லை. குடிமைப்பணித் தேர்வுகளில் வெல்வதே குறிக்கோள் என நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்தக் குறிக்கோளினை அடைவதற்கு ஏதுவான தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய நட்பு வட்டம், படிக்கின்ற நாளிதழ்கள், பாடநூல்கள், அவை தொடர்பான கலந்துரையாடல்கள் என உங்களது நடவடிக்கை ஒவ்வொன்றும் குறிக்கோளினை மையப்படுத்தியதாகவும், அதனை நோக்கிய பயணமாகவும் அமைதல் வேண்டும்.

நிகழ்காலத்தினை தனது குறிக்கோளினை அடைவதற்கான சீரிய செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டவர்களின் எதிர்காலம் பொற்காலமாகிறது. தனது ஆற்றலை அறிந்தவர்கள், அதனைப் பயன்படுத்திடத் தெரிந்தவர்கள், ஆற்றாமை கொள்வதில்லை. ஏனென்றால், பாதைகள் அமைவதற்காக நதிகள் காத்திருப்பதில்லை.

உங்களால் சாதிக்க முடியும் என்று நீங்கள் நம்பினால், அந்தக் குறிக்கோளினை அடைய இறுதிவரை முயற்சி செய்யும் மனோதிடம் உங்களுக்கு இருந்தால், அந்தக் குறிக்கோள் மட்டுமே உங்களின் இதயத்தின் துடிப்பாக இருந்தால், அதனை அடைவதற்கான ஆற்றலை உங்களுக்கு பெருக்கிக் கொள்ளும் உழைப்பும், புத்திசாலித்தனமும் இருந்தால் போதும். தன்னம்பிக்கை என்னும் தன்னிகரற்ற தோழன் உங்களை வழி நடத்துவான்.

உங்களுடைய கிராமப்புறக்கல்வி, தமிழ்வழிக்கல்வி, அஞ்சல்வழிக்கல்வி, நலிந்த பொருளாதாரப் பின்புலம் என எதுவும் தடையில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களைக் குறைத்து மதிப்பிடுபவரைவிட்டு எப்போதும் விலகி நில்லுங்கள். ஏனெனில், முடியாது என்பவர்களுக்கு ஒருபோதும் விடியாது. உங்களின் தற்போதைய நிலை பற்றி கவலை கொள்ளாதீர்கள். அதே வேளையில் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வதில் ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்.

ஒருமுறை வெற்றி நழுவலாம். முயற்சியை நழுவவிடாதீர்கள். வெற்றி மறுமுறை வசப்படலாம். உங்களுக்கான வெற்றி மகுடம் அடுத்த சுற்றில் சூட்டப்படலாம். ஆம் தேர்வர்களே, வாய்ப்புகள் என்னும் வாசல், திறந்து கொண்டே இருக்கும்.

ஆகாயத்தில் இருந்து கொண்டே பூமியில் இரைதேடும் பருந்துகள் போல், குறிக்கோளினையே கூர்ந்து நோக்கிப் பயணியுங்கள். உங்களது குறிக்கோளுக்குத் தொடர்பற்று சுற்றி நிகழ்பனவற்றை நெட்டித் தள்ளுங்கள்.

இத்தருணத்தில் உயர்ந்த தனது குறிக்கோளினை அடைந்திட பல்வேறு தடைகளைத் தகர்த்து இலட்சியத்தினை அடைந்த வெற்றியாளர் ஒருவர் பற்றிக் குறிப்பிடுதல் சிறப்பாக இருக்குமென கருதுகிறேன்.

அவர் பெயர் செந்தில். தற்போது இந்திய வருவாய்ப் பணியில் வருமான வரித்துறை துணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

அவரது ஊர், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயக் குடும்பம். கிராமப்புற பள்ளிகளில் படித்தார். இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளில் வெல்ல வேண்டும் என்ற இலட்சியம் எழுகிறது.

பட்டப்படிப்பு முடிந்த அடுத்த ஆண்டே தேர்வுக்குப் படிக்கத் தொடங்குகிறார். 2006 ஆம் ஆண்டு கால கட்டமது. டெல்லி சென்று படித்தால்தான் முழுமையான பயிற்சி கிடைக்கும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களால் நம்பப்பட்ட காலம்.

ஆனால், செந்திலுக்கு அங்கெல்லாம் செல்வதற்குத் தக்க வாய்ப்பு அமையவில்லை. சென்னையில் இருந்தே படிக்க முடிவெடுக்கின்றார். அவரது பெற்றோரிடம் தனது எண்ணத்தைக் கூறுகின்றார். செந்திலின் முயற்சிக்கு அவர்கள் ஊக்கம் அளித்தனர். இருப்பினும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தேர்வுக்குப் படிக்க வேண்டும். முடியவில்லையென்றால், வேறு ஏதாவது வேலையைத் தேடிக் கொள் என்றும் கூறிவிட்டனர்.

பட்டப்படிப்பு முடித்தவுடன் தான் ஏதேனும் வேலைக்குச் சென்றால்தான் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற சூழலை உணர்ந்தவர் செந்தில். ஆனால் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி என்ற குறிக்கோளினை அடைந்தால் பெருமையும் சேரும் என்று நம்பிக்கை கொண்டதால் ஆர்வத்துடன் தேர்வுக்குத் தயாராகிறார்.

தனக்கிருந்த குறுகிய கால இடைவெளியையும், நெருக்கடியையும் உணர்ந்து தீவிர முயற்சியினை மேற்கொள்கிறார்.

தன்னோடு தேர்வுக்குப் படிக்கும் சக தோழர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது செந்தில் விழித்துக் கொண்டிருப்பார். படித்துக் கொண்டிருப்பார். பல் துலக்கும் போதுகூட சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் உலக வரைபடத்தினை உற்றுநோக்கிக் கொண்டிருப்பார்.

இவ்வளவு பாடக்குறிப்புகளைப் படிக்க வேண்டுமா? இத்தனை வினாக்களுக்கு பயிற்சி செய்ய வேண்டுமா? என்று பிற போட்டியாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, செந்தில் அப்பணியை முடித்திருப்பார்.

2006 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வினை எழுதுகிறார். முடிவுகள் வருகின்றன. ஆர்வத்தோடும், முழு அர்ப்பணிப்போடும் தனது முயற்சியினை மேற்கொண்ட அந்த இளைஞரை முதல்நிலைத்தேர்வின் முடிவு ஏமாற்றிவிடுகின்றது. அடுத்த நிலைக்குக்குக்கூட வாய்ப்பின்றி முதல்நிலையிலேயே அப்பயணம் முடங்கிவிட்டது.

இதற்கெல்லாம் சிறிதும் கலங்காத செந்தில் முதன்மைத்தேர்வுக்குப் படிக்கத் தொடங்கிவிட்டார். மீண்டும் 2007 ஆம் ஆண்டு முதல்நிலைத்தேர்வினை எழுதுகிறார். வெல்கிறார். முதன்மைத்தேர்விலும் வென்று நேர்முகத்தேர்வு செல்கிறார். 2008 ஆம் ஆண்டு அதற்கான முடிவுகள் வருகின்றன. ஆர்வம் பொங்கிட வெற்றிப் பட்டியலைப் பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பெற்றோர் அனுமதித்த இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. மேலும் இந்தத் தோல்வி தனது பிள்ளையைப் பாதித்துவிடுமோ என்றும் அவரது பெற்றோர் அஞ்சினர். அதனால், ""தேர்வு எழுதியது போதும்'' என்று கூறிவிட்டார்கள்.

இவ்வளவு உழைப்பு, இத்தனை முயற்சி, அர்ப்பணிப்பு இவையெல்லாம் பயனற்று போவதா? என்ற வருத்தம் இப்போது அவரைச் சூழ்கிறது. தோல்விக்குக் கலங்காத அவர், முயற்சியைத் தொடர முடியாமல் போகும் நிலை கண்டு கலங்குகிறார்.

அவரது மனநிலையை நன்குணர்ந்த நான், செந்திலை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோரிடம் சென்றேன். அவரால் வெல்ல முடியும். மற்றுமொரு ஆண்டு அவரை தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். அரை மனதுடன் அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள்.

இத்தகையதொரு இக்கட்டான சூழலில், நான் செந்திலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வையும் எழுதுமாறு கூறினேன். ஏற்றுக் கொண்டு எழுதினார். எதிர்ப்பார்த்தது போல் அத்தேர்வில் அவர் வெற்றியும் பெற்றார். நம்பிக்கைக் கீற்று தெரிந்தது.

2008 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வினை எழுதி 2009 ஆம் ஆண்டு மறுமுறை நேர்முகத்தேர்வு செல்கிறார். தற்போதும் வெற்றி வாய்ப்பு நழுவுகிறது.

2009 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாகத் தன்னைத் தயார் செய்து கொண்டு தேர்வினை எழுதுகிறார். 2010 ஆம் ஆண்டில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். மேலும் மேலும் தன் ஆளுமைப் பண்பை மெருகேற்றிக் கொண்டு நேர்முகத் தேர்வினை எதிர்கொள்கிறார்.

ஆம். நம்பிக்கையிலும், முயற்சியிலும் சற்றும் தளராத செந்தில் குடிமைப் பணித்தேர்வுகளில் இம்முறை தனது வெற்றி முத்திரையைப் பதித்துவிட்டார்.

ஆகவே, குறிக்கோளில் இருந்து விலகிடாத எந்தவொரு முயற்சியும் இலக்கினை அடைந்தே தீரும். நம்பிக்கையோடு படியுங்கள். நாளைய சாதனையாளர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள்.

முதல்நிலைத்தேர்வு நோக்கில் மேலும் சில தகவல்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.