பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எதில் ஆர்வமோ... அதில் ஈடுபடுங்கள்!

லக்ஷ்மி சரவணகுமார் படித்தது, பிளஸ் ஒன். சிறுவயதில் பட்டறையில் வேலை.

News image
Updated On :3 நவம்பர் 2016, 4:50 am

ந. ஜீவா

லக்ஷ்மி சரவணகுமார் படித்தது, பிளஸ் ஒன். சிறுவயதில் பட்டறையில் வேலை. பாரில் வேலை. கிளீனர் வேலை.

முதல் சிறுகதை பிரசுரமான போது வயது 17. அதற்குப் பின் அவர் எழுதியவை "நீலநதி', "யாக்கை', "வசுந்தரா என்னும் நீலவண்ணப் பறவை', "மச்சம்' என சிறுகதைத் தொகுப்புகள். "மோக்லியைத் தொலைத்த சிறுத்தை' கவிதைத் தொகுப்பு.  "உப்புநாய்கள்' நாவல்.
இப்போது சாகித்திய அகாதெமியின் 2016 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவர் எழுதிய "கானகன்' நாவலுக்காக.
அதுமட்டுமல்ல, இவருடைய "மயான காண்டம்' குறும்படம் 2015 இல் கென்யாவில் நடந்த ஸ்லம் ஃபிலிம் ஃபெஸ்டிவலின்போது திரையிடப்பட்டது.
தற்போது திரைப்படம் இயக்கும் முயற்சியில்.
பிளஸ் ஒன் படித்த ஒருவர், வாழ்க்கையில் ஒவ்வொரு படியாக மேலேறி, இந்த அளவுக்கு முன்னேற... என்ன செய்தார்? வாழ்க்கையை எப்படி அணுகினார்? அணுகுகிறார்?
லக்ஷ்மி சரவணகுமாரிடம் பேசினோம்.
* எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். நான் எழுத்தின் மூலமாக மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்.  நாம் இருக்கிற சூழல் மிகவும் சிக்கலானது என்று யோசிப்பது வேறு; அதைப் பற்றி நான்கு பேரிடம் பேசுவது என்பது வேறு.
 ஆனால் கலை என்பது அதற்கும் மேலாக ஒரு காலகட்டத்தின் டாகுமென்ட்டாக இருக்க வேண்டும். கலைஞனின் பணி அதுதான். அதைத்தான் நானும் செய்கிறேன்.
 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். எல்லாரும் தங்களை ஏதோ ஒருவிதத்தில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பார்கள். நான் எழுத்தின் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
* நீங்கள் பிறந்தது, வளர்ந்தது மதுரை அருகே. ஆனால் சென்னையைச் சுற்றி நிகழ்கிறது உங்களுடைய "உப்புநாய்கள்' நாவல். இது எப்படி உங்களால் முடிந்தது?
நான் சென்னைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் கிடைத்த இடத்தில் தங்கினேன். வேலைகளைச் செய்தேன். கிடைத்த உணவைச் சாப்பிட்டேன். எல்லா மனிதர்களிடமும் பழகினேன். பழகிக் கொண்டிருக்கிறேன்.
என்னைப் பொருத்தவரை, எல்லா ஊர்களிலும் அடிப்படையில் மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். நான் மனிதர்களின் முகம் ஒவ்வொரு நிமிடமும் எப்படி மாறிக் கொண்டே இருக்கிறது என்று கவனித்துக் கொண்டே இருப்பேன். எனக்குள் பதிய வைத்துக் கொள்கிறேன். அதனால் சென்னையில் வாழும் மக்களைப் பற்றி நாவல் எழுதுவது சிரமமாக இல்லை.
* எழுதியவை பிரசுரமாவதில் சிரமம் ஏதேனும்...?
இதுவரை எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. நான் எழுதிய சிறுகதைகள் வெளியானதிலிருந்தே பலரும் என்னைக் கவனிக்கத் தொடங்கினார்கள். பாராட்டவும் செய்தார்கள். எனவே பதிப்பகங்கள் என் படைப்புகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டார்கள்.
* சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது பற்றி?
விருதுகள் என் உழைப்புக்குக் கிடைத்த சிறிய அங்கீகாரம். இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன.
* திரைப்படத்துறையில் நுழைந்தது எப்படி?
எனது கதைகளைப் படித்த இயக்குநர் வசந்தபாலன், ""படம் ஒன்று பண்றேன். உதவியாளராக இருக்க விருப்பமா?'' என்று கேட்டார். நான் அவருக்கு உதவியாளரானேன். "அரவான்', "காவியத்தலைவன்' படங்களில் அவருடன் சேர்ந்து வேலை செய்தேன். திரைக்கதை எழுதக் கற்றுக் கொண்டேன்.
* திரைக்கதை - நாவல் வெவ்வேறு வடிவங்கள்? எப்படி இரண்டையும் உங்களால் செய்ய முடிகிறது?
திரைக்கதை வடிவம் வேறு; நாவலின் வடிவம் வேறு. ஆனால் திரைக்கதை எழுதக் கற்றுக் கொண்டால், நாவலை நன்கு எழுத முடியும். திரைக்கதையில் முக்கியமானது எடிட்டிங். திரைக்கதை எழுதத் தெரிந்தவர் நாவல் எழுதும்போது இதை எழுத வேண்டும்; இதை எழுதக் கூடாது என்பது தெரிய வரும். அடிப்படையில் நான் ஒரு கலைஞன். அந்தத்தன்மை திரைக்கதை, நாவல் இரண்டுக்குமே பயன்படுகிறது.
* மிகவும் பின்தங்கிய சூழலிலிருந்து வந்து, பல வேலைகளைச் செய்து, இன்று திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளீர்கள். சாகித்திய அகாதெமியின் விருது கிடைக்கும் அளவுக்குச் சாதித்திருக்கிறீர்கள். முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
எல்லாருக்கும் ஏதோ ஒரு விஷயம் ரொம்பப் பிடிக்கும். இளம் வயதில் எதில் ஆர்வம் இருக்கிறதோ... அதுதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். எனவே இளம் வயது ஆர்வத்தை மாற்றிக் கொள்ளாமல், பிழைப்புக்காக அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், முழு ஈடுபாட்டுடன், ஆர்வத்தோடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டால், நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதற்கு முழு உண்மையாக இருங்கள்; செயல்படுங்கள். வாழ்வில்  வெற்றியடைய குறுக்குவழி எதுவுமில்லை. இதுவே நான் சொல்ல விரும்புவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.