தொழில்முனைவோரான கல்லூரி மாணவர்கள்!
பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிந்துஜா. இருவரும் சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் அப் ஃபேஷன் டெக்னாலஜியில் ஆயத்த ஆடை வடிவமைப்பு கலை பயிலும்


பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிந்துஜா. இருவரும் சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் அப் ஃபேஷன் டெக்னாலஜியில் ஆயத்த ஆடை வடிவமைப்பு கலை பயிலும் இளநிலை பட்ட வகுப்பு மாணவர்கள். இருவரும் தங்களது 7}வது செமஸ்டரின் போதே தொழில்துறையில் நுழைந்து சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும்; அதுவும் தங்களது சொந்த முயற்சியில் அமைய வேண்டும் என விரும்பினர்.
2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தங்களது புதிய வடிவமைப்பில் உருவான ஆடைகளை விற்கும் இணையதளமாக யங் டிரன்ட்ஸ் (www.youngtrendz.in) என்ற தளத்தை ரூ. 10 லட்சம் முதலீட்டில் தொடங்கினர்.
எதிர்பார்த்ததைப்போல, அவர்களின் வளர்ச்சி வேகமாக இருந்தது. இந்நிலையில், 8}வது செமஸ்டருக்கு முன்னதாக, கல்லூரி நிகழ்ச்சிகளில் தங்களது வடிவமைப்பில் உருவான ஆடைகளோடு பங்கேற்ற இருவரும் மற்ற மாணவர்களுக்கு அவற்றை இலவசமாக வழங்கினர்.
இதுகுறித்து சிந்துஜா கூறுகையில், ""முதலில் எங்கள் இணையதளம் மூலமாக நாள்தோறும் 10 ஆர்டர்களைப் பெற்றோம். பிறகு 8}வது செமஸ்டரின்போது நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்களை இணைத்து தனிப்பட்ட வகையிலான டி}சர்ட்டுகளை உருவாக்கினோம். அதைத் தொடர்ந்து, எங்களுக்கு வரவேற்பு மேலும் கூடியது'' என்றார்.
தற்போது இவர்களது இணையதளம் வாயிலாக நாள்தோறும் ஆயிரம் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், தொழில் முதலீடு பெரிய அளவில் இல்லாமல், விற்று முதல் ரூ. 20 கோடி அளவுக்கு அவர்களுடைய நிறுவனம் வளர்ந்துள்ளது.
இந்த நிலையில், சரியான தயாரிப்பு வளர்ச்சிப் பாதையில் செல்ல, இந்தியாவின் ஆயத்த ஆடை உலகம் என அழைக்கப்படும் திருப்பூரில் இருந்து இயங்குவதே பொருத்தமாகவும், சரியானதாகவும் இருக்கும் என இருவரும் கருதினார்கள். ஏற்கெனவே தங்கள் கல்லூரி பாடத்திட்ட அறிக்கைக்காக திருப்பூர் சென்றிருந்ததால், அது அவர்களுக்கு எளிதாக இருந்தது. இருவரும் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அல்ல. எனினும் சமாளித்தனர்.
இதுகுறித்து பிரவீன் கூறுகையில், ""ஆயத்த ஆடை தொழில்துறையில் உற்பத்தி வளர்ச்சிக்கான திறன்மிக்க, சரியான நபர்களை நாங்கள் திருப்பூரில் பெற்றோம். அதுமட்டுமல்லாமல், எங்களது இணையதளத்தை நடத்துவதற்காக திறன்வாய்ந்த தகவல் தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்களை கோயம்புத்தூரில் இருந்து பெற்றோம். எங்களது நிறுவனம் 18}28 வயதுடைய இளைஞர்களை மனதில் வைத்து நகைச்சுவை மிக்க வாசகங்களுடன், புதுமையான ஆடைகளை வடிவமைக்கிறது'' என்கிறார்.
தங்களது உத்வேகத்துக்காக சமூக வலைத்தளங்களில் நாளுக்குநாள் மாறிவரும் அல்லது உருவாகி வரும் புதுமையான போக்கை கண்காணித்து வருவதாகக் கூறும் சிந்துஜா, போட்டி கடுமையாக உள்ளதாகவும், தங்களது தயாரிப்புகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 1.5 லட்சம் தயாரிப்புகளுடன் போட்டியிட்டு முதலிடத்தை நோக்கிச் செல்வதாகவும் கூறுகிறார்.
தெலங்கானா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சேமிப்பு கிடங்குகளை இந்நிறுவனம் அமைத்துள்ளது. விரைவில் மேற்கு வங்கத்திலும் அமைக்க உள்ளது. இந்த சேமிப்புக் கிடங்குகள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உடைகளை உடனுக்குடன் வழங்க உதவுகிறது.
சீனா மற்றும் கொரிய சந்தையில் மிகவும் புகழ்பெற்ற ஜோடி ஆடைகளை (Couple Clothing) முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள்.
""எங்களுடை தரம் வேறு எந்த நிறுவன ஆடைகளுடனும் ஒப்பிடமுடியாத வகையிலும், அதேசமயம், கல்லூரி மாணவர்களை நினைவில் வைத்தும் ரூ. 250-ரூ. 600 வரையில் விற்கப்படுகின்றன. 3500 வகையான தயாரிப்புகள் அனைத்து மின் வணிக சந்தை தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சிறந்த Brand ஆக Flipkart விருது கிடைத்துள்ளது. வழக்கமான வேலைக்குச் செல்வதைக் காட்டிலும், தொழில் தொடங்கி நடத்துவதில், அதிக பொறுப்பு தேவை'' என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...