வெல்லுங்கள்... இளநிலை பொறியாளர் தேர்வை !
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலை பொறியாளர் தேர்வை எதிர்கொண்டு எளிதில் மத்திய அரசுப்பணியில் சேரலாம்


மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலை பொறியாளர் தேர்வை எதிர்கொண்டு எளிதில் மத்திய அரசுப்பணியில் சேரலாம் என்கிறார் ஓய்வு பெற்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநரான (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள்.
அவர் நம்மிடம் கூறியதாவது:
பொறியியல் இளைஞர்களுக்கென்றே இருக்கக் கூடிய மத்திய அரசு தேர்வுகளில் ஒன்று, மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் இளநிலைப் பொறியாளர் தேர்வாகும். இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப் பொறியியல் (Civil), இயந்திரவியல் (Mechanical) மற்றும் மின்னியல் (Electrical) துறைகளைச் சார்ந்த பட்டயம் அல்லது பட்டம் பெற்ற மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இது மிக எளிதான தேர்வாகும்.
நிகழாண்டில் SSC இளநிலைப் பொறியாளர் தேர்வு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகியுள்ளது. நவம்பர் 17 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் நடக்கும் கொள்குறிவகைத் தேர்வு கணினி மூலமாக நடக்கும். இத்தேர்வு ஜனவரி 5 முதல் 8 வரை நடக்க இருக்கிறது.
இத்தேர்வு 200 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இதில் பொது அறிவு 50 மதிப்பெண்கள் (50 கேள்விகள்), புத்திக்கூர்மை 50 மதிப்பெண்கள் (50 கேள்விகள்), அந்தந்த பொறியியல் பிரிவைச் சார்ந்த பகுதிகள் 100 மதிப்பெண்கள் (100 கேள்விகள்) இருக்கும்.
இரண்டாம் நிலைத்தேர்வு கட்டுரை வடிவு (Essay type or conventional type) கொண்டது. இதற்கு மதிப்பெண்கள் 300 ஆகும். முதல் நிலைத்தேர்வு முடிந்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்பு, இத்தேர்வு நடைபெறும். இவ்விரண்டு தேர்வுகளின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் நேர்முகத் தேர்வு கிடையாது.

முதல் நிலைத் தேர்வுக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. முதல் நிலைத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் 10,000 முதல் 15,000 வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்கள் இரண்டாம் நிலைத்தேர்வு (conventional type) எழுதலாம். இத்தேர்வு 21 மத்திய அரசின் துறைகளில் அல்லது துறைகள் சார்ந்த நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் வேலைகளுக்காக நடத்தப்படுகிறது.
உதாரணமாக, மத்திய அரசு பொதுப்பணித்துறை (CPWD), இராணுவப் பொறியியல் சேவை (MES), மத்திய நில நீர் ஆணையம் (Central Ground Water Board), எல்லைச் சாலைகள் விரிவாக்க நிறுவனம் (Border Roads Development Board), அஞ்சல் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை போன்றவற்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு எழுத வயது வரம்பு பொதுவாக பொதுப்பிரிவினருக்கு 30 வயது ஆகும். ஆனால் சில துறைகளைச் சார்ந்த வேலைகளுக்கு மட்டும் வயது வரம்பு 27 அல்லது 32 வரை உள்ளது. பின் தங்கிய வகுப்பினருக்கு மூன்று ஆண்டு வயது வரம்பில் தளர்வும், அட்டவணைப் பிரிவினருக்கும், பழங்குடி மக்களுக்கும் ஐந்து ஆண்டு வயது வரம்புத் தளர்வும் உண்டு. தேர்வுக் கட்டணம் ரூ.100 மட்டுமே.
பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிரிவினர்களுக்கும் தேர்வுக் கட்டணம் கிடையாது. சென்னையிலும் புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் உண்டு. பொது அறிவுக் கேள்விகள் எல்லா பாடங்களிலிருந்தும் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தேர்வு எழுதச் செல்பவர்கள், 9,10,11,12 ஆம் வகுப்புப் பாடங்களை நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டும். 11, 12 ஆம் வகுப்புகளின் அறிவியல் பாடங்களை மேலோட்டமாகப் பார்த்தால் போதுமானது.
இவற்றைத் தவிர, நடப்பு நிகழ்வுகளைப் பற்றியும் கேள்விகள் வரும். புத்திக்கூர்மை (General Intelligence or Reasoning) தேர்வு 50 மதிப்பெண்களைக் கொண்டது. படத்துடன் கூடிய மற்றும் படமில்லா பகுதி (Verbal and Nonverbal) களிலிருந்து கேள்விகள் வரும். பொறியியல் சார்ந்த பகுதிகளைப் பொறுத்தவரையில் முதல் நிலைத்தேர்வில் நூறு மதிப்பெண்களைக் கொண்டது.
இப்பகுதியில் கொள்குறிவகையில் நூறு கேள்விகள் இருக்கும். இயந்திரவியலைப் பொறுத்தவரையில் பட்டய அளவுத்தரத்தில் Arihant, Uphaar, Ramesh, சுரா, சக்தி போன்ற பதிப்பகங்கள் அநேக கொள்குறி வகை நூல்களை வெளியிட்டுள்ளன. இவை தவிர தில்லி, மீரட், ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து கொள்குறி வகைநூல்கள் நிறைந்த அளவில் வந்துள்ளன.
மாணவர்கள் தேர்வு எழுதும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அவர்கள் எந்த நிலையில் உள்ள தேர்வு எழுதுகிறார்களோ, அந்த நிலையில் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இத்தேர்வு பட்டயநிலையில் (டிப்ளமோ) உள்ளதால் பட்டய அளவுப் பாடங்களை நன்கு படித்துக் கொள்ளவேண்டும். தேர்வுக்குண்டான பாடத்திட்டத்தை ஒட்டியே மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தாற் போல பொது அறிவுத் தாளுக்குத் தயார் செய்யும் பொழுது போட்டித் தேர்வுகளுக்குண்டான மாத இதழ்களை மட்டும் படித்தால் போதாது. தேர்வர்கள் கணினி மூலமாக முந்தைய ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அக்கேள்விகளின் அடிப்படையில் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கட்டுமானப் பொறியியலில்தான் மிகக்குறைந்த மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்பிரிவுகளில் இருக்கும் பட்டய மாணவர்களுக்கு மட்டுமாவது இளநிலைப் பொறியாளர் தேர்வுக்கு தனிப் பயிற்சி அளித்தால் அவர்கள் தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
இது தொடர்பாக பயிற்சி தேவை என விரும்பும் கல்லூரிகள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். கட்டுமான பொறியியல், இயந்திரவியல், மின்னியல் ஆகிய மூன்று துறையிலிருந்தும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். நான் பொதுஅறிவு 1000 கேள்விகள் அடங்கிய "General Knowledge Digest' (ஆங்கிலம்) என்ற குறுநூலை எழுதியுள்ளேன். இதைத்தவிர இயந்திரவியலில் 1000 கேள்விகளும், கட்டுமானப் பொறியியலில் 1000 கேள்விகளையும் தயாரித்துள்ளேன். இவற்றை இலவசமாகப் பெற விரும்பும் இளைஞர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை எனது sambam17358@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவற்றை இலவசமாக அனுப்பி வைப்பேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...