ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உருவாக்குகிறார்கள்... இளம் விஞ்ஞானிகளை!

கன்னியாகுமரி மாவட்டம், முள்ளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். வேலையன். இவரால் கடந்த 2003-இல் தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை (Kumari Science Forum).

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 10:23 am

இரா. மகாதேவன்

கன்னியாகுமரி மாவட்டம், முள்ளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். வேலையன். இவரால் கடந்த 2003-இல் தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை (Kumari Science Forum).

குமரி மாவட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள் இயற்கை மற்றும் அறிவியல் கல்வியில் விழிப்புணர்வு பெறும் பொருட்டு அறிவியல் கண்காட்சி, விஞ்ஞானிகள்-மாணவர்கள் கலந்துரையாடல், அறிவியல் முகாம், அறிவியல் களப்பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது குமரி அறிவியல் பேரவை.
ஆண்டுதோறும் இந்த அமைப்பு நடத்திவரும் "இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சி' மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இது குறித்து எம். வேலையன் நம்மிடையே பகிர்ந்துகொண்டதிலிருந்து... 

""இயற்கை சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை பொத்தாம் பொதுவாக பேசுவதால் பெரிய பயன் இருக்காது என்பதால், அதை ஆர்வமும், துடிப்பும் மிக்க மாணவர்கள் மூலம் சமுதாயத்துக்கு கொண்டு சேர்க்க நினைத்து தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை. இதன் இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்காக ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையில் ஆய்வுப் பொருள் திட்டமிடப்படுகிறது. பிறகு அது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் மாதம் தகவல் அனுப்பப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெறும் கருத்தரங்குக்கு பள்ளிகளில் இருந்து 8 ஆம் வகுப்பில் பயிலும் அறிவியல் நாட்டமுள்ள 5 மாணவ, மாணவிகளை அனுப்பிவைக்குமாறு கேட்கிறோம். இதன்மூலம் சுமார் 120 பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். 

இவர்களில் இருந்து இளம் விஞ்ஞானிகளாக 55 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்வுமுறை சற்று கடினமானது. ஜூலை முதல் அக்டோபர் வரை 9 தேர்வு முறைகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும். பேசும் திறன், வாசிப்புத் திறன், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை நடுவது, மரக்கன்று நடுவது, சமூகப் பிரச்னை குறித்து வரைபடம் உருவாக்கி அதை விளக்குவது, தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, விவாதங்களில் பங்கேற்பது, காந்தியம் குறித்து பேசுவது, திட்ட அறிக்கை தயாரித்து விஞ்ஞானிகள் மத்தியில் வெளிப்படுத்துவது, இந்திய மருத்துவம்-உணவுப் பழக்கம் குறித்து கருத்தரங்கில் பேசுவது, அறிவியல் செயல்விளக்கம், நூல் திறனாய்வு என இந்தத் தேர்வுமுறை அமைந்திருக்கும்.

இதில் தேர்வுபெறும் இளம் விஞ்ஞானிகள் 55 பேரும், 5 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் அணிக்கும் வண்ணச் சீருடை, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த 5 அணிகளுக்கும் 5 ஆய்வுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் அணிக்கும் அனுபவம் மிக்க 10 ஆலோசகர்கள் இருப்பார்கள். இவர்கள் எந்த நேரத்திலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உதவி செய்வார்கள். இவர்களோடு ஓர் அணித் தலைவர் இருந்து அணியின் செயல்பாடுகள் குறித்து அமைப்பாளருக்கு தெரிவித்து வருவார்.

இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்கான நிகழாண்டு தலைப்பு, "பூமியை காப்பாற்றுங்கள்' (Rescue The Planet Earth) என்பதாகும். இதில் "உயிரி மீட்பு' (Bio Rescue) என்ற துணை தலைப்பில், நுண்ணுயிரிகளை மீட்பது, கடற்கரை வளங்கள், உயிரி ஆதாரங்களில் மனிதத் தலையீடு உள்ளிட்டவை குறித்தும், "உணவு மற்றும் விவசாய மீட்பு' (Food and Farming Rescue) என்ற துணைத் தலைப்பில், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள், உணவுப் பழக்கத்தில் நவதானியங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது, கலப்பின -மரபணு மாற்ற உணவுகளால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்தும், "நீர் மீட்பு' (Hydro Rescue) என்ற துணைத் தலைப்பில், தண்ணீரின் முக்கியத்துவம், பழங்கால நீர் மேலாண்மை-நீர் பகிர்வு, நிலையான நீர்வரத்துக்கு காடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மேலாண்மையில் முகத்துவாரங்களின் முக்கியத்துவம், நீர் மாசுபடுதல் குறித்தும், "வளிமண்டல மீட்பு' (Atmosphere Rescue) என்ற துணைத் தலைப்பில், வளிமண்டல அடுக்குகள்-அதன் முக்கியத்துவம், வானிலை மேலாண்மை, உயிரி வேதியியல் சுழற்சி, பசுமை இல்ல விளைவு, பூஜ்ஜிய உமிழ்வு-பூஜ்ஜிய மாசு, வளிமண்டல கண்காணிப்பில் துணைக் கோள் தொழில்நுட்பம் குறித்தும், "காடு மீட்பு' (Wild Rescue) என்ற துணை தலைப்பில் வன தாவரங்கள், வன விலங்குகள், வேட்டையாடுதல் - வனத்தில் அதன் தாக்கம், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு, வனவிலங்கு மறுவாழ்வு, விலங்குகள் - மனித மோதல், மூலிகைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளன.

இதற்காக பல்வேறு கல்லூரிகள், கல்வி நிலையங்களுக்குச் செல்வது, பெரியகுளம், புத்தேரிகுளம், தேரிகுளம் உள்ளிட்ட 42 கடலோர கிராமங்களில் கள ஆய்வு, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் உட்பட பல்துறை விற்பன்னர்களோடு கலந்துரையாடல், கோதையாறு பயணம், மார்த்தாண்டம் விப்ரோ டெக்னாலஜிஸ் வளாகத்தில் பெங்களூர் செயற்கைக் கோள் மைய விஞ்ஞானிகளுடன் அறிவியல் நிகழ்வு, மேற்கு தாமிரவருணி நீர் உப்புநீராக மாறியதற்கான காரணம் கண்டறியும் பயணம் என நிறைய களப் பயணங்களைச் செய்துள்ளனர். இவர்கள் ஆய்வு செய்த பொருள்களை நூல் வடிவில் உருவாக்கி வரும் மே மாதம் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் விருது மே மாத இறுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. குமரி அறிவியல் பேரவை மூலம் இதுவரை 800-க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வருங்காலத்தில் பூமியை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்பதோடு, அவர்களைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கானோருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்'' என்றார் வேலையன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.