கண்டதும் கேட்டதும் - 45

என்னுடைய பெரியப்பா உகும்சிங், பீம்சிங்கின் அண்ணன். எனது பெரியம்மா பெயர் ஜெயாம்மா.
கண்டதும் கேட்டதும் - 45

என்னுடைய பெரியப்பா உகும்சிங், பீம்சிங்கின் அண்ணன். எனது பெரியம்மா பெயர் ஜெயாம்மா. இவர்களுக்கு கெஜா சிங், அம்முலு, வசந்த் சிங், மோகன் சிங், ஹேமலதா, லோக் சிங், பிரேம் சிங் என்று ஏழு குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் கெஜா சிங்கிற்கு இதயத்தில் ஓட்டை இருந்ததால், அந்த காலத்தில் சரியாக வைத்தியம் செய்ய முடியாத நிலையில் 20 வயதிலேயே இறந்துவிட்டார். அம்முலுவும் 6 வயதிலேயே மரணம் அடைந்தார்.
இதில் லோக் சிங் கேமராமேனாக தெலுங்கு பட கதாநாயகனான சிரஞ்சீவியுடன் 40 படங்களுக்கு பணிபுரிந்தார். அவர் கேமராமேனாக வேலை செய்யும்போது நடன காட்சி மற்றும் சண்டை சாகச காட்சிகளின்போதும் ஆபத்தான சூழ்நிலை இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது தான் விரும்பிய கோணத்தில் படம் எடுத்து முடிப்பார். ஒவ்வொரு பிரேமும் அவருக்கு திருப்தி ஏற்பட்ட பின்னரே முடிவு ஆகும். 
அதற்கு உதாரணமாக, சிரஞ்சீவி காரில் பயணிப்பதைப் போன்ற காட்சியைப் படமாக்கியபோது கார் ஓட்டுநரை விலக்கிவிட்டு தானே ஒரு கையால் காரை ஓட்டியபடி, மறு கையால் கேமராவில் படம் பிடித்ததை சிரஞ்சீவி, லோக் சிங்கின் மனைவி கீதாவை போனில் தொடர்பு கொண்டு, "" இதுமாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்கிறார் உன் கணவன்'' என்று கூறி இருக்கிறார். அவ்வாறு செய்ததால் வந்த விளைவே லோக் சிங்கின் அகால மரணம்.
அவருடைய மனைவி கீதா தனது கணவரைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்:
""இந்த சினி பீல்டுல இருக்கறவங்களுக்கு நான் ஒண்ணு மட்டும் சொல்லிக்க விரும்புறேன். சினி பீல்டுல வேல செய்யறவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அவங்க உயிர் அவங்களோட குடும்பத்துக்கு முக்கியம். அது முழுசா உணர்ந்தவ நான். ஒரு வீட்டுக்கு தலைவன் இல்லன்னா அந்த வீடு என்ன ஆவும், எவ்வளவு கஷ்டப்படும்ன்னு நான் நேரடியா உணர்ந்து இருக்குறேன். சினி பீல்டுல சூட்டிங் சமயத்துல பல அபாயகரமான வேலையெல்லாம் இருக்கும். அப்ப அங்க வேலை செய்யுறவங்களுக்கு, யாராக இருந்தாலும் அவுங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும். என்னென்ன கருவிகள் வைக்கணுமோ, என்னென்ன பாதுகாப்புச் சாதனங்கள் இருக்கணுமோ அதெல்லாம் வைக்கணும். ஏன்னா அவங்களோட குடும்பத்துக்கு அவங்க ரொம்ப ரொம்ப முக்கியம். என் கணவர் மேல தீப்பிடிச்சப்போ, தீயை அணைக்கிறதுக்கு அவர் மேல ஊத்துறதுக்கு அங்க தண்ணி கூட இல்லையாம். அவரே கீழே விழுந்து புரண்டு இருக்காரு. அது மலை பிரதேசம். அங்க புல்லும் இல்லாம கல்லிலும் மண்ணிலும புரண்டு இருக்காரு... சினி பீல்டுல ஒரு கேமரா மேன் போயிட்டா வேற ஒரு கேமராமேன் கெடைப்பாரு. ஒரு டைரக்டர் போயிட்டா வேற ஒரு டைரக்டர் வருவாரு. ஆனா அந்த குடும்பத்துக்கு யாரு கெடைப்பா? அந்த குடும்பம் அப்படியே நிர்கதியா ஆயிடாது? அதனால நீங்க அவங்களின் உடல் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கணும்ங்றதுதான் என்னோட தாழ்மையான வேண்டுகோள்''
தெலுங்கு பட உலகில் பல முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு கேமரா மேனாகப் பணியாற்றினார். சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்த "பார்னிங்' என்ற பட சூட்டிங் மொத்த வேலையும் முடிய கடைசி காட்சி எடுத்தபோது தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்த லோக் சிங் மனைவி கீதா கண்ணீர் மல்க இத்திரைப்படத் துறைக்கு மேற்கூறிய வாசகங்களை வேண்டுகோளாக கூறி மேலும் தொடர்ந்தார்:
""நான் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில். நான் சென்னைக்கு விடுமுறைக்கு வந்தபோது, என்னை லோக் சிங்சிங்குக்கு பொண்ணு கேட்க நெனைச்சாங்க. ஆனா லோக்சிங் தன்னோட தங்கச்சிக்கு புடிச்சிருந்தா கட்டிக்கறேன்னு அவரோட தங்கச்சி சுசரிதாவை அனுப்பி வைச்சாரு. அவங்க என்னை வந்து பார்க்கும்போது லோக் சிங் வீட்டுக்கு வெளியில நின்னுட்டு தன் தங்கச்சி என்ன சொல்லப் போவுதுன்னு எதிர்பார்ப்பா இருக்கும்போது, சுசி லோக் சிங்கைப் பார்த்து, தன் கைவிரல்களை மடக்கி, கட்டை விரலை நீட்டி தம்ஸ் அப் போல சைகை காட்டி, "பொண்ணு எனக்குப் பிடிச்சிருக்கு'ன்னு சைகை காட்ட, அதற்கப்புறம்தான் லோக் சிங் என்னை வந்து பார்த்தார். என் கணவர் மாதிரி வேற யாருக்குமே இந்த உலகத்துலயே கெடைச்சிருக்க மாட்டாங்கன்னுதான் நான் சொல்லுவேன். எங்களுக்கு ரெண்டு கொழைந்தங்கதான். ஆனா அவர் என்னையும் சேர்த்து தனக்கு மூணு கொழந்தைங்கன்னு சொல்வாரு.
எங்களுக்கு முதலில் வீணா பவானி பிறந்தாள். அதற்கு 10 வருடங்களுக்குப் பிறகு ஜேயேஸ் பாபு பிறந்தான். அதனால ஜேயேசுக்கு அக்கான்னா ரொம்ப பயம். சின்ன வயசுல என் பேச்சைக் கூட கேக்க மாட்டான். அக்கா சொன்னா உடனே கேட்டுடுவான். அது இப்பவும் தொடருது.
அவர் என்னை கொழந்தைன்னு சொன்னது வார்த்தைகள் மட்டும் இல்லை. அது உள் மனசுலேயிருந்து ஆசை ஆசையாய் வந்த சொற்கள். அப்படிப்பட்ட அவர் எப்படிதான் மனசு வந்து எங்களை விட்டுட்டுப் போனோரோ (கண்ணீர் விடுகிறார்) சுசரிதா தம்ஸ் அப் காட்ன உடனே பீம் மாமா, சோனா அத்தை எல்லாம் வந்து பார்த்தாங்க. மேரேஜ் பிக்ஸ் பண்ணி திருப்பதியில கல்யாணம் ஆச்சு. (பீம் மாமா என்னுடைய தந்தை பீம்சிங். சோனா அத்தை என்னுடைய அம்மா சோனாம்மாள்) என்னோட கணவர் சென்னையில் உள்ள கேசரி பள்ளிக்கூடத்துல படிச்சாரு. அவர் கூட அல்லு அர்விந்தும் படிச்சாங்க. பள்ளிகூடத்துலேயே இருவரும் நெருக்கமான நண்பர்களா இருந்தாங்க. அப்புறம் இவரு காலேஜ் முடிச்சதும் பீம் மாமா சொல்லி மொதல்ல கதாநாயகியா நடித்து பின்னர் குணச்சித்திர நடிகையா மாறின ஜி.வரலட்சுமியோட மகன் ஜி.பிரகாஷ் கூட உதவி கேமரா மேனாகச் சேர்ந்தாரு. எனக்கு கல்யாணம் ஆகும்போதெல்லாம் உதவி கேமராமேனாகத்தான் இருந்தாரு. என்னோட பொண்ணு வீணா பவானிக்கு மூணு வயசு ஆகும்போது அல்லு அர்விந்த் முதல் படத்தைக் கொடுத்தாரு. படத்தோட பேரு "சுபலேகா'. அதுலதான் சிரஞ்சீவியோட ஒர்க் பண்ணாரு. முதல்படமே ரொம்ப ஹிட் ஆயிடுச்சி. அந்தப் படமே இவருக்கு கேமராவுல நல்ல பேரு கொடுத்தது. அதோட சிரஞ்சீவிக்கும் நல்ல பேரு கொடுத்த படமா அந்த படம் அமைஞ்சது. அதுக்கப்புறம் வரிசையா படம் பண்ண ஆரம்பிச்சாரு. மொதல்ல இவரு கே.எஸ்.பிரசாத் கிட்டேயும் உதவி கேமரா மேனாக இருந்தாரு. கேமராமேன் இஷான் ஆரியா, டைரக்டர் பாப்பு கிட்டயும் நெறைய படம் பண்ணி இருக்காரு. கே.எஸ். விஸ்வநாத், விஜயபாபு நாயுடு, ஸ்ரீஸ்ரீ கிரியேட்டிவ் கமர்சியல்ன்னு நெறைய பேர்கிட்ட வேல செஞ்சாரு. இதுல கீதா ஆர்ட்ஸ்ல நிரந்தர ஒளிப்பதிவாளரா இருந்தாரு. கீதா ஆர்ட்ஸ் பட கம்பெனியோட தயாரிப்பாளர் அல்லு அர்விந்தும் எனது கணவரும் நெருக்கமான நண்பர்கள்ன்னு சொல்லி இருக்குறேன். அல்லு அர்விந்த் படம்ன்னா முழுக்க முழுக்க இவர் படம் மாதிரிதான். எல்லா வேலையும் பார்ப்பாரு. புரடக்ஷன் மேனேஜர் முதல் கொண்டு.... இவருக்கிட்ட ஒரு கமாண்டிங் இருக்கும். எல்லாரும் இவரு பேச்சைக் கேப்பாங்க. 
பல நேரத்துல கொழந்தைங்க அப்பா எங்கேன்னு கேப்பாங்க. பல நாள் அவரைக் குழந்தைங்க பார்க்கவே முடியாது. ஏன்னா லேட்டு நைட்டு ஒரு மணிக்குத்தான் வருவாரு. திரும்ப 4 மணிக்கு புறப்பட்டு போயிடுவாரு. சில நேரத்துல அப்படியே அசதியா வந்து காலணியைக் கூட கழட்டாம அப்படியே அடிச்சி போட்ட மாதிரி படுத்துடுவாரு. 
ஆனா சரியா 4 மணிக்கெல்லாம் எழுந்துடுவாரு. அவரு எப்படிதான் அப்படி எழுந்துக்குவார்ன்னு இன்னும் கூட நான் நெனைச்சிப் பார்ப்பேன். அந்த காலையிலேயே குளிச்சிட்டுத்தான் கிளம்புவாரு. ஏன்னா சிரஞ்சீவி சாருக்கு லோக்சிங்தான் கேமரா பண்ணனும். அசிஸ்டென்ட் பண்ணா ஒத்துக்கவே மாட்டாரு. நான் கூட சொல்லுவேன். ஜுரம் அடிக்குதே முகத்தைக் கழுவிட்டுப் போங்கன்னா கேக்கவே மாட்டாரு. தொழில் மேல அவ்வளவு பக்தி''
( தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com