வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முதுகுவ: ஓர் எச்சரிக்கை கருவி!

இப்போது முதுகு வலி இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள்.

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 1:57 pm

ந. ஜீவா

இப்போது முதுகு வலி இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். குனிந்து, நிமிர்ந்து செய்த கடுமையான உடல் உழைப்பு வேலைகள் எல்லாம் குறைந்து, ஒருநாளில் 10 மணி நேரம், 12 மணி நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துவிட்டது. அதனால் முதுகுவலி அப்படி முதுகுவலியால் அவதிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜெய் விக்ரம் சிங் வர்மா. ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

படிப்பு முடிந்ததும் கிடைத்த வேலையில் "மயங்கி' நேரம் காலம் தெரியாமல் உழைத்தவர். தண்ணீர் குடிக்காமல், சாப்பிடாமல் பல மணி நேரங்கள் "வேலை போதை'யில் மயங்கிக் கிடந்தவர். அவருக்கு கடுமையான முதுகுவலி வந்துவிட்டது. மேல் முதுகில் வீக்கமும் கூட. நான்கு மாதங்கள் வேலைக்குப் போக முடியவில்லை. மருத்துவ சிகிச்சை, யோகாசனப் பயிற்சி, பிசியோ தெரபி ஆகியவற்றின் மூலம் நலமாகி வேலைக்குத் திரும்பியிருக்கிறார். 

இது தனக்கு மட்டும் நேர்ந்த ஒன்றல்ல. ஐடி நிறுவனங்களில் கணினி முன் தம்மையே மறந்து வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கும் இதுபோல் நேர்ந்துவிடுகிறது. கணினியின் மவுசைக் கூட அவர்களால் அசைக்க முடிவதில்லை. அவர்களால் டைப் அடிக்க முடிவதில்லை. 

இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முதுகு வலி வராமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று வர்மாவுக்குத் தோன்றிக் கொண்டே இருந்திருக்கிறது. விளைவு? SPIQI என்ற மிகச் சிறிய 4 செ.மீ. நீளம், 2 செ.மீ. அகலம் கொண்ட ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். 

இம்மாதம் கேரளாவில் நடந்த - ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம்தொழில் முனைவோர்களுக்கான, ஸ்டார்ட் அப் தொடங்கியவர்களுக்கான Huddle Kerala நிகழ்ச்சியில் வர்மா பங்கு பெற்றார். மருத்துவத் துறை சார்ந்த கருவியை அவர் கண்டுபிடித்ததற்காக ரூ.5 லட்சம் பரிசும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. 

அவர் கண்டுபிடித்த கருவி அப்படி என்னதான் செய்கிறது?
ரப்பராலும் பிளாஸ்டிக்காலும் செய்யப்பட்ட இந்தச் சிறிய கருவியை கழுத்துக்குக் கீழே தோலுக்கு நடுவே ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கருவியில் ஏகப்பட்ட சென்சார்கள் இருக்கின்றன. எனவே இதை அணிந்து கொண்டவர் நிமிர்ந்தாலோ, குனிந்தாலோ உடனே இந்தக் கருவி அதை கணக்கிடத் தொடங்கிவிடும். அதாவது ஒரு மணி நேரத்தில் இவர் இத்தனை முறை குனிந்தார், அல்லது குனியவில்லை. முதுகு எலும்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இவருடைய அசைவு இருந்தது என்பன போன்ற தகவல்களை இக்கருவி கண்டறிந்துவிடும். ஒருவர் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தால், இந்தக் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போனில் "நீங்கள் உட்கார்ந்திருக்கும் நிலையை சற்று மாற்றிக் கொள்ளுங்கள்' என்று எச்சரிக்கை ஒலிக்க 
ஆரம்பித்துவிடும். 

""அதையும் பொருட்படுத்தாமல் ஒருவர் உட்கார்ந்திருந்தால், அந்தத் தகவல் அவருடைய மனைவியின் அல்லது தோழியின் அல்லது அப்பா, அம்மாவின் மொபைல் போனுக்குச் சென்றுவிடும். அதற்குப் பிறகு அவர்களின் கோப பேச்சைக் கேட்க துணிவில்லாதவர்கள் தங்களுடைய உட்காரும் நிலையைச் சற்று மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்'' என்கிறார் வர்மா. 

""இந்தக் கருவியை அணிந்து கொண்ட ஒருவர், ஒரு சில நாட்களிலேயே சரியான நிலையில் அமர்ந்து வேலை செய்யக் கற்றுக் கொள்வார். அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறிது வேலையை நிறுத்திவிட்டு எழுந்து, சிறிது தூரம் நடந்துவிட்டு வருவார். பிறகு அது ஒரு பழக்கமாகிவிடும்'' என்கிறார் அவர். 

வர்மாவின் இந்த ஸ்டார்ட் அப் குழுவில் இப்போது இரண்டு என்ஜினியர்கள், நான்கு பிசியோ தெரபிஸ்ட்கள், ஒரு வணிக நிபுணர் ஆகியோர் இருக்கிறார்கள். 
இந்தக் கருவி முதுகின் அசைவு, இயக்கம் பற்றி கண்டறிவதோடு, உடலின் அசைவால் ஒரு நாளில் எவ்வளவு கலோரி செலவாகியிருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துச் சொல்லிவிடுமாம். உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் சிலர், நொறுக்குத் தீனிகளை அவ்வப்போது உள்ளே தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அறிவை இந்தக் கருவி தந்துவிடும். இந்தக் கருவியை ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் இரண்டரை நாட்களுக்கு வேலை செய்யும்.

""அடுத்த இரண்டு மாதங்களில் 100 கருவிகளை உற்பத்தி செய்து முதுகுவலி உள்ளவர்களிடம் கொடுத்து அணியச் செய்து, அவர்களின் கருத்தைக் கேட்டு மேலும் இந்த கருவியை மேம்படுத்துவதே எனது அடுத்த இலக்கு'' என்கிறார் வர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.