தன்னிலை உயர்த்து! 24
ஒரு குடிலில் துறவியும், சீடர்களும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் மாலையில் வீசிய சூறாவளியால் அவர்கள் தங்கியிருந்த குடிலின் மேற்கூரை சேதமடைந்தது. குளிர் காற்றில் அவர்கள் நடுங்கினர். சீடர்களுக்கு கடவுள் மீது கோபம் வந்தது. ஆனால், துறவி எப்போதும்போல் அமைதியாக இருந்தார். அதே நேரத்தில் பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்தது. சீடர்கள் ஓடிச் சென்று ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கிக் கொண்டனர். மேலும், அவர்கள் கடவுளை சபிக்கத் தொடங்கினர். துறவி ஒரு குழந்தைபோல மழையில் நனைந்து மகிழ்ந்தார்.
சீடர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டே, ""சுவாமி! நாம் தினமும் கடவுளை தியானிக்கிறோம்; கடவுளைப் போற்றுகிறோம்; ஆனால் கடவுள் நமக்கு ஏன் சூறாவளியையும், மழையையும் கொடுத்து நம்மை துன்புறுத்துகிறார்?'' என்றனர். அதற்கு துறவி, ""சீடர்களே! கடவுள் நமக்கு நன்மைதான் செய்திருக்கிறார். இயற்கையோடு வாழ உலகம் ஏங்கிக் கிடக்கின்றபோது, நமது கூரையை விலக்கி, நமக்கு அழகான நிலவொளியைத் தந்தார். குளிர்ச்சியான நீரில் நீராட மழையைத் தந்திருக்கிறார். சூறாவளியையும் மழையையும் நம்மால் வரவழைக்க முடியுமா? இல்லை, அதன் வரவை மாற்ற முடியுமா? முடியாது, நம்மால் மாற்ற முடியாததை அப்படியே மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்றார்.
காற்றிலும், மழையிலும் துன்பமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. அது நம் மனதில் தான் இருக்கிறது. விரும்பியது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு, கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சி. மகிழ்ச்சி இல்லாத மனிதனுக்கு வாழ்க்கை சுமையாகிறது. மகிழ்ச்சியான மனிதனுக்கு வாழ்க்கை சுகமாகிறது.
"மகிழ்ச்சி என்பது ஓர் உன்னதமான உணர்வு. அவ்வுணர்வு ஒரு மனிதனின் வாழ்க்கைக் கடலை சுலபமாக கடக்க வைக்கும் கப்பல். மகிழ்ச்சி என்ற உணர்வு மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்'' என்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. வாழ்க்கையின் நிலை மாறலாம். உணர்வுகளும் மாறிக் கொண்டே போகலாம். இருப்பினும், இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலையே ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
"மலர்ந்த முகம், சாதாரண உணவையே விருந்தாக்கும்' என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப உண்மையான மகிழ்ச்சி அதனைப் பகிர்ந்து கொண்டிருக்குமிடமெங்கும் மணம் வீசும். மகிழ்ச்சியான மனிதன் ஓர் அழகாய் மலர்ந்த பூ. மலர்ந்த பூவானது தன்னையும் அழகாய்க் காட்டும்; பார்ப்போரையும் பரவசப்படுத்தும். மகிழ்ச்சி, மனதின் மலர்ச்சி.
சுயநலத்தோடு வாழ்பவர்கள் துயரமாக இருக்கிறார்கள். சுயநலமில்லாமல் வாழ்பவர்களே மகிழ்ச்சியுடையார். ஒரு மனிதர் சொர்க்கத்தையும், நரகத்தையும் பார்க்க ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது. முதலில் அவரை நரகத்தின் உணவறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அனைத்து விதமான பண்டங்களும் பரிமாறப்பட்டிருந்தன. இங்கே உணவு உண்ணலாம், ஆனால் கைகளை மட்டும் மடக்க முடியாது என்ற கட்டளையின்படி அவர்கள் கைகள் மடக்க முடியாதபடி கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த உணவைக் கையிலே மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு தங்கள் பசியை ஆற்ற முடியாமல், "ஐயோ! பசி! என்னைக் கொல்கிறதே!'' என்று ஒவ்வொரு மனிதனும் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் அவரை சொர்க்கத்தின் உணவறைக்கு அழைத்துச் சென்றார்கள். நரகத்தைப் போன்றே இங்கேயும் மக்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால், தங்கள் கைகளை மடக்க முடியவில்லையே என்று அங்கிருந்தவர்கள் கவலைப்படவில்லை. மாறாக, தங்களுக்கு முன்பு இருந்த உணவை எடுத்து எதிரே இருந்த மனிதர்களுக்கு ஊட்டிவிட்டார்கள். அதேபோல் மற்றவர்களும் பிறருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்து ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தனர். அனைவரும் மகிழ்ச்சியோடு உணவருந்திக் கொண்டிருந்தனர். கிடைத்ததைப் பகிர்ந்து கொள்பவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள். சொர்க்கத்திலிருப்பது மகிழ்ச்சி அல்ல. மாறாக, மகிழ்ச்சியாக வாழுமிடமே சொர்க்கம். மகிழ்ச்சியாக வாழ்கின்ற நேரம் உன்னதம். மகிழ்ச்சி தனக்கு கிடைத்ததை தனக்கென்று மட்டுமே வைத்துக் கொள்வதில்லை. கிடைக்காது என்று அபகரிப்பதுமில்லை. அது கொடுத்துப் பழகுகிறது. பிறரை மகிழ்வித்து, மகிழ்கிறது. மகிழ்ச்சியாக வாழ்பவர்களால் மட்டுமே பிறருக்கு மகிழ்ச்சியைத் தர முடியும். "மகிழ்ச்சி என்பது நறுமணத் திரவியம் போன்றது. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர்கள் மேல் அதைத் தெளிக்க முடியாது'' என்கிறார் அமெரிக்க தத்துவமேதை எமர்சன். உண்மையில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கொடுப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராததை விட அதிகமாக கிடைக்கிறது.
தனித்து மகிழ்ந்தால் அது இன்பம். அது சில நிமிடங்களிலிருந்து சில காலங்கள் மட்டுமே நீடிக்கும். அது தேனைப் பருகுவது , ஒரு புதிய ஆடையை உடுத்துவது , ஒரு பெரிய வீட்டைக் கட்டி அதில் வசிப்பது போன்றது. யார் அதை அனுபவிக்கின்றாரோ அவருக்கு மட்டும் அவ்வின்பம் கிடைக்கும். ஆனால், மகிழ்ச்சி இன்பத்தின் பலபடியாக்கம். மகிழ்ச்சி என்பது ஓர் இசை நிகழ்வைக் கேட்பது போன்றது. அங்கே பாடுபவருக்கும் மகிழ்ச்சி. "வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப இல்லாத ஒருவருக்கு பகிர்ந்து கொள்வது. இவ்வாறு மகிழ்ச்சி தன்னைச் சுற்றியிருப்பவரை தன்னோடு மகிழ்விக்கும். மகிழ்வது இன்பம். பிறரை மகிழ்ச்சிப் படுத்துவதே உண்மையான மகிழ்ச்சி. "மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு, நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்.
மகிழ்ச்சி ஒரு நதியின் பயணம் போன்றது. தான் செல்லும் வழியெங்கும் பூஞ்சோலையாக்குவதைப் போல் மகிழ்ச்சியான மனிதர் தன் வாழ்க்கைப் பயணமெங்கும் மகிழ்ச்சிப்படுத்துகிறார். எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல், கடந்த காலத்தை எண்ணி கலங்காமல், அன்றைய நாளின் ஒவ்வொரு மணித்துளியையும் மகிழ்வோடே கடக்கிறார்.
மன்னர் ஒருவர் அடிக்கடி ஏற்படுகின்ற போர்களினாலும், உள்நாட்டு குழப்பங்களினாலும் மிகுந்த மனவேதனை அடைந்தார். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாகவே வாழவேண்டும் என்ற அவரது எண்ணங்கள் தவிடுபொடியாயிருந்தது. ஆன்றோர்களையும், அமைச்சர்களையும் அழைத்தார். ""வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியாகவே வாழ்வதற்கு வழி சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தனர். முடிவாக, "மனிதர்கள் பண்டிகை காலங்களிலும், சுப நிகழ்வுகளிலும், புத்தாடை உடுத்திச் செல்கின்றபொழுது, மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்கிறார்கள். ஆகவே மகிழ்ச்சியானவர்களுடைய ஆடையை அணிந்தால் மகிழ்ச்சியடையலாம்'' என்று மன்னருக்குப் பதில் அளித்தனர். "அப்படியானால் இந்த உலகில் மகிழ்ச்சியானவரின் ஆடையைக் கொண்டு வாருங்கள்'' என்று கட்டளையிட்டார் மன்னர்.
நாலாபுறமும் படைகளும், தூதுவர்களும் பறந்தனர். நாட்டில் இருக்கின்ற பணக்காரர்கள், செல்வந்தர்கள், குறுநில மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள் என அனைவரையும் சந்தித்தனர். அனைவரிடமும் செல்வ வளங்கள் நிறைந்திருந்தாலும், அவர்களிடம் கவலை ரேகைகள் முகங்களில் பளிச்சிட்டன. ""நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை'' என்று அவர்கள் உரத்த குரலில் பதிலளித்தனர். ஆடை தேடிச் சென்றவர்கள் சாட்டையடி படாமல் வந்தோமே என்று திரும்பினர்.
மன்னர் மக்களுக்கு ஆணையிட்டார். "இந்த உலகில் மகிழ்ச்சியாக இருப்பவரைக் கண்டால், அவரை எனது அரசவைக்கு அழைத்து வாருங்கள்'' என்று முரசு முழங்கியது. வயல் வெளியிலே, சுடும் வெயிலிலே மகிழ்ச்சியாய்ப் பாட்டுபாடி உழுதுகொண்டிருந்த ஒருவரது பெயர் மன்னருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த கணமே மன்னர் முன் அவர் நிறுத்தப்பட்டார். உடம்பிலே இடுப்புக்கு கீழ் ஒரு வேட்டி. தோளிலே ஒரு துண்டு. மன்னர் அவரைப் பார்த்தார். "மகிழ்ச்சியானவரே! நான் உங்கள் சட்டையை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். உங்கள் சட்டையைத் தாருங்கள்'' என்றார். "மன்னா! மன்னிக்கவும். எனது வாழ்க்கையில் இதுவரை நான் சட்டையே அணிந்ததில்லை'' என்றார் உழவர். உலகத்திலேயே மகிழ்ச்சியாய் இருப்பவருக்கு சட்டை இல்லை என்ற உண்மை அமைச்சரவையின் தீர்மானத்தை சுட்டுப் பொசுக்கியது.
அணிகலன்களை ஆடையாக்கினாலும், ஆடம்பரத்தை வாழ்க்கையாக்கினாலும், வாழ்க்கை பூஜ்ஜியமாகும். ஏனெனில், மகிழ்ச்சி விலைமதிப்பில்லாதது. அதை விலையுயர்ந்த பொருட்களால் வாங்கி விட முடியாது. அரண்மனைகள் மகிழ்ச்சியைத் தருவதில்லை. அருமையான மனமே மகிழ்ச்சியைத் தருகிறது.
உண்மையில் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு பொருள் முக்கியமல்ல. செல்வம் முக்கியமல்ல. அணிகின்ற அணிகலன் முக்கியமல்ல. மகிழ்வான உணர்வுதான் முக்கியம். மகிழ்ச்சியைத் தேடி ஓடவேண்டியதில்லை. அது உண்மையாக உழைப்பவனின் கரத்திலும், புதிதாய் சிந்திப்பவனின் உள்ளத்திலும் நிறைந்திருக்கும்
மனிதப் பிறவியின் நோக்கமே மகிழ்வோடு வாழ்வதுதான். உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தற்பொழுது வாழ்கின்ற வாழ்க்கையைவிட இன்னும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவிட முடியும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியைத் தள்ளிப் போடுபவர்கள், வாழ்வின் ரகசியத்தை அறியாதவர்கள். "உங்களை நீங்களே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் நினைப்பதை விட காலம் உங்களுக்கு குறைவாக உள்ளது'' என்ற சீனமொழியின் வரிகள் அவ்வப்போது அனைவரின் கண்களில் படுமாறு எழுதி வைத்துக் கொள்ளுதல் நலம்.
மகிழ்ச்சியாக வாழ்ந்தால் வாழ்க்கை அழகு!
மகிழ்ச்சிப்படுத்தினால் வாழ்க்கை புனிதம்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓ சுகுமாரி படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

என் இனிய தமிழ் மக்களே! கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட விடியோ | CJP

மகளிர் உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து!

உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



